பைலட் இல்லாமல் இயங்கும் விமானங்கள்: ஏர்பஸ் நிறுவனத்தின் புரட்சிகர திட்டம்!

Written By:

டிரைவரில்லா கார், ரயில், கப்பல் போன்றவற்றை தயாரிக்கும் முயற்சிகள் படு தீவிரமாக நடந்து வருகின்றன. டிரைவரில்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்கள் கூட வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பைலட் இல்லாமல் இயங்கும் விமானங்கள் தயாரிக்கும் திட்டத்தை ஏர்பஸ் தெரிவித்துள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக விமான தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும், அடுத்த 10 ஆண்டுகளில் விமான தொழில்நுட்பம் மற்றும் விமான பயணத்தில் பல புரட்சிகரமான தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைலட்டுகள் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் விமானங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட ஏர்பஸ் முடிவு செய்துள்ளது. வாகனா என்ற பைலட் இல்லாமல் இயங்கும் பறக்கும் வாகனத்தை உருவாக்கும் முயற்சியில் ஏர்பஸ் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், பைலட் இல்லாமல் இயங்கும் விமான தயாரிப்பு திட்டத்தையும் கையிலெடுக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஏர்பஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரி பால் எரிமென்கோ கூறுகையில்," பைலட் இல்லாமல் இயங்கும் விமானத்தை உருவாக்கும் திட்டம் உள்ளது.

முதலில் நகர்ப்புற பயன்பாட்டுக்கு தக்க பைலட் இல்லா பறக்கும் வாகனங்களை தயாரிக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்து, பைலட் இல்லாமல் பறக்கும் சிறிய வகை விமானங்களை தயாரிக்கும் திட்டம் உள்ளது.

இவை அனைத்தும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நனவாகிவிடும் என்று நம்புகிறேன். இது தொழில்நுட்ப அளவில் சவாலான விஷயமாக இருக்காது. ஆனால், சமூகத்தில் இவை ஏற்றுக் கொள்ளப்படுவதுதான் சிக்கலான விஷயமாக இருக்கும்," என்று கூறி இருக்கிறார்.

இதுதவிர, விமானத்தில் பயன்பாட்டுக்கு தக்கவாறு இருக்கை அமைப்பை மாற்றிக் கொள்வதற்கான தொழில்நுட்பத்தை அண்மையில் ஏர்பஸ் நிறுவனம் வீடியோவாக வெளியிட்டது.

இப்போது இருப்பது போன்று நிரந்தர இருக்கை அமைப்பாக இல்லாமல், ஒவ்வொரு பயணத்திற்கும் தக்கவாறு வசதிகள் நிரம்பிய கேபினை விமானத்திற்குள் பொருத்திக் கொள்வதுதான் இந்த புதிய கான்செப்ட். இதன்படி, ஒரே விமானத்தை பல விதங்களில் பயன்படுத்தி இயக்க முடியும்.

தூங்கும் வசதி கொண்ட கேபின்கள், சூதாட்ட விடுதிக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் கொண்ட கேபின், சாதாரண இருக்கைகள் கொண்ட கேபின் என தேவைக்கு தக்கவாறு விமானத்திற்குள் பொருத்திக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்த ஏர்பஸ் தீவிரமாக முயன்று வருகிறது.

இந்த கான்செப்ட்டுகளை விரைவாகவே மார்க்கெட்டில் வணிக ரீதியில் அறிமுகம் செய்வதற்கு ஏர்பஸ் திட்டமிட்டுள்ளது. இதன்படி, பைலட் இல்லா விமானங்கள் குறித்த விஷயத்திற்கான விதையை ஏர்பஸ் விதைத்துள்ளது என்று விமானத் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Flying cars and no more pilots in flight revolution: Airbus.
Story first published: Friday, July 14, 2017, 15:01 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos