கார் ஒன்று, பிராண்டு இரண்டு... இந்தியாவில் ரீபேட்ஜ் மாடல்கள் பற்றிய சிறப்புத் தொகுப்பு!!

By Saravana

ஒரு குறிப்பிட்ட கார் மாடலை இரண்டு நிறுவனங்கள் விற்பனை செய்வது பற்றி அறிந்திருப்பீர்கள். இதனை பேட்ஜ் எஞ்சினியரிங் [Badge Engineering] அல்லது ரீ - பேட்ஜ் [Rebadge] மாடல் என்று குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் நீண்டகாலமாக இதுபோன்ற ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்யும் போக்கு இருந்து வருகிறது.

அதாவது, காரில் தனது நிறுவனத்தின் சின்னத்தை போட்டுக் கொள்வதோடு, சிறிய மாற்றங்களை செய்து இரு பிராண்டுகளில் விற்பனை செய்கின்றன. இந்த ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையால் கார் நிறுவனங்களுக்கு என்ன நன்மைகள், இதன் தீமைகள் என்ன என்பது குறித்தும், இந்தியாவில் பேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் இரு வேறு பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார் மாடல்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சாதகங்கள்

சாதகங்கள்

சாதகங்கள் என்பது கார் நிறுவனங்களுக்குத்தான் அதிகம். அதாவது, ஒரு கார் மாடலை உருவாக்குவதற்காக 500 கோடி முதல் 800 கோடி வரை செலவிட வேண்டியிருக்கிறது. அதேநேரத்தில், ரீபேட்ஜ் செய்வதன் மூலம் புதிய மாடலை உருவாக்குவதற்காக செலவிடப்படும் தொகையை பெருமளவு குறைக்க முடியும். சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களை செய்து, புதிய மாடலாக வெளியிடும் வாய்ப்பை பெறுகின்றனர். இதற்கு அதிகபட்சமாக 20 கோடி வரை மட்டுமே செலவாகும்.

பாதகங்கள்

பாதகங்கள்

ரீபேட்ஜ் மாடல்களுக்கு ராயல்டி தர வேண்டியிருக்கும். தவிர, வாடிக்கையாளர் மத்தியில் இரு மாடல்களை வாங்குவது குறித்த குழப்பம் ஏற்படும். மேலும், விலை நிர்ணயம் செய்வதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றைத் தாண்டி வாடிக்கையாளர்களை கவர்ந்து, விற்பனையிலும் அந்த இரு மாடல்களும் வெற்றி பெற வைப்பது பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஒரே நாட்டில் விற்பனை செய்யப்படும்போது, உண்மையான தயாரிப்பு நிறுவனத்தின் மாடலுக்கே போட்டியாக அமைந்துவிடும். அல்லது விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

பிரான்ஸ் நாட்டின் ரெனோவும், ஜப்பான் நாட்டின் நிசானும் சர்வதேச அளவில் கூட்டணி நிறுவனங்களாக செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் ஒரே பிளாட்ஃபார்மில் கார்களை உருவாக்குவது மட்டுமின்றி, ரீபேட்ஜ் மாடல்களையும் விற்பனை செய்கின்றன. இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய டிரெண்டை உருவாக்கிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியை நிசான் ரீபேட்ஜ் செய்து டெரானோ என்ற பெயரில் விற்பனை செய்கிறது. ரெனோ டஸ்ட்டரை விட கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டது. டிசைனில் சிறிய மாற்றங்கள், சற்று பிரிமியமான இன்டிரியர் போன்றவற்றுடன் டெரானோ அறிமுகம் செய்யப்பட்டது. எஞ்சினில் மாற்றங்கள் இல்லை.

நிசான் டெரானோ

நிசான் டெரானோ

இருப்பினும், டஸ்ட்டரின் விற்பனையே முன்னிலையில் இருக்கிறது. டெரானோ விற்பனை சுமாராகவே இருந்தாலும், அது நிசானுக்கு விற்பனையில் பக்கபலமாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களின் பேரில் இந்த மாடல்களின் தேர்வு அமைந்து வருகிறது. ஏனெனில், டஸ்ட்டரைவிட நிசான் டெரானோ எஸ்யூவியின் விலை ஒரு லட்சத்திற்கும் அதிகம். சற்று பிரிமியம் அம்சங்கள், தோற்றத்தில் வித்தியாசம் போன்றவை, இவை ஒரே மாடலாக இருந்தாலும், டஸ்ட்டரை விட்டுவிட்டு டெரானோவை பலர் வாங்குகின்றனர்.

