யூடியூப்பில் டிரைவிங் பயின்று 4 வயது தங்கையுடன் 2 கிமீ கார் ஓட்டிய 8 வயது சிறுவன்..!

Written By:

யூடியூப்பில் டிரைவிங் பயின்ற 8 வயது சிறுவன் ஒருவன், தான் பயின்ற டிரைவிங் திறனை சோதித்துப் பார்க்க தன் 4 வயது தங்கையை ஷாப்பிங் செய்ய காரில் அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பம் வளர்ந்து வருவது மனித சமூகத்தில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்த மாற்றங்களில் நல்லதும், தீயதும், ஆபத்தானதும் கலந்தே இருக்கிறது. ஆனால் தற்போது நாம் காண இருக்கும் சம்பவம் இதில் எந்த ரகம் என்பதனை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகானத்தின் கிழக்கு பாலத்தீன் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் சமீபகாலமாக யூடியூப்பில் கார் ஓட்டுவது குறித்து பயின்று வந்துள்ளான்.

இந்நிலையில் தான் கற்று வந்ததை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்துள்ளான் அச்சிறுவன். ஒரு நாள் வேலைக்குக் சென்று திரும்பிய சிறுவனின் தந்தை சீக்கிரமே அயர்ந்து தூங்கிவிட்டார். இதனை சாதகமாக்கி அவரின் காரை ஓட்டிவிட முடிவு செய்துள்ளான்.

சிறுவனும், அவனது தங்கையும், அவனது தாயும் ஒரே அறையில் தூங்கியுள்ளனர். தந்தையை போல அவனது தாயாரும் விரைவிலேயே தூங்கிவிட்டதை அறிந்த சிறுவன், வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் தனது தந்தையின் காரை ஓட்டிப் பார்க்க இதுவே சிறந்த தருணம் என உணர்ந்துள்ளான்.

பெற்றோர் இருவரும் தூங்கிவிட்டதை உறுதி செய்துகொண்டு, தந்தையின் கார் சாவியை எடுத்த சிறுவன், சீஸ்-பர்கர் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தன் தங்கையையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளான்.

காரை ஆன் செய்து தன் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிமீ தூரம் பயணம் செய்து மெக்டொனால்ட்ஸ் உணவு விடுதிக்கு, தன் தங்கையுடன் சென்று சேர்ந்துள்ளான் சிறுவன்.

முன்பக்க இருக்கையில் தங்கையை அமர வைத்துக்கொண்டு மெக்டொனால்ட்ஸ் உணவு விடுதியின் டிரைவ்-இன் பகுதியில் சென்று பர்கர் ஆர்டர் செய்த சிறுவனின் செயலை கண்ட கடை ஊழியர்கள், நகைச்சுவைக்காக பெற்றோர்கள் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஏமாற்றுவதாகவே எண்ணி பர்கரை கொடுத்துள்ளனர்.

இந்த சமயத்தில் அங்கு உணவு அருந்திக்கொண்டு இருந்த சிறுவனின் குடும்ப நண்பர் ஒருவர் இதுகுறித்து சிறுவனின் குடும்பத்தினருக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளார். காவல்துறையினர் வந்து விசாரித்த போது தான் நடந்த சம்பவம் தெரியவந்தது.

சுமார் 2 கிமீ தூரத்தை கடந்து எந்தவித ஆபத்தும் இன்றி சிறுவன் கார் ஓட்டி வந்தது தெரிந்து அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

வீட்டிலிருந்து மெக்டொனால்ட்ஸ் வரை சிறுவன் 4 சிக்னல்கள், ஒரு ரெயில்வே கிராசிங், சில வலது புற மற்றும் இடப்புற திருப்பங்களை வெற்றிகரமாக கடந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறுவன் கார் ஓட்டியதை பார்த்த சிலர் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றி, சரியான வேகத்தில் அவன் கார் ஓட்டியதை வியப்புடன் பார்த்ததாகவும் தெரிவித்தனர். காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு சிறுவன் செய்த செயல் நிச்சயம் பேரதிர்ச்சியை கொடுத்திருக்கும் ஏனெனில் அவர்களுக்கு தான் கார் ஓட்டுவது எவ்வளவு சிரமம் என்று நன்றாக புரியும்.

எனினும் 8 வயது சிறுவன் யூடியூபில் டிரைவிங் பயின்று, முதல் முயற்சியிலேயே அற்புதமாக கார் ஓட்டிச் சென்றுள்ளது சிறுவனின் அபார ஆற்றலை வெளிக்கொண்டுவந்தாலும், இதைப் போல வேறு சில ஆபத்தான வழிகளையும் சிறுவர்கள் கண்டறிய தொழில்நுட்பம் வாய்ப்பளிக்கிறது என்பது கவலையளிப்பதாக உள்ளது.

English summary
Read in Tamil about 8 year old kid learns driving in youtube and takes his 4 year old sister to mcdonalds for burger.
Please Wait while comments are loading...

Latest Photos