பெர்லின் தாக்குதல்: அதிக உயிரிழப்பை தவிர்த்த ஸ்கானியா டிரக்!

பெர்லின் தீவிரவாத தாக்குதலில் டிரக்கில் இருந்த தானியங்கி தொழில்நுட்பம் செயல்பட்டதன் மூலமாக அதிக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

Written By:

கடந்த வாரம் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் மார்க்கெட் பகுதியில் பொருட்கள் வாங்க கூடியிருந்த மக்கள் மீது டிரக்கை செலுத்தி தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான். இந்த பயங்கர தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், இந்த தாக்குதலில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதை ஸ்கானியா டிரக்கில் இருந்த தானியங்கி தொழில்நுட்பமானது தவிர்த்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, அந்நாட்டு முன்னணி மீடியாக்கள் பல முக்கியத் தகவல்களை வெளியிட்டு இருக்கின்றன.

கிறிஸ்துமஸ் மார்க்கெட்டிற்குள் அனீஸ் ஆம்ரி என்ற அந்த தீவிரவாதி ஸ்கானியா ஆர்450 என்ற செமி டிரெயிலர் ரக டிரக்கை கண்மூடித்தனமாக ஓட்டி வந்தான். மணிக்கு 60 கிமீ வேகத்தில் அந்த டிரக் கூட்டத்திற்குள் புகுந்தது.

அப்போது, பலர் டிரக் மோதியும், சக்கரத்தில் சிக்கிக் கொண்டும் காயமடைந்தனர். படுகாயமடைந்த பலர் உயிரிழந்தனர். இந்த தருணத்தில் அந்த ஸ்கானியா ஆர்450 டிரக்கில் இருந்த தானியங்கி பிரேக் சிஸ்டம் செயல்பட்டு டிரக்கை வலுக்கட்டாயமாக நிறுத்திவிட்டது. இதனால், அந்த டிரக்கை தீவிரவாதியால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை.

இதனால், அதிக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இல்லையெனில், மிக மோசமான எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் புதிய விதிமுறை ஒன்று அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

அதில், 3.5 டன் எடைக்கும் அதிகமான டிரக்குகளில் இந்த தானியங்கி பிரேக் சிஸ்டம் இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் டிரக்குகளில் தானியங்கி பிரேக் சிஸ்டம் கட்டாயம் இடம்பெற்று வருகிறது.

இதனால், சம்பந்தப்பட்ட டிரக் கூட்டத்தில் புகுந்து நாசத்தை ஏற்படுத்தியபோது, மோதும் சூழ்நிலையை சென்சார்கள் மூலமாக உணர்ந்து அந்த டிரக் தானியங்கி பிரேக் மூலமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும், அந்த டிரக் 250 அடி தூரம் கூட்டத்தினர் மீது மோதிய பின்னரே நின்றது.

இதற்கு காரணம், மோதல் ஏற்படுவதை முதலில் ஓட்டுனருக்கு தானியங்கி பிரேக் சிஸ்டம் எச்சரிக்கை கொடுக்கும். அதன்பின்னர், ஓட்டுனர் பிரேக் பிடிக்கவில்லை எனில், தானாக பிரேக் பிடித்து டிரக்கை நிறுத்திவிடும். இந்த உயரிய தொழில்நுட்பத்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

இந்த தகவலை ஜெர்மனியில் இருந்து வரும் சூடெச் ஸெயிட்டங், என்டிஆர் மற்றும் டபிள்யூஆர் ஆகிய ஊடகங்கள் வெளியிட்டு இருக்கின்றன. தற்கால சூழலில் இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து நாடுகளுக்கும் அவசியமானதாக இருக்கிறது.

தீவிரவாத தாக்குதல் என்றில்லாமல், இந்த தானியங்கி பிரேக் சிஸ்டம் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டதற்கு பின்னர், ஜெர்மனியில் முன்னால் நிற்கும் வாகனங்கள் மீது டிரக்குகள் மோதி ஏற்படும் விபத்துக்கள் மிக கணிசமாக குறைந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கானியா டிரக்கின் தானியங்கி பிரேக் சிஸ்டத்தை விளக்கும் வீடியோவை இங்கே காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Friday, December 30, 2016, 11:29 [IST]
English summary
Automatic brakes stopped Berlin truck during Christmas market attack
Please Wait while comments are loading...

Latest Photos