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

இந்தியாவில் அதிக ரீ- பேட்ஜ் மாடல்களை விற்பனை செய்யும் கூட்டணி ரெனோ மற்றும் நிசான்தான். மஹிந்திரா கூட்டணியிலிருந்து வெளியேறிய ரெனோ இந்தியாவில் தனி ஆவர்த்தனத்தை துவங்கியபோது, நிசான் நிறுவனம்தான் கைகொடுத்தது. அதாவது, நிசான் நிறுவனத்தின் மைக்ரா காரை ரீபேட்ஜ் செய்த ரெனோ நிறுவனம் பல்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது.

ரெனோ பல்ஸ்...

ரெனோ பல்ஸ்...

எப்படி, ரெனோவின் டஸ்ட்டரைவிட நிசான் டெரானோ விலை அதிகமோ, அதே பாணியில் நிசான் மைக்ராவின் ரீபேட்ஜ் மாடலான ரெனோ பல்ஸ் விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டது. விலையிலும் ரெனோ பல்ஸ் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. மைக்ராவைவிட பல்ஸ் காரில் அதிக வசதிகளும் இடம்பெற்றிருந்ததால், வாடிக்கையாளர்கள் விலையை தாண்டி பல்ஸ் காரை வாங்கினர். ஆனாலும், அதன் விற்பனை படுமோசமாகவே இருந்து வருகிறது. இத்தோடு நிற்கவில்லை. மற்றொரு மாடலையும் இரு நிறுவனங்களும் ரீபேட்ஜ் செய்து விற்கின்றனர். அதனை அடுத்த இரு ஸ்லைடுகளில் காணலாம்.

நிசான் சன்னி

நிசான் சன்னி

வந்த புதிதில் நிசான் சன்னி செடான் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிக இடவசதி, சிறப்பான எஞ்சின் ஆகியவற்றின் மூலம், விற்பனையில் முன்னிலையில் இருந்த மாடல்களுக்கு சவால் கொடுத்தது. இதனைக் கண்ட நிசான் கூட்டாளியான ரெனோ, உடனடியாக அந்த காரையும் தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து அறிமுகப்படுத்தியது.

 ரெனோ ஸ்காலா

ரெனோ ஸ்காலா

நிசான் சன்னியின் டிசைனில் மாற்றங்களை செய்து நடுவில் பெரிதாக தனது லோகோவை போட்டு ஸ்காலா என்ற பெயரில் ரெனோ அறிமுகம் செய்தது. ஆனால், அறிமுகப்படுத்தியது முதல் இன்று வரை விற்பனையில் பெரிய சாதனைகளை எதுவும் இந்த கார் பதிவு செய்யவில்லை.

ரெனோ லோகன்

ரெனோ லோகன்

ரெனோ நிறுவனம் மஹிந்திராவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு லோகன் காரை இந்தியாவில் விற்பனை செய்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் மஹிந்திரா கூட்டணியிலிருந்து வெளியேறிய போது லோகன் காரை மஹிந்திராவுக்கே தாரை வார்த்தது.

 மஹிந்திரா வெரிட்டோ

மஹிந்திரா வெரிட்டோ

ரெனோ லோகன் காரை ரீபேட்ஜ் செய்து தனது பிராண்டில் வெரிட்டோ என்ற பெயரில் மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. மஹிந்திரா வெரிட்டோ டாக்சி மார்க்கெட்டில் ஓரளவு நல்ல விற்பனையை பதிவு செய்து வருகிறது. தனி நபர் மார்க்கெட்டில் எடுபடவில்லை.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

உலக அளவில் மாபெரும் வாகன குழுமங்களில் ஒன்றான ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் எப்போதுமே கார் உருவாக்கும் செலவை கட்டுப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் விற்பனையாகி வரும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரை மற்றொரு பிராண்டிலும் அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஸ்கோடா ரேபிட்

ஸ்கோடா ரேபிட்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் ரீபேட்ஜ் மாடல்தான் ஸ்கோடா ரேபிட். வென்ட்டோ காரைவிட பிரிமியம் அம்சங்கள் மற்றும் ஸ்கோடாவுக்குரிய தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் தனி வாடிக்கையாளர்களையும், ரசிகர்களையும் பெற்றிருக்கிறது. வென்ட்டோ காரில் இருக்கும் அதே எஞ்சின்தான் ரேபிட் காரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு

மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு

இதுவரை இந்தியாவில் ஒரே நேரத்தில் இரண்டு பிராண்டுகளில் ரீபேட்ஜ் செய்து விற்கப்படும் ஒரே கார் மாடல்களை பார்த்தீர்கள் அல்லவா? இந்த ரீபேட்ஜ் கலாச்சாரம் இன்று நேற்றல்ல... நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. அதாவது, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட வெற்றிகரமான கார் மாடல்களை அசெம்பிள் செய்யவும், அதனை ரீபேட்ஜ் விற்பனை செய்யவும் லைசென்ஸ் பெற்று சில மாடல்கள் விற்பனை செய்யப்பட்டன. அதில், இங்கிலாந்தை சேர்ந்த மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு காரை ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் இந்தியாவில் பெரும் வெற்றியை பதிவு செய்தது. அது எந்த மாடல் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையென்றால், அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

நம்ம 'அம்பிதான் அது...

