டால்கோ இல்லாமலேயே அதிவேக ரயில்களை இயக்க முடிவு!

Written By:

டெல்லி - மும்பை மற்றும் டெல்லி- ஹவுரா ஆகிய இரண்டு வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை வெகுவாக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனால், இந்த இரண்டு வழித்தடங்களிலும் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் வெகுவாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

மிஷன் ரப்தார் என்ற பெயரில் ரயில்களின் சராசரி வேகத்தை வெகுவாக அதிகரிக்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது மத்திய ரயில்வே அமைச்சகம். இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தவும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த திட்டத்தின்படி, டெல்லி- மும்பை மற்றும் டெல்லி - ஹவுரா இடையிலான வழித்தடத்தில் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில்களின் வேகம் மணிக்கு 130 கிமீ என்ற அளவிலிருந்து மணிக்கு 160 கிமீ வேகம் செல்லும் வகையில் அதிகரிக்கப்பட உள்ளது.

அதேபோன்று, இந்த வழித்தடத்தில் செல்லும் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் மணிக்கு 100 கிமீ என்ற அளவிலிருந்து மணிக்கு 130 கிமீ வேகம் என்ற அளவில் அதிகரிக்கப்படுகிறது.

அதிவேக ரயில்களை இயக்குவதற்கு ஏதுவாக டெல்லி- மும்பை மற்றும் டெல்லி - ஹவுரா ஆகிய இரு வழித்தடங்களிலும் உள்ள தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள் மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், மின்சார கம்பங்கள் மற்றும் மின்சாரம் வழங்கும் கம்பிகளும் தரம் உயர்த்தப்படுகிறது.

அடுத்து, மிகவும் வளைந்து செல்லும் பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளில் ரயில் தண்டவாளத்தை நேராக அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் சராசரி வேகம் வெகுவாக அதிகரிக்கும். ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து தடுப்பு வேலிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

டெல்லி- மும்பை இடையிலான 1,385 கிமீ தூரத்தை ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 16 மணி 25 நிமிடங்களில் கடக்கின்றன. அதேபோன்று, 1,454 கிமீ தொலைவு கொண்ட டெல்லி- ஹவுரா இடையிலான ராஜ்தானி ரயில் 17 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது. அதாவது, சராசரியாக மணிக்கு 82 கிமீ வேகத்தில் இந்த ரயில்கள் செல்கின்றன.

ஆனால், கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்போது பயண நேரம் வெகுவாக குறையும். அதாவது, டெல்லி- மும்பை இடையிலான ராஜ்தானி ரயில்கள் 12 மணிநேரத்திலும், டெல்லி- ஹவுரா இடையில் இயக்கப்படும் ராஜ்தானி ரயில்கள் 14 மணிநேரத்திலும் கடந்துவிடும்.

டெல்லி- மும்பை மற்றும் டெல்லி- ஹவுரா ஆகிய இரு வழித்தடங்களும் நாட்டின் மிகவும் பரபரப்பான வழித்தடங்களாக இருக்கின்றன. இந்த இரண்டு வழித்தடங்களிலும் நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ரயில்வே அமைச்சகத்தின் முடிவால், தற்போது இந்த வழித்டத்தில் பயணிப்போர் பெரும் பயனடைவர்.

கடந்த மார்ச் மாதம் டெல்லி - ஆக்ரா இடையிலான வழித்தடத்தில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு நகரங்களுக்கு இடையிலான 200 கிமீ தூரத்தை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் 90 நிமிடங்களில் கடக்கிறது. நாட்டின் அதிவேக ரயில் என்ற பெருமையையும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் பெற்றிருக்கிறது.

டால்கோ ரயில்களை கொள்முதல் செய்வது மட்டுமின்றி, அதில் மாறுதல்கள் செய்து பயன்படுத்தும் நிலை இருக்கிறது. அதற்கு பதிலாக இந்த மாற்று யோசனையை ரயில்வே அமைச்சகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் மிஷன் ரஃப்தார் திட்டத்தின்படி, இந்த இரு வழித்தடங்களும் மேம்படுத்தப்பட்டு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்று ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India's Busiest train routes set to get semi-high speed corridors.
Please Wait while comments are loading...

Latest Photos