சென்னை, பெங்களூரில் ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்கு வந்த ஏர்பஸ் ஹெலிகாப்டர்!

சென்னை மற்றும் பெங்களூரில் விசேஷ வசதிகளுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் இருக்கும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவையை கர்நாடக முதல்வர் சித்தராமையா துவங்கி வைத்தார்.

அமெரிக்காவை சேர்ந்த ஏர் மெடிக்கல் குரூப் மற்றும் ஏர்பஸ் விமான நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை துவங்கியிருக்கிறது பெங்களூரை சேர்ந்த ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்க்யூ நிறுவனம். இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் ஏர்பஸ் ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

முதல்கட்டமாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று ஹெலிகாப்டர்களை ஏர்பஸ் நிறுவனம் கடந்த அக்டோபரில் டெலிவிரி வழங்கியது.

ஏர்பஸ் எச்130 என்ற ஹெலிகாப்டர் மாடல்தான் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ சேவைக்காக விசேஷ அம்சங்களுடன், இந்த ஹெலிகாப்டரை ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியிருக்கிறது.

இந்த ஹெலிகாப்டர்களில் நோயாளிக்கான ஸ்ட்ரெச்சரும், மருத்துவ பணியாளர்கள் அல்லது நோயாளியின் உறவினர்கள் அமர்ந்து செல்வதற்கான மூன்று இருக்கைகள் உள்ளன. இரண்டு பைலட்டுகள் இந்த ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை இயக்குவர்.

இந்த ஹெலிகாப்டரில் அவசர சிகிச்சை மையத்தில் உள்ளது போன்று பல நவீன மருத்துவ உபகரணங்களும், சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளை கூட எளிதாக மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும்.

அத்துடன், இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலத்துக்கான மீட்புப் பணிகளிலும் இந்த ஹெலிகாப்டர்களை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட உள்ளதாக ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்க்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஹெலிகாப்டரில் மீட்புப் பணிகளுக்கு தேவையான கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கும், அதிலுள்ள மீட்பு கருவிகளை இயக்குவதற்கும் பைலட்டுகளுக்கு ஏர்பஸ் நிறுவனமே நேரடியாக பயிற்சி அளித்துள்ளது.

மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சியை ஏர் மெடிக்கல் குழுமம் அளித்துள்ளது. இதன்மூலமாக, குறித்த நேரத்தில் நோயாளிகள் மருத்துவ வசதியை விரைவாக பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் உறுப்புகளையும் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு விரைவாக எடுத்துச் செல்வதற்கான வசதியை இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவை வழங்குகிறது. இந்த சேவையில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஏர்பஸ் எச்130 ஹெலிகாப்டர்கள் உலக அளவில் பல சிறப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மருத்துவ சேவை, காவல் துறை ரோந்து பணி, உளவு பார்க்கும் பணிகளுக்காக விசேஷ கட்டமைப்புகளுடன் இவை தயாரித்து கொடுக்கப்படுகின்றன. மேலும், விஐபி.,களுக்கான முக்கிய போக்குவரத்து சாதனமாகவும், சுற்றுலாத் துறையிலும் இந்த ஹெலிகாப்டர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் கண்ணாடி ஜன்னல்கள் மிக விசாலமானதாக இருப்பதால் சுற்றுலாத் துறையில் அதிக அளவில் இயக்கப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டரில் இருக்கும் டர்போமெகா ஏரியல் 2டி எஞ்சின் மிக சிறந்த செயல்திறன் மிக்கது என்பதுடன், சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் பெற்றது. இது சரிசமமான தரை தளத்தை பெற்றிருப்பதும், சிறந்த குளிர்சாதன வசதியை கொண்டிருப்பதும் மருத்துவ சேவைப் பணிகளுக்கு ஏதுவானதாக இருக்கிறது.

இதுவரை 646 ஏர்பஸ் எச்130 ஹெலிகாப்டர்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன. உலக அளவில் 50 நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. சாதாரண மாடல்களில் ஒரு பைலட்டும், 6 முதல் 7 பயணிகளும் அமர்வதற்கான இருக்கை வசதி கொண்டது.

அதிகபட்சமாக மணிக்கு 237 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 617 கிமீ தூரம் வரை செல்லும் அல்லது 4 மணிநேரம் வரை பறக்கும். எனவே, அருகாமையில் உள்ள நகரங்களுக்கு விஐபி.,களை கொண்டு செல்வதற்கான பணிகளிலும் ஈடுபடுத்த முடியும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Important Things About Airbus H130 Air Ambulance Helicopter Model.
Please Wait while comments are loading...

Latest Photos