இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடமும், சொகுசு பஸ்களும்... !!

Written By:

நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் ஒன்றே தீர்வு என்ற நினைப்பை தற்போது அதிநவீன பஸ் மாடல்கள் தகர்த்து வருகின்றன. 500 கிமீ தொலைவுக்கு நேரடியாக பஸ்சில் செல்வதே மிக நீண்ட தூர பயணமாக கருதப்பட்ட நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை இலகுவாக கடக்கும் விதத்தில் இந்தியாவில் சொகுசு பஸ்கள் அறிமுகமாகிவிட்டன.

இதுபோன்ற நீண்ட தூர பயணங்களை இலகுவாக்கியதில், வால்வோ நிறுவனத்துக்கு பெரும் பங்கு உண்டு. இந்திய போக்குவரத்து துறையில் புதிய கோணத்தில் எடுத்துச் சென்ற பெருமைக்குரிய வால்வோ நிறுவனத்தின் துணையுடன் பஸ் நிறுவனங்களும் மிக நீண்ட தூர வழித்தடங்களில் பஸ்களை இயக்க துவங்கின.

இப்போது தென் இந்தியாவையும், வட இந்தியாவையும் நேரடியாக இணைக்கும் விதத்தில் பல நீண்ட தூர பஸ் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில், பெங்களூரிலிருந்து ஜோத்பூருக்கு நேரடி பஸ் வசதியை விஆர்எல், எஸ்ஆர்எஸ் உள்ளிட்ட பெரிய பஸ் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதுதான் இந்தியாவின் மிக நீளமான நேரடி பஸ் வழித்தடமாக கருதப்படுகிறது.

1,950 கிமீ தூரமுடைய இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் 36 மணி நேரத்தில் கடந்து விடுகின்றன. பெங்களூர் ஜோத்பூர் மட்டுமின்றி, பெங்களூரிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்பூர், உதய்பூர் மற்றும் குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி பஸ் சேவையை பஸ் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக கர்நாடக அரசு போக்குவரத்து கழக நிறுவனமும்[KSRTC] சொகுசு பஸ் சேவையில் முன்னிலை வகிக்கிறது. கேஎஸ்ஆர்டிசி நிறுவனமும் ஏராளமான வழித்தடங்களில் வால்வோ பஸ்களை பயன்படுத்தி வருகிறது.

மேலும், இந்த வழித்தடங்களில் பெரும்பாலும் வால்வோ பி9ஆர் மற்றும் பி11ஆர் மல்டி ஆக்சில் பஸ்கள்தான் இயக்கப்படுகின்றன. உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் பயணிகளுக்கு சிறப்பான இடவசதியுடன் கட்டமைக்கப்படுகின்றன. இதனால், பஸ் நிறுவனங்கள் மத்தியில் இந்த பஸ்களுக்கு அதிக வரவேற்பு இருக்கின்றது.

அதிர்வுகள் குறைவான சொகுசு பயணத்தை வழங்குவதில் வால்வோ சொகுசு பஸ்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டன. நெருக்கடி இல்லாத சொகுசான இருக்கைகளுடன் பல்வேறு தொழில்நுட்ப சமாச்சாரங்கள் சேர்ந்துதான் உங்களது ஒவ்வொரு பயணத்தையும் செம்மையாக்குகின்றன.

பெங்களூர் - ஜோத்பூர் என்றில்லை, மிக நீண்ட தூர வழித்தடங்களில் தற்போது பெரும்பாலான பஸ் நிறுவனங்கள் இயக்குவது வால்வோ பி9ஆர் மற்றும் பி11ஆர் ஆகிய மாடல்கள்தான். இரண்டுமே மல்டி ஆக்சில் அமைப்புடையதுதான்.

ஆனால், பி11ஆர் பஸ்சின் கடைசி ஆக்சிலில் இருபுறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும் ஒற்றை சக்கரங்கள் முன்புற சக்கரங்கள் திரும்புவதற்கான எதிர்புறத்தில் திரும்பும். இதனால், பஸ்சை குறுகிய சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் செலுத்துவதற்கும், திருப்புவதற்கும் எளிதாக இருக்கும்.

