நடிகர் ஜெய் ஒரு கார் பந்தய வீரர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்??

Written By:

ஜெய் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஜெய் சம்பத்குமார் கோலிவுட்டின் இளம் நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். சினிமாத்துறையில் கீபோர்டு இசைக்கலைஞராக அடியெடுத்து வைத்து பின்னர் நடிகராக உயர்ந்தவர்.

2002ல் வெளிவந்த பகவதி படத்தில் நடிகர் விஜய்யின் தம்பியாக நடிப்புத்துறையில் அறிமுகமாகி சுப்பிரமணியபுரம், சென்னை 28, கோவா, ராஜா ராணி என தொடந்து வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளம் தேடிக்கொண்டார்.

இவர் நடிகர் அஜித் பாணியில் நடிகராக இருந்துகொண்டே கார் பந்தயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2014ல் சிறியளவிலான கார் பந்தயங்களில் கலந்து கொண்டவர் தற்போது அத்துறையில் ஜொலிக்கத் தொடங்கியுள்ளார்.

சிறுவயது முதலே கார் பந்தய வீரர் ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்த ஜெய் தற்போது ஃபார்முலா 1600 பிரிவு பந்தயத்தில் கலந்துகொண்டு வருகிறார்.

நடித்துக்கொண்டே கார் பந்தயங்களில் ஈடுபடுவது சிரமம் என்றாலும், இரண்டிற்கும் முக்கியத்துவம் அளித்து சம அளவில் பயணித்து வருவதாக ஜெய் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி இந்திய கார் பந்தய வீரர் அப்துல்லாவை சந்தித்த பின்னரே கார் பந்தய வீரராக மாறுவதற்கான வாய்ப்புகள் உறுதியானதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெய்யின் கார் பந்தய வீரர் கணவு நனவாகியதில் பெரும்பங்கு ஆற்றியது பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்றால் மிகையாகாது. தற்போது நடிகர் ஜெய்க்கு அவரே ஸ்பான்சராகவும் இருந்து வருகிறார். இருவரும் சிறந்த நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார் பந்தயங்கள் குறித்த நுணுக்கங்களை நடிகர் ஜெய் முன்னாள் ஃபார்முலா-1 கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனிடம் கேட்டுப் பெறுகிறார்.

நடிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருவதால் ஜெய், நேரடியாக கார் பந்தய பயிற்சியில் ஈடுபடமுடியாத நேரத்தில் ஸிமுலேடர்களில் பயிற்சி எடுத்து வருகிறார்.

தற்போது கார் பந்தயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள ஜெய், மேலும் வளர்ச்சி அடைய அதிக வெற்றிகளை குவிப்பது அவசியம் என்றும் கூறுகிறார்.

கார் பந்தயத்தை பொறுத்தவரையில் நடிகர் ஜெய்க்கு முன்மாதிரியாக விளங்குவது ஜெர்மனியைச் சேர்ந்த தற்போதைய ஃபார்முலா-1 பந்தய உலகச் சாம்பியன் நிகோ ராஸ்பெர்க் தான்.

நிகோ ராஸ்பெர்க்கின் தீவிர ரசிகராகவும் நடிகர் ஜெய் உள்ளார். கோவை, சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் பந்தயங்களில் பங்குகொண்டு சிறப்பான நிலையில் பந்தயங்களை நிறைவு செய்திருக்கிறார் ஜெய்.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை இருங்காட்டுக்கோட்டையில் நடந்த ஜேகே டயர் தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் கார் பந்தயத்தில் கலந்துகொண்டார் நடிகர் ஜெய்.

கார் பந்தய வீரராக வேண்டும் என்ற கனவை அடைய முனைந்தாலும், சினிமாவையும் விடப் போவதில்லை என்று கூறுகிறார். இரண்டிலும் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

நடிகர் ஜெய்க்கு நமது டிரைவ் ஸ்பார்க் குழுவினர் சார்பாக வாழ்த்துக்கள்..

English summary
Read in Tamil about actor jai turned to a professional car racer
Please Wait while comments are loading...

Latest Photos