தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் 25,000 பெட்ரோல் பங்குகளுக்கு ஞாயிறுகளில் விடுமுறை!

Written By:

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல், டீசல் பங்குகளுக்கு வரும், மே 14-ம் தேதிக்கு பிறகு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என்று இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்களாக பெட்ரோலியம் டீலர்கள் தங்களுக்கான கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதுதொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையில் அரசு எடுக்கவில்லை என்பதால் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயனன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 55,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்படுகின்றன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் 95 சதவீத பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல், டீசல் வழங்கி வருகின்றன. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே தனியார் டீலர்கள் இயக்கும் பங்குகள் செயல்பட்டு வருகின்றன.

இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் கீழ் இயங்கும் 25,000 பெட்ரோல் டீசல் பங்குகள் இந்த முடிவினால் தங்கள் பங்குகளை ஞாயிற்றுக்கிழமைகளில் அடைக்க உள்ளதாக தெரியவருகிறது.

மே 14-ம் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் அறிவிப்பு அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது.

இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் கீழ் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தான் 25,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மே மாதம் முதல் நாள் ஒன்றிற்கு 8 மணி நேரம் மட்டுமே பங்குகளை இயக்கவும் இந்த அமைத்து திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் இந்த முடிவையும் எடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

‘அனைத்து இந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பு' என்ற மற்றொரு கூட்டமைப்பினர் தங்களுக்கும் கமிஷன் தொகை அதிகரிப்பு கோரிக்கை உள்ளது என்றாலும், நாங்கள் இந்த முடிவில் உடன்படவில்லை என்றும் தங்களிடம் உறுப்பினர்களாக உள்ள டீலர்களின் பெட்ரோல் பங்குகள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் அஜய் பன்சால் கூறினார்.

பெட்ரோலியம் டீலர்களின் மாறுபட்ட இந்த அறிவிப்பு மக்களை குழப்புவதாக அமைந்துள்ளது. எனினும் அரசு இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குகளை அடைக்கும் டீலர்களின் முடிவு உறுதியாக செயல்படுத்தப்படுமானால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 25,000க்கும் மேற்பட்ட டீலர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ள தென் மாநிலங்களே அதிகம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாதத்திற்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இனி பெட்ரோல், டீசல் விலை தங்கம் போல தினமும் மாற்றியமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about 25,000 petrol pumps to shut shop on Sundays from 14 May
Please Wait while comments are loading...

Latest Photos