ரஃபேல் போர் விமானத்தில் பறந்த அனில் அம்பானி!!

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி ரஃபேல் போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்துள்ளார்.

Written By:

பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை தளத்தில் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி நடந்து வருகிறது. இந்த விமான கண்காட்சியில் வெளிநாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுடன் வந்து பங்கேற்றுள்ளன. விமான சாகச நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த விமான கண்காட்சியின்போது ரஃபேல் போர் விமானத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் அதிபர் அனில் அம்பானி பறந்து திரும்பினார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ரஃபேல் போர் விமானத்தில் அனில் அம்பானி பறந்தார்.போர் விமானிகள் அணியும் ஜீ சூட் உடை, ஆக்சிஜன் வழங்கும் முகமூடியுடன் கூடிய விசேஷ ஹெல்மெட் போன்றவற்றை அணிந்திருந்தார். 

அவர் பயணித்த அந்த விமானம் சில சாகசங்களையும் செய்தது. மிகவும் தாழ்வாக 1,000 அடி உயரத்திலிருந்து 6,000 மீட்டர் உயரத்திற்கு செங்குத்தாக ரஃபேல் போர் விமானம் சீறிச் சென்றது. இது தவிர, பிற சாகசங்களையும் அந்த விமானம் நிகழ்த்தியது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனில் அம்பானி," உலகின் அதிநவீன போர் விமானத்தில் பறப்பது என்பது எந்தவொரு இந்தியருக்கும் பெருமை தரும் விஷயம்தான். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்த விமானத்தை தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ரஃபேல் போர் விமானம் நம் நாட்டு விமானப்படை மற்றும் கடற்படையில் ரஃபேல் விமானம் சேவையாற்ற வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். ரஃபேல் போர் விமானத்தில் அனில் அம்பானி பறந்து திரும்பியிருப்பது அவர் கூறியது போன்று பெருமையான விஷயம்தான்.

ரஃபேல் போர் விமானங்கள் ஏர் சுப்பீரியாரிட்டி என்ற வகையை சேர்ந்தது. அதாவது, வானிலிருந்து தரை தாக்குதல்கள், வான் இலக்குகளை தாக்கும் என்பதுடன், எதிரி நாட்டு வான் பகுதியையும் கட்டுப்பாட்டில் எடுக்கும் திறன் வாய்ந்தது.

ஏர் சுப்பீரியாரிட்டி போர் விமானங்களில் இருக்கும் சாதாரண ஏவுகணைகள் 37.04 கிமீ தூரத்துக்கும் அப்பால் உள்ள வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இந்த விமானங்களில் இருக்கும் நவீன ரேடார் கருவிகள் மூலமாக, எதிரியின் வான்பகுதியை எளிதாக கண்காணித்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

ரஃபேல் விமானத்தை வாங்குவது ஒரு பக்கம் பலம் என்பதுடன், அதனுடன் சேர்த்து வாங்கப்படும் இரண்டு ஏவுகணைகள் அண்டை நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆம், ரஃபேல் விமானத்தை இயக்கும் போர் விமானிகளுக்கு இஸ்ரேல் நாட்டின் அதிநவீனமான திரையுடன் கூடிய ஹெல்மெட்டும் சேர்த்து வழங்கப்படும்.

ரஃபேல் விமானத்தில் பொருத்துவதற்கான மீட்டியோர் என்ற ரகத்தை சேர்ந்த அதிநவீன ஏவுகணைகளும் வாங்கப்படுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த எம்பிடிஏ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மீட்டியோர் ஏவுகணைகள் கண்ணுக்கு புலப்படாத 100 கிமீ தூரத்துக்கும் அப்பால் உள்ள வான் இலக்குகளை துல்லியமாக அடிக்கும்.

விமானத்திலிருந்து 560 கிமீ தூரத்தில் இருக்கும் தரை இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய என்ற அதிநவீன ஏவுகணைகளும் சேர்த்து வாங்கப்படுகிறது. எதிரி நாட்டு வான் பகுதியில் நுழையாமலேயே, அங்குள்ள இலக்குகளை துல்லியமாக அடிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

ரஃபேல் விமானத்தின் மிக முக்கிய திறன்களில் ஒன்று. அணுகுண்டுகளையும் எடுத்துச் சென்று எதிரிகளின் இலக்குகளை துவம்சம் செய்யும் ஆற்றல் பெற்றது. இதனால், எதிரி நாடுகள் தயக்கத்துடனே இந்த விமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ரபேல் போர் விமானம் 15.30 மீட்டர் நீளம், 10.90 மீட்டர் அகலம், 5.30 மீட்டர் உயரம் கொண்டது. எதிரியின் ரேடார் கண்களிலிருந்து எளிதாக தப்பும் வகையிலான வடிவமைப்பு அம்சங்களை கொண்டது.

ரபேல் போர் விமானத்தில் ஸ்நெக்மா எம்-88-2 டர்போஃபேன் என்ற இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து காலநிலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும். மேலும், ஒற்றை எஞ்சின் போர் விமானங்களை விட இது பாதுகாப்பு அதிகம் கொண்டது.

இந்த விமானத்தில் முப்பரிமான நிகழ்நேர வரைபடத்தை பெறும் வசதி இருப்பதால், இலக்குகளை சரியாக குறிவைத்து தாக்குதல் நடத்த முடியும். அனைத்து தட்பவெப்ப நிலையிலும் துல்லியமான வரைபடத்தை பெற முடியும்.

சுகோய் எஸ்யூ 30எம்கேஐ விமானத்தைவிட இது எடை மிகவும் குறைந்தது. எனவே, ஒருமுறை முழு எரிபொருள் நிரப்பினால் 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும். அதாவது, எதிரிகளின் பகுதிகளுக்குள் அதிக தூரம் பயணித்து திரும்பும் ஆற்றல் கொண்டது.

மணிக்கு 2,130 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்டது. இயல்பாக மணிக்கு 1,912 கிமீ வேகம் வரை செலுத்த முடியும். எனவே, இதனை ஏவுகணைகளை வீசி தாக்குவது என்பதும் சவாலானதாகவே இருக்கும்.

பைலட்டுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக விமானத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி உள்ளது. எந்த ஒரு சூழலிலும் பைலட்டின் கவனம் சிதறாமலும், உடல் பாதிப்பு இல்லாமலும் எதிரிகளின் எல்லைக்குள் புகுந்து விளையாடலாம்.

இந்த நிலையில், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் கட்டமாக 36 ரஃபேல் போர் விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரூ.59,000 கோடி மதிப்பில் இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளன.

ரஃபேல் போர் விமானத்தை தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ரஃபேல் போர் விமானத்துக்கு தேவையான உதிரிபாகங்களை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் தயாரித்து சப்ளை செய்ய இருக்கிறது.

எதிர்காலத்தில் கூடுதல் ரஃபேல் போர் விமானங்களுக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்தால், அவற்றை இந்தியாவிலேயே 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் அசெம்பிள் செய்யவும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. நாக்பூரில் உள்ள ரிலையன்ஸ் ஆலையில் ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திட்டமும் இருக்கிறது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் மிக்-21 மற்றும் மிக்- 27 ஆகிய போர் விமானங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து, விமானப்படையின் பலத்தை அதிகரிப்பதற்கு, ரஃபேல் போன்ற அதிநவீன பல் செயல்திறன் கொண்ட போர் விமானங்களை அவசரமாக சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்களை டிரைவ்ஸ்பார்க் கேலரியில் கண்டு ரசியுங்கள்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Anil Ambani Flies Sortie In Rafale Fighter Jet.
Please Wait while comments are loading...

Latest Photos