சொகுசு கார் வாங்கும் பிரபலங்களுக்கு பெரும் தள்ளுபடி தரும் கார் நிறுவனங்கள்!

Written By:

கார் வாங்க செல்லும்போது ஒரு கூடுதல் ஆக்சஸெரீயை கட்டணமில்லாமல் பெறுவதற்கு வாடிக்கையாளர் பலர் அரும்பாடு படுகின்றனர். ஆனால், சில கார் டீலர்கள் இந்த கஜகர்ணங்களுக்கு எல்லாம் அசைந்து கொடுக்க மாட்டார்கள்.

சினிமா, கிரிக்கெட் உலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலர் சொகுசு கார்களை வாங்கி குவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுபோன்று சொகுசு கார்களை வாங்க விரும்பும் நட்சத்திரங்களை வளைப்பதற்காக சொகுசு கார் டீலர்களும், நிறுவனங்களும் தடாலடியான தள்ளுபடிகளை கொடுத்து அவர்களை வளைத்து வருகின்றனர்.

பிரபல நட்சத்திரத்தின் ஆளுமையை பொறுத்து 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடியை கார் நிறுவனங்கள் வழங்குவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, டிவி நடிகைகள், இரண்டாம் நிலை விளையாட்டு வீரர்களுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பாலிவுட் நடிகர், முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகபட்சமாக 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனா, ஒரு கண்டிஷன். தள்ளுபடி தருவதற்கு ஈடாக, காருடன் அந்த பிரபலம் படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும்.

இதன்மூலமாக, தங்களது பிராண்டை எளிதாக பிரபலப்படுத்தும் வாய்ப்பாகவும், மறைமுக விளம்பரத்தையும் கார் நிறுவனங்கள் எளிதாக பெற்று விடுகின்றன. அத்துடன், சம்பந்தப்பட்ட நட்சத்திரத்தை பிராண்டு அம்பாசடர் போன்ற பிம்பத்தையும் வாடிக்கையாளர் மத்தியில் ஏற்படுத்தி விட முடிகிறது.

மேலும், சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை கொண்ட பிரபலத்துக்கு எக்ஸ்ட்ரா தள்ளுபடி அல்லது ஆக்சஸெரீகளையும் கார் நிறுவனங்கள் வாரி வழங்குகின்றன. எனவே, சில பிரபலங்கள் இந்த டீலுக்கு சட்டென மடிந்துவிடுகின்றனராம்.

டீலர் மூலமாக இந்தளவு தள்ளுபடிடையே நேரடியாக பெற முடியாது. ஆனால், கார் நிறுவனங்களுடன் நேரடி தொடர்புடைய பிரபலங்கள் இந்த தள்ளுபடியை சுலபமாக பெற்று விடுகின்றனர்.

சில சமயங்களில் கார் டெலிவிரி வழங்குவதற்காகவே சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் கார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தங்களது பிராண்டை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. மேலும், பிற நிறுவனங்களுக்கு பிராண்டு அம்பாசடராக இருக்கும் பிரபலங்களை இதுபோன்று மறைமுகமாக தங்களது பிராண்டுக்கான விளம்பர தூதர்களாக கார் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளம்பர தூதர். ஆனால், அவர் அண்மையில் வாங்கிய பிஎம்டபிள்யூ ஐ8 காருடன் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும், பல பிஎம்டபிள்யூ கார்களை அவர் பயன்படுத்தி வருகிறார்.

தற்போது பிரபலங்கள் வைத்திருக்கும் கார்கள் குறித்து பத்திரிக்கைகளும், இணையதளங்களும் போட்டி போட்டு எழுதி வருகின்றன. இதுவும் கார் நிறுவனங்களுக்கு மறைமுக பிரபலத்தை தேடித் தந்து வருவதுடன், பிரபலங்களுக்கும் பெரும் தள்ளுபடி கிடைக்கிறது.

ஆனால், எல்லா பிரபலத்தையும் இவ்வாறு தள்ளுபடி பெற்று கார் வாங்குவதாக கூற முடியாது. சிலர் தள்ளுபடி இல்லாமல் சொந்த பணத்திலேயே கார் வாங்குவதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Monday, June 12, 2017, 17:47 [IST]
English summary
Celebrities avail upto 60 percent discount on luxury cars and supercars.
Please Wait while comments are loading...

Latest Photos