வாகனங்களில் தனியாக செல்வோரிடம் கொள்ளையடிக்க திருடர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ஃபார்முலா..!!

Written By:

நெடுஞ்சாலைகளில் அல்லது ஆள் அரவமற்ற சாலைகளில் வாகனங்களில் பயணிக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும், இல்லையெனில் நமக்கு ஆபத்து எந்த ரூபத்திலும் வரலாம். நாம் இங்கு குறிப்பிடுவது விபத்துக்களைப் பற்றி மட்டுமல்ல, நம்முடைய உயிருக்கும் உடமைக்கும் கொள்ளையர்களால் ஏற்படும் ஆபத்தையும் பற்றித் தான்.

டெல்லியைச் சேர்ந்த கிஷோர் சர்மா என்பவர் தன்னுடைய நன்பர் ஒருவர் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, அவரின் காரை நிறுத்த கொள்ளையர்கள் மேற்கொண்ட நூதன முயற்சி குறித்த தகவல்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

டெல்லி அருகேயுள்ள நொய்டா, பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் கிஷோர் சர்மாவின் நண்பர் மதியம் ஒருமணியளவில் அவருடைய அலுவலக நண்பர் ஒருவருடன் மாருதி காரில் பயணித்துக்கொண்டிருந்தார்.

பயணத்தின் நடுவே சாலையோரமாக காரை அவர் நிறுத்தியிருந்த போது, நடுத்தர வயது கொண்ட இளைஞர் ஒருவர் சாலையின் மறுபக்கத்தில் இருந்து இவர்கள் காரின் அருகே வந்து, காரின் முன்பகுதியில் இருந்து ஆயில் கசிந்துகொண்டிருப்பதாக இவரிடம் கூறியுள்ளார்.

காரின் ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை தான் இந்த இளைஞர் ஆயில் கசிவதாக தவறாக கருதி கூறியிருக்கிறார் என நினைத்து, காரை விட்டு இறங்கிப் பார்க்காமல் ஸ்டார்ட் செய்து தனது பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.

இந்த சமயத்தில் அவரின் கண்களில் சிறிதளவு எரிச்சல் இருப்பதை உணர்ந்துள்ளார். பின்னர் அவர்களின் காருக்கு பின்னால் ஒரு பைக்கில் வந்துகொண்டிருந்த இரண்டு இளைஞர்களும் இவரிடம் ஆயில் கசிவதாக சைகையில் கூறியுள்ளனர்.

நமக்கு பின்னால் இருந்து வருபவர்களால் எப்படி காரின் முன்னால் ஆயில் கசிவதை காண முடியும்? என அவருக்கு சந்தேகம் தோன்றியுள்ளது. மேலும் காரின் ஆபத்துக் கால இண்டிகேட்டர்கள் அனைத்தும் எந்த எச்சரிக்கையும் தரவில்லை என்பதனையும் அவர் உறுதி செய்தார்.

இதில் ஏதோ விபரீதம் இருக்கிறது என்று அவருக்கு தோன்றியதால் காரின் ஜன்னல்களை கூட திறக்காமல் அவர் தொடர்ந்து தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.

 

ஆயில் கசிகிறது என்று எச்சரிக்கை செய்த இளைஞர்கள் தனக்கு முன்னாலும் பின்னாலும் இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து வருவதை கண்ட அவர், இதில் ஏதோ விஷமம் உள்ளது என்பதை உணரவே காரை சற்று வேகம் கூட்டியுள்ளார்.

இந்த சமயத்தில் அவர்களின் கேபின் முழுவதும் ஒரு வித காரமான நெடி மற்றும் கண் எரிச்சலும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. என்றாலும் காரின் ஜன்னல்களை கூட திறக்காமல் வேகமாக சென்றுள்ளனர்.

 

பின்னர் எதிர்திசையில் ஒரு பெட்ரோல் பங்கு இருப்பதை கண்டு அங்கு அவர்கள் சென்றனர். அப்போது காரை விட்டு இறங்கி வந்த பார்த்த போது தான் ஒருவிதமான ரசாயன ஆயில் கலவையை காரின் முன்பகுதியில் ஊற்றப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.

இது குறித்து பெட்ரோல் பங்கு ஊழியர்களிடம் கூறிய போது தான் சில நாட்களுக்கு முன்னரும் இதே போன்று ஒருவருடைய காரின் மீது ஆயில் ஊற்றி அவரை கீழே இறங்கச் செய்து ஒரு கும்பல் அவர்களை அடித்து உதைத்து அவர்களிடம் இருப்பதை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது..

 

ஆயில் கசிகிறது என்று அவர்கள் கூறியபோதே இவர்களும் இறங்கி வந்து பார்த்திருந்தால் இவர்களுக்கும் நிச்சயம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்..

தற்போது நெடுஞ்சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் கார்களை நிறுத்தி கொள்ளையடிக்க இந்த முறையைத் தான் கொள்ளையர்கள் கடைப்பிடிக்கின்றனர். எனவே ஆள் அரவமற்ற சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் பயணிக்கும் போது மிகுந்த கவனமுடன் சென்றால் தான் பாதுகாப்பாக செல்ல முடியும் என்பதனை நினைவில் கொள்ளவும்.

English summary
Read in Tamil about Highway Burglars new technique to loot riders travelling in highways.
Please Wait while comments are loading...

Latest Photos