வாகன உற்பத்தி துறையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பங்களிப்பு!

Written By:

அதிக வாகனங்களை உற்பத்தி செய்யும் உலகின் டாப்- 10 வாகன உற்பத்தி கேந்திரங்களில் சென்னையும் இடம்பெற்றிருக்கிறது.  ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3 கார்கள் சென்னையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், ஆசியாவின் டெட்ராய்ட் என்று புகழும் அளவுக்கு வாகன உற்பத்தியில் சென்னை முன்னிலை வகிக்கிறது.

இந்த பெரும் பேறுகளை சென்னை பெறுவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிக முக்கிய பங்களிப்புகளை வழங்கி இருக்கிறார். அவர் போட்ட பிள்ளையார் சுழிதான் இன்று சென்னை வாகன உற்பத்தியில் மாபெரும் கேந்திரமாக மாறி நிற்கிறது.

ஆம், 1991ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன், அதே ஆண்டில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். அதில் அறிவிக்கப்பட்ட முதலீட்டுக் கொள்கைள் மூலமாக கவர்ந்திழுக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் சென்னையில் ஆலை அமைக்க முடிவு செய்தது.

அந்த நிறுவனத்துக்கு தேவைப்பட்ட நிலம், வரிச்சலுகைகள் மற்றும் மின்சார கட்டணத்தில் தள்ளுபடி என பல சலுகைகள் வழங்கப்பட்டன. 1995ம் ஆண்டு தமிழகத்தில் ஃபோர்டு நிறுவனம் காலடி பதித்த பின்னர்தான் பல வாகன உற்பத்தி நிறுவனங்களின் கண்கள் தமிழகத்தின் மீது விழுந்தன.

அடுத்ததாக, தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சென்னையில் கார் ஆலை அமைக்க முடிவு செய்தது. அதேநேரத்தில், அந்த சமயத்தில் ஆலை அமைப்பதற்கான நடைமுறைகள் மற்றும் அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள் மிக கடினமாக இருந்ததாக ஹூண்டாய் அதிகாரி ஒருவர் நினைவுகூர்ந்துள்ளார்.

அத்துடன், குர்கான், புனே உள்ளிட்ட இடங்களில் அனுபவமிக்க பணியாளர்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு எளிதாக இருந்ததாகவும், ஆனால், சென்னையில் பணியாளர்களுக்கு பயிற்சி கொடுத்து கார் உற்பத்தியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், படிப்படியாக பல சிக்கல்களை கடந்து இன்று சென்னை மிகச் சிறந்த வாகன உற்பத்தி கேந்திரமாக மாறியிருப்பதாகவும் அவர் கூறினார். ஆரம்ப கட்டத்தில் உதிரிபாகங்களை சப்ளை செய்வதற்கான முதலீடுகளும் செய்வதற்கு பெரும் தடங்கல்கள் இருந்தன.

ஆனால், தற்போது ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் மட்டும் 1 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஆண்டுக்கு 35,000 கார்களை கூட ஹூண்டாய் விற்க முடியாது என்று பலர் விமர்சித்தனர்.

பிற வெளிநாட்டு நிறுவனங்கள் 40 சதவீத உள்ளூர் உதிரிபாகங்களுடன் கார் உற்பத்தி செய்த நிலையில், ஆரம்ப கட்டத்திலேயே 70 சதவீத உள்ளூர் உதிரிபாகங்களுடன் கார் உற்பத்தியை துவங்கினோம். இதனால், வெகுவாக விரைவாக விற்பனையில் சாதனைகளை படைத்தோம் என்று அந்த ஹூண்டாய் அதிகாரி கூறியிருக்கிறார்.

ஃபோர்டு மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் கார் ஆலைகளை தொடர்ந்து பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார் தயாரிப்பு ஆலை, ரெனோ- நிசான் கூட்டணியின் கார் ஆலை, டெய்ம்லர் நிறுவனத்தின் பஸ் மற்றும் டிரக் தயாரிப்பு ஆலை என்று தற்போது பல முன்னணி நிறுவனங்களின் கார் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, பல முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை தமிழகத்தில் செய்துள்ளன.

அடுத்து ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும் கியா கார் நிறுவனமும் தமிழகத்தில் ஆலை அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வேணு சீனிவாசன் " கடந்த தசாப்தத்தை திரும்பி பார்த்தால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் ரெனோ- நிசான், டெய்ம்லர், பிஎம்டபிள்யூ என பல முன்னணி வாகன நிறுவனங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன.

உலக வரைபடத்தில் சென்னைக்கு முக்கிய இடத்தை பெற்றுத் தந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. காமராஜர், எம்ஜிஆருக்கு பின்னர் எமது மாநிலத்தின் சிறந்த தலைவர் என்று புகழ்மாலை சூட்டியிருக்கிறார் வேணு சீனிவாசன்.

வாகன உற்பத்தி கேந்திரமாக மாறியதன் பின்னர் தமிழகத்தில் நேரடி மற்றும் வேலைவாய்ப்பு மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. அத்துடன், வரி வருவாய், ஏற்றுமதி என பல்வேறு விதங்களில் சென்னைக்கு வாகன துறையின் மூலமாக பல அனுகூலங்கள் கிட்டின.

நாட்டின் கார் ஏற்றுமதியில் 50 சதவீத பங்களிப்பை சென்னை கொண்டிருக்கிறது. அத்துடன், நாட்டின் மொத்த வாகன உதிரிபாக உற்பத்தியில் 35 சதவீத பங்களிப்பை தமிழகம் பெற்றிருக்கிறது.

வாகன உற்பத்தி நிறுவனங்களுககு தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தவறவில்லை. ஆம், ரூ.450 கோடி முதலீட்டில் தேசிய வாகன சோதனை மற்றும் மேம்பாட்டு மையமும் சென்னையில் அமைக்கப்பட்டதற்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு அதிக ஒத்துழைப்பை நல்கியது.

இதன்மூலமாக, வாகனங்களின் வடிவமைப்பு, மாசு உமிழ்வு, பாதுகாப்பு, செயல்திறன் உள்ளிட்டவற்றை சோதனை செய்யும் வாய்ப்பை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெற்றிருக்கின்றன. நாட்டின் வாகன உற்பத்தி துறையில் சென்னை மிக முக்கிய இடத்தை பெற்றிருப்பதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிக முக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார் என்றால் அதில் மிகையில்லை.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
How Jayalalithaa Made Chennai The Automotive Hub Of India.
Please Wait while comments are loading...

Latest Photos