நம்ம 'அம்பிதான் அது...

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் அம்பாசடர்தான் அது. மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு காரை ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த அம்பாசடர் பட்டிதொட்டியெங்கும் கால் படாத இடமில்லை. சாமானியன் முதல் சாணக்கியன் வரையிலான அனைவருக்கும் பொருத்தமான மாடலாக இருந்தது. மிக நீண்டகாலமாக விற்பனையில் இருந்த ஹிந்துஸ்தான் அம்பாசடரின் உற்பத்தி கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

டூ வீலர்களும் விதிவிலக்கல்ல...

டூ வீலர்களும் விதிவிலக்கல்ல...

நம் நாட்டின் ஹீரோவும், ஜப்பானிய நிறுவனமான ஹோண்டாவும் கூட்டணி அமைத்து செயல்பட்டது நீங்கள் அறிந்ததுதான். சில ஆண்டுகளுக்கு முன் இரு நிறுவனங்களும் பிரிந்த பின் இந்த ரீபேட்ஜ் கலையை கையிலெடுத்தன. அந்த வகையில், இளைஞர்களை வசீகரித்த ஹோண்டா ஸ்டன்னர் பைக்கை குறிவைத்து வாங்கி அதனை ஹீரோ ரீபேட்ஜ் மாடலாக வெளியிட்டது.

ஹீரோ இக்னைட்டர்

ஹீரோ இக்னைட்டர்

ஹோண்டா ஸ்டன்னரை வாங்கி ரீபேட்ஜ் செய்த ஹீரோவுக்கு இக்னைட்டர் விற்பனை எதிர்பார்த்தபடி அமையவில்லை. ஆனால், மற்றொரு விஷயத்தில் ஹீரோ புத்திசாலித்தனமாக ஒரு மாடலை ஹோண்டாவிடமிருந்து வாங்கியது. அது எந்த மாடல் தெரியுமா? அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

ஹோண்டா ஆக்டிவா

ஹோண்டா ஆக்டிவா

ஹோண்டா ஆக்டிவாவுக்கான மவுச நீங்கள் அறிந்ததே. அந்த ஸ்கூட்டரை வாங்கி ரீபேட்ஜ் செய்தால் ஸ்கூட்டர் செக்மென்ட்டிலும் கொஞ்சம் விற்பனையை பெறலாம் என்று ஹீரோ கருதியது. அவ்வாறு வெளியிடப்பட்ட மாடல் எது என்பதை அடுத்த ஸ்லைடில் பார்க்கலாம்.

 ஹீரோ மேஸ்ட்ரோ

ஹீரோ மேஸ்ட்ரோ

ஹோண்டா ஆக்டிவாவை ரீபேட்ஜ் செய்து ஹீரோ நிறுவனம் மேஸ்ட்ரோ ஸ்கூட்டராக விற்பனை செய்து வருகிறது. ஒட்டுமொத்த பாடி ஸ்டைல், எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. ஆனால், வசதிகள், டிசைன் மாற்றங்களை செய்து அவ்வாறு விற்பனை செய்து வருகிறது. ஹோண்டா ஆக்டிவா அளவுக்கு விற்பனை இல்லாவிட்டாலும், ஹீரோ மேஸ்ட்ரோ விற்பனையும் ஓரளவு நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

லாபமா?

லாபமா?

இந்தியாவில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலுக்கான வரவேற்பு மிக குறைவாக இருப்பதையும், வாடிக்கையாளர்கள் அந்த மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை என்பதும் விற்பனை எண்ணிக்கையை பார்த்தாலே புரிகிறது. ஆனாலும், குறைவான முதலீட்டில் விற்பனைக்கு பக்கபலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த ரீபேட்ஜ் கலாச்சாரத்தை கார் நிறுவனங்கள் தொடர்கதையாக்கியுள்ளன. இரு பிராண்டுகளில் வெவ்வேறு ரசனை கொண்ட வாடிக்கையாளர்களை எளிதாக ஈர்க்க முடியும் என்று கார் நிறுவனங்கள் கருதுவதும் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
We'll highlight the reasons for rebadging in the auto industry, along with its advantages and disadvantages and some examples of badge engineered models in the Indian market.
Story first published: Tuesday, May 26, 2015, 11:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X