இந்திய விமானப்படையில் சேர க்யூவில் காத்திருக்கும் சாப் கிரிபென் போர் விமானத்தின் சிறப்புகள்!

Written By:

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் அதிநவீன கிரிபென் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சாப் குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், கிரிபென் போர் விமானங்களை இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

போர் விமான ஆலையை அமைத்து அசெம்பிள் செய்வது மட்டுமின்றி, தொழில்நுட்ப ரகசியங்களை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாக சாப் நிறுவனத்தின் துணைத்ததலைவர் மேட்ஸ் பால்ம்பெர்க் தெரிவித்துள்ளார். இந்தியாவின் போர் விமானங்களின் தேவையை நிறைவேற்றுவதோடு, வேலைவாய்ப்பை பெருக்கவும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமாக வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பையும் வழங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

சாப் கிரிபென் என்ஜி என்ற போர் விமான மாடலை இந்தியாவிற்கு விற்பனை செய்ய சாப் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது பன்னோக்கு வகை விமான ரகத்தை சேர்ந்தது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் இந்த விமானங்களில் மாறுதல்களை எளிதாக செய்ய முடியும் என்று சாப் குழுமம் தெரிவித்துள்ளது.

நான்காம் தலைமுறைக்கும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கு இடைபட்ட சிறப்பு அம்சங்களை கொண்டதாக இருக்கும். கிரிபென் என்ஜி போர் விமானத்தின் இ என்ற மாடலையே இந்தியாவிற்க வழங்க சாப் விருப்பம் தெரிவித்துள்ளது.

எதிரி தரை இலக்குகள் மீதான தாக்குதல், வான் இலக்கை தாக்குதல், எதிரிகளிடமிருந்து தற்காப்பு, எதிரி விமானங்களை இடைமறித்தல், தரை தாக்குதல்களிலிருந்து எளிதாக தப்பிக்கும் வசதிகள் கொண்டது.

வெகு லாவகமாக தப்பிச் செல்லும் ஏரோடைனமிக் டிசைன் கொண்டதாக வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். குறைவான நீளம் கொண்ட ஓடுதளத்திலிருந்தும் இயக்க முடியும். இந்த விமானத்திற்காகன பெரும்பான்மையான பாகங்கள் அமெரிக்காவை சேர்ந்த சப்ளையர்களிடமிருந்து பெறப்படுகிறது.

கிரிபென் இ போர் விமான மாடல் 15.2 மீட்டர் நீளமும், 8.6 மீட்டர் அகலமும் கொண்டது. 5,100 கிலோ பாரத்தை சுமந்து பறக்கும் திறன் கொண்டது. பழைய மாடல்களைவிட கூடுதலாக எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வசதியும், பறக்கும்போதே வேறு விமானம் மூலமாக எரிபொருள் நிரப்பும் வசதியும் உள்ளது.

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 2,600 கிமீ தூரம் முதல் 2,800 கிமீ தூரம் வரை பறக்கும். இதனால், குறைந்த மற்றும் நடுத்தர தூர தாக்குதல் நடவடிக்கைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

வழிகாட்டுதலின்படி இலக்குகளை குறி வைத்து தாக்கும் வெடிகுண்டுகள், வான் இலக்குகளை வானிலிருந்து ஏவி அழிக்ககூடிய ஏவுகணைகள், நீண்ட தூர ஏவுகணைகள், கப்பல்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை முறியடிக்கும் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த விமானத்தில் வால்வோ ஆர்எம்12 டர்போஃபேன் இன்ஜின் பொருத்தப்ப்டடிருக்கிறது. மேக் 2 அல்லது மணிக்கு 2,204 கிமீ வேகம் வரை பறக்கும். அதிகபட்சமாக 800 கிமீ பரப்பளவில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.

மிக குறைவான இயக்குதல் செலவீனமும், எளிதான பராமரிப்பும் கொண்ட விமானமாகவும் குறிப்பிடப்படுகிறது. செக் குடியரசு, ஹங்கேறி, தென் ஆப்ரிக்கா, தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த விமானத்தில் 120 ரவுண்டுகள் சுடக்கூடிய 27மிமீ துப்பாக்கியும், 13.5 செமீ விட்டமுடைய 4 ராக்கெட்டுகளை பொருத்துவதற்கான வசதியும் உள்ளது. இந்திய ஏவுகணைகளை பொருத்துவதற்கான மாறுதல்களை செய்து கொள்ள முடியும்.

கிரிபென் விமானத்தை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை வழங்குவது மட்டும் நோக்கமில்லை. கிரிபென் போர் விமானத்தின் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ளவும், இறக்குமதியை தவிர்த்து இந்திய சப்ளையர்களை நியமித்து பாகங்களை பெறவும் சாப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

போர் விமானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஸ்வீடனில் பயிற்சி தருவதோடு மட்டுமின்றி, இந்தியாவிலேயே பயிற்சி மையத்தையும் நிறுவி பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளதாகவும், அடுத்த 100 ஆண்டுகள் இந்தியாவில் வர்த்தகத்தை செய்வதற்கான நோக்கத்துடன் களமிறங்கும் திட்டம் உள்ளதாகவும் சாப் தெரிவித்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டில் புதிய போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா அறிவித்த உலகளாவிய டென்டரில் ரபேல் போர் விமானத்தை தயாரிக்கும் டஸ்ஸால்ட் வெற்றி கண்டது. சாப் நிறுவனம் அந்த வாய்ப்பை இழந்தது. எதிரி நாடுகளுக்குள் அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் குறைவு என்ற ஒரே காரணத்திற்காகத்தான் கிரிபென் போர் விமானத்தை விட்டு,  ரஃபேல் போர் விமானத்தை இந்தியா தேர்வு செய்தது.

இந்தநிலையில், தனது கிரிபென் போர் விமானத்தை வாங்குவதற்கு இந்தியா ஆர்டர் வழங்கும் என்று சாப் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், ஒரு ஆஃபரையும் அந்த நிறுவனம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

அதாவது, தன்னிடம் உள்ள அதிநவீன போர் விமான தொழில்நுட்பங்கள் மற்றும் ஏவியோனிக்ஸ் தொழில்நுட்பங்களை எச்ஏஎல் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள தயார் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, தேஜஸ் போர் விமானத்தை வெகு விரைவாக மேம்படுத்தி விடலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருப்பது கவனித்தக்கது.

மேலும்... #ராணுவம் #military
Story first published: Wednesday, October 5, 2016, 13:33 [IST]
English summary
Important Details Of Saab Gripen Fighter Jet. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos