உல்லாச கப்பல்களும், அதன் திரைமறைவு ரகசியங்களும்... !!

By Saravana

பிரம்மாண்டம், சொகுசு, உன்னத அனுபவம் என உல்லாச கப்பல் பயணம் என்பது பூலோகத்தின் சொர்க்கமாகவே கருதப்படுகிறது. கடலில் மிதக்கும் சிறு நகரங்களாக உலா வரும் உல்லாச கப்பல்களில் பயணிப்பது பலருக்கும் வாழ்நாள் இலக்காகவும், கனவாகவும் இருக்கிறது.

இந்த நிலையில், உல்லாசக் கப்பல்களில் இருக்கும் வசதிகள், அதன் வடிவம், அதன் எஞ்சின் பற்றிய தகவல்களை இதுவரை படித்திருப்பீர்கள். இன்று, இந்த உல்லாசக் கப்பல்களில் மறுபக்கத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்த தகவல்களை காணலாம்.

 01. பிணவறை

01. பிணவறை

உல்லாசக் கப்பல்களில் பயணிக்கும் பெரும்பாலானோர் நடுத்தர வயதை கடந்த அல்லது முதியவர்களே அதிகம். ஆயிரக்கணக்கானவர்களில் பாதிக்கும் மேற்பட்ட முதியவர்கள் பயணிக்கும் உல்லாச கப்பல்களில் மரணங்களும் சர்வசாதாரணம். ஆம், இதற்காகவே உல்லாச கப்பல்களில் பிணவறைகள் உண்டு. ஒன்றிலிருந்து மூன்று உடல்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான வசதி கொடுக்கப்பட்டிருக்கும். சில சமயம், ஹெலிகாப்டர் மூலமாகவும், சில சமயம், அடுத்து வரும் துறைமுகம் வழியாக இறந்தவர்களின் உடல்கள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

02. தொற்று நோய்

02. தொற்று நோய்

நூற்றுக்கணக்கில் அல்லது ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் உல்லாச கப்பல்களில் தொற்று நோயும் எளிதில் பரவும் அபாயம் உண்டு. இதனாலேயே, உல்லாசக் கப்பல்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தினசரி அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதுண்டு. மேலும், உல்லாசக் கப்பல்களில் பயணிக்கும் பலருக்கும் தண்ணீரால் வைரஸ் தொற்று ஏற்படுவது சகஜமானதாக இருக்கிறது. 2013ம் ஆண்டு நோரோவைரஸ் தொற்று காரணமாக, இரண்டு உல்லாசக் கப்பலில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட அறையில் தனியாக வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

03. மாசு அதிகம்

03. மாசு அதிகம்

உலகிலேயே அதிக புகையை வெளித்தள்ளி மாசு ஏற்படுத்துவதில் உல்லாசக் கப்பல்களுக்கும் முக்கிய பங்குண்டு. மேலும், எரிபொருளை உறிஞ்சித்தள்ளுவதிலும் அசுர குணம் கொண்டவை. ஆம், ஒரு மைல் தூரம் செல்வதற்கு சில கப்பல்களுக்கு 400 லிட்டர் வரை எரிபொருள் தேவைப்படும். நாள் ஒன்றுக்கு 433 டன் எரிபொருள் செலவிடப்படுமாம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் ஆய்வுகளின்படி, 3,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதி கொண்ட உல்லாசக் கப்பல் வாரத்திற்கு தோராயமாக 8,00,000 லிட்டர் கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறதாம். இந்த கழிவுப்பொருட்கள் கரையிலிருந்து 5 கிமீ தொலைவில் கடலிலேயே கரைக்கப்படுகிறது. இதனால், உல்லாச கப்பல்கள் அதிகம் புழங்கும் கடல் பிரதேசங்கள் மிக மோசமான அளவு பாதிக்கப்படுகிறதாம்.

04. கடல் கொள்ளையர்கள்

04. கடல் கொள்ளையர்கள்

இந்திய பெருங்கடலை ஒட்டிய சோமாலியா கடல் பிரதேசத்தில் கடற்கொள்ளையர்களின் தொல்லை மிக அதிகம். எந்திர துப்பாக்கிகள், ராக்கெட்டுகளுடன் உல்லாச கப்பல்களை மறித்து பயணிகளிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பதும் நடக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் சோனிக் கேனான் எனப்படும் கருவியின் மூலமாக எழுப்பப்படும் ஒலி, காது கேட்கும் திறனையே முடக்கிவிடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த கடல் வழித்தடத்தில் செல்லும் கப்பல்கள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் செல்கின்றன.

05. நிரந்தர விருந்தினர்கள்

05. நிரந்தர விருந்தினர்கள்

பிள்ளைகளின் பாராமையும், முதுமையும் பலருக்கு உதவியும், சேவையும் நிறைந்த இடம் தேவைப்படுகிறது. அதுபோன்றவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் உல்லாசக் கப்பல்கள்தான். ஆம், பல பெரும் கோடீஸ்வரர்கள் உல்லாச கப்பல்களில் நிரந்தரமாக தங்கிவிடுகின்றனர். மருத்துவ சேவை, பொழுதுபோக்கு, உணவு என அனைத்திற்கும் சிறந்த இடமாக இருப்பதே இதற்கு காரணம்.

06. பதிவு

06. பதிவு

பெரும்பாலான கப்பல்கள் பனாமா மற்றும் லைபீரியாவில் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு காரணம், அங்கு மாசுக் கட்டுப்பாடு மற்றும் மனித உரிமைகளுக்கான கட்டுப்பாடுகள் குறைவு. ஆனால், பல மேலை நாடுகளில் இதற்கான கட்டுப்பாடுகள் அதிகம். அதேபோன்று, கப்பலில் வேலை செய்வோர் நல்ல சம்பளம் வாங்குவதாக ஒருபுறம் இருந்தாலும், சில கப்பல்களில் சில பணிகளுக்கு கொத்தடிமைகள் போல குறைவான ஊதியத்தில் பணியாற்றுகின்றனராம். வாரத்திற்கு 80 மணிநேரம் வேலை பார்த்தால் 50 டாலர் மட்டுமே சம்பளம் கொடுத்து அடிமை போல நடத்தப்படும் சம்பவங்களும் உண்டு. சாப்பாடு, சீருடை போன்றவற்றை கொடுத்து ஏஜென்ட்டுகள் மூலமாக இந்த ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

07. பெரிய கப்பல்

07. பெரிய கப்பல்

உலகின் மிகப்பெரிய உல்லாசக் கப்பல்களை அமெரிக்காவை சேர்ந்த ராயல் கரிபீயன் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் இயக்கி வருகிறது. சமீபத்தில் அந்த நிறுவனம் டெலிவிரி பெற்ற ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பல்தான் உலகிலேயே மிகவும் பெரிய உல்லாசக் கப்பல். நான்கு கால்பந்து மைதானம் அளவுக்கு நீளமும், 16 அடுக்குகள் கொண்ட மாடி கட்டடத்தின் இணையான உயரம் கொண்டது இந்த கப்பல். 6,000க்கும் அதிகமான பயணிகள், 2,000க்கும் அதிகமான பணியாளர்களுடன் பயணிக்கும் வசதி கொண்டது.

 08. கோஸ்டா கான்கார்டியா

08. கோஸ்டா கான்கார்டியா

2012ம் ஆண்டு இத்தாலி நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான கோஸ்டா கான்கார்டியா என்ற உல்லாச கப்பல் இத்தாலியின் மேற்கு கடற்பகுதியில் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, கப்பலில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக, தண்ணீர் உள்ளே புகுந்து கப்பல் கவிழத் துவங்கியது. கப்பலில் 3,229 பயணிகளும், 1,023 பணியாளர்களும் இருந்தனர். 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கப்பலில் இருந்த பெரும்பாலானோர் மீட்கப்பட்டனர். ஆனால், இந்த விபத்தில் 30 பேரின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டதுடன், 2 பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டது. விசாரணையில், அந்த கப்பல் விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டது. மேலும், கப்பலில் இருந்த நடன அழகிக்கு தன்னுடைய கப்பல் செலுத்தும் வல்லைமையை காட்டுவதற்காக, கப்பல் கேப்டன் விதிகளை மீறி கப்பலை செலுத்தியதால்தான் விபத்து நடந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து, கப்பல் கேப்டன் உள்பட 5 மாலுமிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. குறைந்தது 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

09. உவ்வே...

09. உவ்வே...

கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார்னிவல் டிரையம்ஃப் என்ற உல்லாச கப்பல் மெக்ஸிகோ நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த கப்பலின் எஞ்சின் அறையில் தீப்பற்றியது. யாருக்கும் சிறு பாதிப்பு இல்லாமல், உடனடியாக, அந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். ஆனால், அந்த கப்பலின் எஞ்சின் செயலிழந்து, நடுக்கடலில் தத்தளித்தது. இதையடுத்து, பார்ஜர் என்ற இழுவை படகுகளின் உதவியுடன், அந்த கப்பல் அமெரிக்காவிற்கு திருப்பி இழுத்து வரப்பட்டது. ஆனால், இதற்கு 5 நாட்கள் ஆகிவிட்டது. இந்த தருணத்தில் கப்பலின் அறையில் இருந்த ஏசி சாதனங்கள் வேலை செய்யவில்லை. கழிவறைகள் சுத்தப்படுத்த முடியாமல் கப்பலே நாறிப் போய்விட்டது. வெயில் கொடுமையிலும், உணவுத் தட்டுப்பாடு காரணமாகவும், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கு கார்னிவல் கப்பல் நிறுவனம் வருத்தம் தெரிவித்தாலும், அந்த நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு வெகுவாக சரிந்து போனது.

10. அதிர்ச்சி தகவல்

10. அதிர்ச்சி தகவல்

உல்லாசக் கப்பல்களில் பயணிப்போரில் பலர் காணாமல் போகும் சம்பவங்களும் இங்கு சர்வசாதாரணமாக இருக்கிறது. கடந்த 2000வது ஆண்டிலிருந்து இதுவரை 200 சம்பவங்கள் நடந்துள்ளனவாம். கப்பலிலிருந்து லக்கேஜை திரும்ப எடுக்காத போதுதான், காணாமல் போனவர் பற்றிய விஷயமே தெரிய வருகிறதாம். சிலர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கருதப்படுகிறது. சிலர் அதிக அளவு மது அருந்தி கடலில் விழுந்து இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
10 Insane Facts About Cruise Ships
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X