கடற்படையில் சேர்க்கப்பட்ட ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் பற்றிய தகவல்கள்!

ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இன்று சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலான இதில் உள்ள சிறப்புகளை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவிலேய தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கொல்கத்தா என்ற புதிய போர்க்கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதே ரகத்தில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பல் கடந்த ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வரிசையில் மிகப்பெரிய ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இன்று சேர்க்கப்பட்டது. மும்பையில் நடந்த இதற்கான விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு இந்த போர்க்கப்பலை கடற்படை பயன்பாட்டிற்கு முறைப்படி அர்ப்பணித்தார். இந்த போர்க்கப்பலின் முக்கிய அம்சங்களை தொடர்ந்து காணலாம்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் பெயரில் அறிமுகம் செய்யப்படும் முதல் போர்க்கப்பலாக குறிப்பிடுப்படுகிறது. ஐஎன்எஸ் கொல்கத்தா வகுப்பு அழிகலன் வகையிலான போர்க்கப்பல்களில் இது மூன்றாவது மற்றும் கடைசி போர்க்கப்பலாகும்.

புரொஜெக்ட் 15 ஆல்பா என்ற குறியீட்டுப் பெயரில் இந்த கப்பல் கட்டப்பட்டது. 2006ம் ஆண்டு அடிச்சட்டம் நிறுவப்பட்ட கப்பல் கட்டும் பணிகள் துவங்கின. இந்த கப்பல் 164 மீட்டர் நீளமும், 17.4 மீட்டர் அகலமும் உடைய இந்த கப்பல் 7,500 டன் எடை கொண்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலாக தெரிவிக்கப்படுகிறது. மும்பை மசகான் கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் 100 சதவீத வடிவமைப்புப் பணிகள் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட்டன. இந்த கப்பல் ரூ.3,800 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த கப்பல் கட்டுமானத்தில் ரஷ்யாவும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் மிக நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இது உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஐஎன்எஸ் சென்னை கப்பலில் மிக நவீன தொழில்நுட்பம் கொண்ட BEL எலக்ட்ரானிக் மோடுலர் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல் கட்டுப்பாட்டு சாதனம் உள்ளது. இது தாக்குதல் கருவிகளை கட்டுப்படுத்தும். இந்த கப்பலில் தேல்ஸ் எல்டபிள்யூ08டி என்ற ரேடார் உள்பட 4 ரேடார்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அலைவரிசையின் மூலமாக எதிரி இலக்குகளை தாக்குவதற்கும், தற்காத்து கொள்வதற்கும் பயன்படும்.

மேலும், இரண்டு சோனார் கருவிகள் உள்ளன. பாரத மின்னணு நிறுவனம், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையம் ஆகியவற்றின் கூட்டணியில் இந்த ரேடார்களும், சோனார் கருவிகளும் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த கப்பலில் உக்ரைன் நாட்டிடமிருந்து வாங்கப்பட்ட 4 டர்பைன் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் மணிக்கு 56 கிமீ வேகத்தில் செல்லும். இந்த கப்பலுக்கான போக்குவரத்து வசதி மற்றும் அவசர கால பணிகளுக்காக இரண்டு நடுத்தர வகை சீ கிங் ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

ஐஎன்எஸ் சென்னை கப்பலில் தரை தாக்குதல் நடத்துவதற்கான பிரத்யேக வசதிகள் உள்ளன. இந்த கப்பலில் சூப்பர்சானிக் வகையிலான பிரம்மோஸ் ஏவுகணைகளும், பாரக்-8 நீண்ட தூர ஏவுகணைகளும் செலுத்துவதற்கான லாஞ்சர்கள் உள்ளன. இதன்மூலமாக, இந்தியாவின் ராணுவ பலம் மேலும் வலுப்படுகிறது.

நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக ஆயுதங்களும், அதனை கண்டறிவதற்கான சென்சார்கள், ரேடார்களும் உள்ளன. தண்ணீருக்குள் இருந்து வரும் ஏவுகணைகளை முறியடிப்பதற்கான 2 ஆர்பியூ600 வழிமறிப்பு ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வசதிகளும் இந்த கப்பலில் உள்ளன.

குறுகிய தூர இலக்குகளை தாக்கவும், கப்பலின் தற்காப்புக்காகவும் 4 ஏகே630 எந்திர துப்பாக்கிகள் கப்பலில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, எம்ஆர் 130மிமீ துப்பாக்கியும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த போர்க்கப்பலின் கட்டுப்பாட்டு சாதனங்கள், அவசர காலத்தில் பயன்படும் துணைக் கட்டுப்பாட்டு அமைப்பு, எதிரிகளின் தாக்குதல்களை கண்டுணர்ந்து தற்காத்து கொள்ளும் திறன் மற்றும் தாக்குதல் கட்டுப்பாட்டு கருவிகள் என அனைத்தும் தானியங்கி முறையில் செயல்படும் திறன் கொண்டவை. இவை இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டவை.

இந்திய கடற்படையின் மேற்கு படைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. சில சோதனைகளுக்கு பிறகு மும்பையை தலைமையிடமாக கொண்ட மேற்கு கடற்படைப் பிரிவில் இந்த போர்க்கப்பல் செயலாற்றும்.

 

Via: Financial Express

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ராணுவம் #military
English summary
11 Important Facts About INS Chennai Destroyer.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK