காஷ்மீரின் லே-லடாக் பகுதிக்கு சென்று திரும்பும் வழியில் சென்னை தம்பதி மீது துப்பாக்கிச்சூடு: காரணம்?

Written By:

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் சென்னையைச் சேர்ந்த இளம் தம்பதியரை மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராமாவரத்தில் உள்ள எல் & டி நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிபவர் ஆதித்யா (வயது 31) மற்றும் அவரின் மனைவி விஜயலட்சுமியும் (வயது 28), அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரும் கடந்த ஜூன் 3ம் தேதி, காஷ்மீரில் உள்ள லே - லடாக் பகுதிக்கு சாகசப் பயணம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி சென்றனர். இவர்களுடன் ஆதித்யாவின் நண்பர் ஷ்யாம் தேஜாவும் உடன் சென்றார்.

டெல்லியிலிருந்து இரண்டு ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு லே-லடாக் பனிமலை சிகரங்களுக்கு பயணம் மேற்கொண்டனர் இருவரும்.

மோட்டார்சைக்கிள் பயண ஆர்வலர்கள் பலரும் 10,000 உயரம் கொண்ட லே-லடாக் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் பயணம் மேற்கொள்வதை உச்சகட்டமாக கருதுகின்றனர்.

லே-லடாக் பயணம் முடிந்து நேற்று மாலை மோட்டார்சைக்கிளில் டெல்லி திரும்பிக்கொண்டிருந்தனர் தம்பதியர். உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகர் அருகே, தேசிய நெடுஞ்சாலை 58-ல் வந்துகொண்டிருந்தபோது, ஒரு துப்பாக்கி குண்டு ஆதித்யாவின் கழுத்தில் திடீரென்று பாய்ந்தது.

என்ன ஏதென்று நினைப்பதற்குள்ளாகவே ஆதித்யா குமார் வண்டியோடு கீழே சாய்ந்தார். இதில் அவரின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் பின்னால் இருந்த அவர் மனைவிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேஜா, டெல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அங்கிருந்த சிலர் உதவியுடன் இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமையில் சிகிச்சை பெற்று வரும் ஆதித்யா மற்றும் விஜயலட்சுமி இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருந்து தற்போது மீண்டுள்ளனர். ஹெல்மெட் அணிந்திருந்த இருவர் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகவும், அவர்களின் வண்டி எண்ணை பார்க்கவில்லை என்றும் அவர்கள் நகை, பணம் உள்ளிட்ட எதையும் கேட்காமல் திடீரென துப்பாக்கியில் சுட்டதாக காவல்துறையினரிடம் விஜயலட்சுமி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள நய்மண்டி காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபற்றி போலீசார் கூறும்போது, சம்பவம் குறித்து நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது தம்பதியரை சுடுவதற்கு முன்னர் 30 நிமிடங்களாக அந்த மர்ம மனிதர்கள் இருவரையும் தொடர்ந்து வந்தது தெரியவந்திருப்பதாக கூறினர்.

‘ஆள் மாறாட்டம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததா அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடந்ததா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்' என்று மேலும் கூறினர்.

முன்விரோதம் காரணமாக சுடப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெடுந்தொலைவு மோட்டார்சைக்கிள் பயணம் உற்சாகம் தருவதாக அமைந்தாலும், பல இன்னல்களையும், ஆபத்துகளையும் ஏற்படுத்தும் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

Story first published: Monday, June 19, 2017, 17:21 [IST]
English summary
Read in tamil about chennai couple shot near delhi while returning from leh ladakh bike trip
Please Wait while comments are loading...

Latest Photos