சிங்கம் பட இயக்குனர் ஹரிக்கு விலை உயர்ந்த கார் பரிசளித்த நடிகர் சூர்யா!!

Written By:

திரைப்பட துறையில் உடன் பணியாற்றியவர்களை நன்றி பாராட்டும் விதத்தில், விலை உயர்ந்த கார் பரிசளிப்பதை நடிகர்களும், தயாரிப்பாளர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் ஒரு மன நிறைவு. அந்த வகையில், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிங்கம்-3 பட இயக்குனர் ஹரிக்கு அந்த படத்தின் நாயகன் சூர்யா விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

சிங்கம் திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெற்றியை பதிவு செய்த நிலையில், அதன் மூன்றாம் பாகமும் சமீபத்தில் வெளிவந்து கலெக்ஷனில் சக்கை போட்டு போட்டு வருகிறது. இந்த மூன்று படங்களிலுமே சூர்யாவை கதாநாயகனாக பயன்படுத்தினார் இயக்குனர் ஹரி.

இந்தநிலையில், தொடர்ந்து மூன்று படங்களிலும் தன்னை ஹீரோவாக பயன்படுத்தியதற்கும், சிங்கம் வரிசை படங்களின் வெற்றிக்கும் உரித்தான இயக்குனர் ஹரிக்கு நன்றி நவிலும் வகையில், புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை பரிசாக வழங்கி உள்ளார் நடிகர் சூர்யா.

இயற்கையிலேயே கார் ஆர்வலரான நடிகர் சூர்யா பல விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், அவர் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை இயக்குனர் ஹரிக்கு தேர்வு செய்து வழங்கியிருக்கிறார். இந்த எஸ்யூவியில் இருக்கும் சில முக்கிய சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரம்மாண்ட உருவமும், ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் தோரணையும் அனைவரையும் கவர்ந்த விஷயம். சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் எஸ்யூவி வடிவமைப்பிலும், வசதிகளிலும் நவீன யுக மாடலாக மெருகேற்றப்பட்டு வந்துள்ளது.

இந்த எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட், பகல்நேர விளக்குகள், வலிமையான பம்பர், பெரிய க்ரோம் பட்டைக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் பனி விளக்குகள் என முகப்பு அமைப்பு முற்றிலும் மாறியிருக்கிறது.பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகளும், க்ரோம் பட்டையும் கவர்ச்சியாக இருக்கின்றன. மேலும், பின்புற டெயில் கேட் தானியங்கி முறையில் திறந்து மூடும் வசதி கொண்டது.

இன்டீரியர் மிகவும் பிரிமியமாக மாறியிருக்கிறது. டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதி, ஸ்டார்ட் ஸ்டாப் வசதி என தொழில்நுட்ப வசதிகள் நிரம்பியிருக்கின்றன. பின் இருக்கை பயணிகளுக்கு வசதியாக ரியர் ஏசி வென்ட்டும் உள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.7 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க்கையும் வழங்கும்.

டீசல் மாடலில் இருக்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 360என்எம் டார்க்கையும் வழங்கும். பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கிளேசியர் ஒயிட், சில்வர் ஸ்கை, எக்லிப்ஸ் பிளாக், கிறிஸ்டல் பியர்ல், கிராஃபைட், ஃபான்டம் பிரவுன் மற்றும் நெபுலா புளூ ஆகிய 7 விதமான வண்ணங்களில் வந்துள்ளது. அதில், வெள்ளை வண்ண ஃபார்ச்சூனர்தான் இயக்குனர் ஹரிக்கு சூர்யா வழங்கி உள்ளார்.

பாதுகாப்பு வசதிகளுக்கும் குறைவில்லை. இந்த காரில் 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், அதிக தரைப்பிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், அதிக நிலைத்தன்மையை வழங்கும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் சென்சார், சரிவான சாலைகளில் கார் பின்னோக்கி நகர்வதை தடுக்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளுடன் வந்துள்ளது.

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் ரூ.25.92 லட்சம் முதல் ரூ.27.61 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.27.52 லட்சம் முதல் ரூ.31.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

சரி,சூர்யாவின் கார், பைக் ஆர்வத்தையும் பார்த்துடுவோமே!

