விமான விபத்துகளும், மாயங்களும்... அவற்றின் அவிழாத மர்மங்களும்...!!

By Saravana

239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. அரிதிலும், அரிதான இந்த சம்பவம் உறவினர்களையும், உலகத்தினரையும் பதைபதைப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சேட்டிலைட் யுகத்தில், தொழில்நுட்ப சவாலாக நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் விமானத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சல்லடை போட்டு தேடியும் இதுவரை ஒரு துரும்பு கூட கையில் அகப்படவில்லை.

இந்த நிலையில், சேட்டிலைட் யுகத்திலும் ஏராளமான விமான விபத்துக்கள் நடந்துள்ளன. அதில், சில விமான விபத்துக்களுக்கான காரணங்கள் இதுவரை முழுமையாக கண்டறியப்படாமலும், மாயமான விமானங்களில் இருக்கும் மர்ம முடிச்சுகளும் இதுவரை அவிழ்க்கப்படாமலேயே உள்ளன. அதுபோன்ற, மாயங்களும், மர்மங்களும் நிறைந்த சில விமான விபத்துக்கள் மற்றும் காணாமல் போன சம்பவங்களை காணலாம்.

2009: ஏர் பிரான்ஸ் ஃப்ளைட் 447

2009: ஏர் பிரான்ஸ் ஃப்ளைட் 447

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமாகி 3 வாரங்கள் ஆன நிலையில், நாம் பதைபதைப்புடன் ஏதாவது நல்ல தகவல் வராத என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறோம். இதேபோன்று ஒரு விமான விபத்து 2009ம் ஆண்டு மே 31ந் தேதி நிகழ்ந்தது. ரியோ டி ஜெனிரோ நகரிலிருந்து பாரீஸ் நோக்கி புறப்பட்ட ஏர்பஸ் ஏ330 விமானம் சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்தது. விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்பட்ட பகுதியில் மிகப்பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பிரயோஜனம் இல்லை. இந்த நிலையில், 2 ஆண்டுகள் கழித்து 2012ம் ஆண்டில், அந்த விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பயணித்த 228 பேரும் இறந்துவிட்டனர். ஆட்டோபைலட் சிஸ்டம் செயல் இழந்ததால், விமானம் கடலுக்குள் பாய்ந்து விபத்து நிகழ்ந்ததாக விசாரணை மேற்கொண்ட பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2003: போயிங் 727

2003: போயிங் 727

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு விமானம் மாயமான சம்பவத்திலும் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை. 2003ம் ஆண்டு அங்கோலா தலைநகர் லுகாண்டாவில் நிறுத்தப்பட்டிருந்த போயிங் 727 விமானம் திருடிச் செல்லப்பட்டது. குவாட்ரோ டி ஃபெவரெய்ரோ விமான நிலையத்திலிருந்து புர்கினா ஃபாஸோவுக்கு புறப்பட்ட போயிங் 727 விமானம் அதன்பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. அமெரிக்க உளவுத் துறை உலக அளவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையும் தோல்வியில் முடிந்தது. இந்த நாள் வரை இந்த விமானத்தை பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை. அதில், விமான பொறியாளர் உள்பட 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

1999 எகிப்து ஏர் ஃப்ளைட் 990

1999 எகிப்து ஏர் ஃப்ளைட் 990

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கெய்ரோவிலிருந்து நியூயார்க் புறப்பட்டு சென்ற எகிப்து ஏர் ஃப்ளைட் 990 விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியது. 14,000 உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென வெறும் 36 வினாடிகளில் கடலுக்குள் பாய்ந்து விபத்தில் சிக்கியது. இது விமான பொறியாளர்களுக்கு கடும் சவாலான விஷயமாக பட்டது. முடிவில், விமானி அல்லது துணை விமானி தற்கொலையால் விமானம் கடலுக்குள் செலுத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொழில்நுட்பக் கோளாறு என எகிப்து அறிவித்தது. இதுவரை இன்ன காரணத்தால்தான் விமானம் விபத்தில் சிக்கியது என்பதை யாரும் திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை. உலகின் பயங்கர விமான விபத்துக்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் இதில், 217 பேர் உயிரிழந்தனர்.

1996 டிடபிள்யூஏ ஃப்ளைட் 800

1996 டிடபிள்யூஏ ஃப்ளைட் 800

230 பயணிகளுடன் நியூயார்க் நகரிலிருந்து பாரீஸ் நோக்கி புறப்பட்ட போயிங் 747 விமானம் சிறிது நேரத்தில் நடுவானில் வெடித்து சிதறியது. ஏவுகணை மூலம் இந்த விமானத்தை தீவிரவாதிகள் தகர்த்திருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையம் அறிவிக்கையில், இந்த விமானம் மின்கசிவு காரணமாக நடந்ததாக அறிவித்தது. இந்த விபத்திலும் உண்மையான காரணங்கள் வெளியிடப்பவில்லை என்று விமானத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1988 'பான்- ஆம்' விமானம்

1988 'பான்- ஆம்' விமானம்

1988ம் ஆண்டு அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமான பாம்- ஆம் நிறுவனத்தின் பிராஃங்பர்ட்டிலிருந்து லண்டன் வழியாக நியூயார்க் செல்லும் விமானம் நடுவானில் தகர்க்கப்பட்டது. இந்த விமானத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அமெரிக்கப் பிரிவு தலைவர் ஜேம்ஸ் ஃபுல்லர் மற்றும் பல முக்கிய விவிஐபி.,கள் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு ஸ்காட்லாரந்து மேலே 31,000 அடி உயரத்தில் பறந்தபோது வெடுகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்டது. இந்த விபத்தில் 259 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தை லிபிய உளவுத் துறை திட்டமிட்டு தகர்த்தகா கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த விமானத்தை ஈரான் உளவுத்துறைதான் தகர்த்ததாக புதிய தகவல்கள் கூறுகின்றன. மர்ம முடிச்சுகள் அவிழாத விமான விபத்துக்களில் இதுவும் ஒன்று.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X