சைபீரியா பனிப் பிரதேசத்தை தனி மனுஷியாக காரில் கடந்து சாதித்த இந்திய பெண்!

Written By:

கடந்த ஆண்டு டெல்லியில் இருந்து லண்டன் வரை மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஊடகங்களை ஈர்த்தவர் நிதி திவாரி. சாகசப் பயணங்களில் அசத்தி வரும் இவர் தற்போது மீண்டும் ஊடகங்களின் பார்வையை தன்பால் ஈர்த்துள்ளார்.

ஆம், இந்த முறை சைபீரியாவின் மிக மோசமான குளிர் காலநிலை கொண்ட பகுதியின் ஊடாக பயணித்து திரும்பியிருக்கிறார் நிதி திவாரி. குழுவாக செல்வோரையே அச்சப்பட வைக்கும் அந்த பகுதியில் பயணித்து உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

உலகின் மிக அதிக குளிர் காலநிலை கொண்ட யாக்கூட்ஸ்க் என்ற இடத்திலிருந்து சைபீபிரிய பனிப்பிரதேசம் வழியாக மகதன் துறைமுக நகருக்கு சென்று மீண்டும் யாக்கூட்ஸ்க் நகருக்கு திரும்பியிருக்கிறார் நிதி திவாரி. அதுவும் தனி மனுஷியாக.

மொத்தம் 13 நாட்கள் நீடித்த இந்த பயணத்தின்போது 5,000 கிமீ தூரம் பயணித்துள்ளார். அதுவும் தற்போது மிக மோசமான குளிர் காலநிலை சூழலில் அவர் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதும் மெச்சத்தகுந்த சாதனையாக மாறி உள்ளது.

ஆள் ஆரவமற்ற பகுதியில், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிட்டு பயணத்தை நிறைவு செய்திருக்கிறார். சில இடங்களில் மைனஸ் 59 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உறைய வைக்கும் குளிர் நிலவியதாக தெரிவித்துள்ளார் நிதி திவாரி.

நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணிநேரம் வரை காரை ஓட்டியிருக்கிறார். பகல்வேளையில் மொத்தமே 3 மணிநேரம் மட்டுமே வெளிச்சம் இருக்கும் என்ற நிலையில், பெரும்பாலும் போதிய வெளிச்சம் இல்லாமல், அதுவும் மிக மோசமான பனிப்பிரதேசத்தில் காரை தில்லாக செலுத்தி உள்ளார்.

எரிபொருள் பிரச்னை, வழி பிரச்னை, உணவு பிரச்னை மற்றும் நடுங்க வைக்கும் குளிரில் உடல்நல பிரச்னைகளை தாண்டி தனி மனுஷியாக இந்த பயணத்தை நிறைவு செய்திருப்பதுடன், மனிதர்கள் வாழ தகுதியற்ற இந்த பகுதிக்கு தனியாக சென்ற இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவியை இந்த பயணத்தின்போது நிதி திவாரி பயன்படுத்தி உள்ளார். மேலும், 15 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த பயண திட்டத்தை நிறைவு செய்துள்ளார். தனது பயணத்தின்போது கிடைத்த அனுபவங்களை அவ்வப்போது இந்த 15 பள்ளிக்கூட மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டே வந்துள்ளார்.

இந்த பயணத்திற்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவு பிடித்ததாகவும் நிதி திவாரி தெரிவித்துள்ளார். தற்போது 35 வயதாகவும் நிதி திவாரிக்கு இயற்கையாகவே துணிச்சல் உடன் பிறந்த விஷயமாகிவிட்டது. சிறு வயதில் இருந்தே துணிச்சல் மிகுந்த பெண்மணியாக ஊக்குவித்து வளர்த்தது அவரது தாயார்தானாம். தனது 11ம் வயதில் பூடான் சென்று இமயமலையில் மலையேற்ற சாகசத்தை நிறைவேற்றி இருக்கிறார்.

தனது 22ம் வயதில் ஓட்டுனர் பயிற்சி பெற்ற நிதி திவாரி தொடர்ந்து பல சாகசப் பயணங்களை காரில் மேற்கொண்டுள்ளார். முதல்முறையாக பெங்களூரில் இருந்து லடாக் வரை காரில் சாகசப் பயணம் சென்றார். அடுத்து, கடந்த ஆண்டு டெல்லியில் இருந்து லண்டனுக்கு சுமார் 23,500 கிமீ தூரம் காரில் சென்று சாதனை படைத்தார். மூன்று தோழிகளுடன் 97 நாட்களில் இந்த பயணத்தை நிறைவு செய்தார்.

அந்த பயணத்தின்போது நிதி திவாரி மட்டுமே காரை ஓட்டிச் சென்றார். அப்போது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை அவர் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டொயோட்டா லேண்ட்க்ரூஸர் காரில் தனது சைபீரிய பயணத்தை நிறைவு செய்து சாதித்து காட்டியிருக்கிறார்.

உடல் மற்றும் மனோதிடம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற சைபீரிய பனிப்பிரதேசத்திற்கு செல்ல முடியும். ஆனால், நிதி திவாரி தனி மனுஷியாக சென்று திரும்பியிருப்பதுதான் சாதனையிலும் சாதனையாக குறிப்பிடலாம்.

வாழ்த்துகள் நிதி திவாரி!

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Nidhi Tiwari Becomes First Indian to Drive to the Coldest Inhabited Place on Earth.
Please Wait while comments are loading...

Latest Photos