கோயம்புத்தூரில் நடிகர் சூர்யா முதன்முறையாக மோட்டார்சைக்கிள் ஓட்ட பழகினார்.

தனது மாமா வைத்திருந்த யெஸ்டி பைக்கில்தான் முதன்முறையாக ஓட்டுவதற்கு பழகியிருக்கிறார். 

கல்லூரியில் படிக்கும்போது யமஹா ஆர்எக்ஸ்-100 பைக்கில் சுற்றியிருக்கிறார். தனது தம்பி கார்த்திக் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக வாங்கிக் கொடுத்த யமஹா ஆர்எக்ஸ்-100 பைக்கைதான் அவர் கல்லூரி நாட்களில் பயன்படுத்தியுள்ளார்.

தனது சம்பளத்தில் சொந்தமாக வாங்கிய முதல் பைக் டிவிஎஸ் ஸ்டார். ஸ்டார் பைக் வாங்கியது மட்டுமல்ல அந்த பைக்குக்கான விளம்பர படத்திலும் நடித்திருக்கிறார் சூர்யா என்பது நினைவுகூறத்தக்கது.

டிவிஎஸ் அப்பாச்சி இளைஞர்களின் கனவு பைக்குகளில் ஒன்றான டிவிஎஸ் அப்பாச்சியும் சூர்யாவை கவர்ந்துவிட்டது. இரண்டாவதாக, டிவிஎஸ் அப்பாச்சி பைக்கைத்தான் வாங்கியுள்ளார். சினிமாவிலும் அப்பாச்சி பைக்கை சூர்யா பயன்படுத்தியிருக்கிறார். அயன் படத்தில் அவர் டிவிஎஸ் அப்பாச்சியைத்தான் ஓட்டுவார்.

டிவிஎஸ் பைக்குகளின் தீராத காதலரான சூர்யாவுக்கு சூப்பர் பைக்குகள் மீது நீண்ட நாட்களாக ஒரு கண் இருந்தது. தனது தாகத்தை தீர்த்துக் கொள்ளும் விதமாக சூப்பர் பைக்குகளை தேர்வு செய்ய துவங்கினார். அதில், அவரது தேர்வில் இறுதி இடம் டுகாட்டி மான்ஸ்ட்டருக்குத்தான் கிடைத்தது.

சூட்டிங் இல்லாத நேரங்களில் தனது மகள் தியா, மகன் தேவ் ஆகியோரை இந்த பைக்கில் வைத்து ரவுண்டு அடிப்பது வழக்கம். மேலும், பள்ளிக்கூடத்திற்கும் தியாவை இந்த பைக்கில் கொண்டு சென்றுவிடுகிறார். கிழக்கு கடற்கரை சாலையிலும் இந்த பைக்கில் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், மிதமான வேகத்தில்தான் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய் டெரக்கன் எஸ்யூவி கார்கள் மீது சூர்யாவுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. முன்னர், ஹூண்டாய் டெரக்கன் எஸ்யூவியை பயன்படுத்தியுள்ளார்.

ஆடி க்யூ7 சினிமாவில் முன்னணி நட்சத்திரமான பின்பு ஆடி க்யூ7 காரை வாங்கி வைத்திருந்தார். நட்சத்திரங்களை போற்றி கொண்டாடி வரும் ஆடி கார் பிராண்டு கடந்த ஆண்டு 80 லட்ச ரூபாய் மதிப்புடைய ஏ7 ஸ்போர்ட்பேக் காரை பரிசாக வழங்கியது.

கல்லூரி நாட்களில் தம்பியின் பைக்கை பயன்படுத்திய சூர்யா, தனக்கு ஆடி ஏ7 கார் பரிசாக கிடைத்ததையடுத்து, தனது க்யூ7 காரை தம்பியும், நடிகருமான கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டார். சிங்கம் 3 வசூல் சிறப்பாக இருப்பதால், நிச்சயம் அவர் புதிய காருக்கு மாறினாலும் ஆச்சர்யப்படுதவதற்கில்லை.

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ள புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Actor Surya Gifts Toyota Fortuner SUV To Singam Director Hari.
Please Wait while comments are loading...

Latest Photos