வால்வோ பி9ஆர் பஸ்சைவிட பி11ஆர் பஸ் அதிக நீளம் கொண்டது. இந்த பஸ்களில் 53 பயணிகள் வரை செல்ல முடியும். தற்போது பி11ஆர் பஸ்சின் 9400PX என்ற வால்வோ பஸ் மாடல் இந்தியாவின் மிக நீளமான பஸ் மாடல்களில் ஒன்று. இது 14.5 மீட்டர் நீளம் கொண்டது.

நீண்ட தூர வழித்தடங்களில் இப்போது இந்த பஸ் மாடலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பஸ்சிலும் ஐ ஷிஃப்ட் கியர்பாக்ஸ் மற்றும் எதிர்புறத்தில் சக்கரங்கள் திரும்பும் அமைப்புடைய பின்புற ஆக்சில் போன்றவை சிறப்பம்சங்களாக உள்ளன.

நீங்கள் பயணிக்கும் மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களில் பின்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு ஆக்சில்களில் இரண்டாவதாக இருக்கும் ஆக்சிலில் இருபுறத்திலும் தலா ஒரு சக்கரங்கள் இருந்தால், அது திரும்பும் திறன் பெற்றதாக கருதலாம். இந்த பஸ்கள் 180 டிகிரி கோணத்தில் திரும்பும் திறன் கொண்டதாக இருக்கும்.

அதேநேரத்தில், இயக்குவதற்கான செலவீனத்தில் பி9ஆர் பஸ் சிறப்பாக இருப்பதால், பெரும்பாலான மிக நீண்ட தூர வழித்தடங்களில் இந்த பஸ் மாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலமாக, கட்டணத்தையும் குறைவாக நிர்ணயிக்க முடியும்.

வால்வோ பி9ஆர் பஸ்சில் 340 எச்பி பவரை அளிக்க வல்ல 9.4 லிட்டர் யூரோ-3 மாசு அம்சம் கொண்ட டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐ-ஷிப்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. இ

இந்த ஐ ஷிப்ட் கியர்பாக்ஸ் மூலமாக அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான அதிர்வுகள், சிறப்பான செயல்திறன் போன்ற பல தொழில்நுட்ப சாதகங்களை பெற முடிகிறது. இந்த பஸ்களில் மிகசக்திவாய்ந்த டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அதிக டார்க்கை வழங்கும் திறன் கொண்ட இந்த எஞ்சின்கள் உடனடி பிக்கப்பையும், சிறப்பான செயல்திறன் மூலமாக, அதிவேகத்தில் பயணிக்கும் வாய்ப்பையும் இந்த பஸ்கள் பெறுகின்றன. இந்த பஸ்களில் 300 லிட்டர் மற்றும் 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், சொகுசான பயணத்தை வழங்குவதற்கு ஏதுவாக ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆக்சில்களிலும் ஆன்ரோல் பார் அமைப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், மிகுந்த பாதுகாப்பான, அதிக நிலைத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன.

வால்வோ நிறுவனத்தின் இபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், சரிவான சாலைகளில் செல்லும்போது சீராகவும், அதிக நிலைத்தன்மையுடன் பஸ்சை செலுத்தும் வால்வோ காம்பேக்ட் ரிட்டார்டர் என்ற பிரேக் அமைப்பும் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. அவசர சமயத்திற்கு வால்வோ எஞ்சின் பிரேக் சிஸ்டமும், ட்யூப்லெஸ் டயர்களும் தடங்கல் இல்லா பயணங்களை வழங்குகிறது.

சில மணிநேர பஸ் பயணங்களே அலுத்து போய்விடும் நிலையில், கிட்டத்தட்ட 36 மணிநேர பஸ் பயணம் அலுப்பூட்டுவதாகவே இருக்கும் என்று நினைப்பது இயல்பு. ஆனால், இந்த பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலானோர் எந்த சிரமும் இல்லாமல் பயணித்ததாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இந்த வழித்தடத்தில் ரூ.1,500 முதல் ரூ.2,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விமானக் கட்டணத்தை ஒப்பிடும்போது இது மிக குறைவு என்பதால் பயணிகள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ரயிலிலும் பொது பெட்டியில் ஏறிக்கொண்டு அவஸ்தை பட வேண்டாம்.

சரியான நேரத்தில் ஓட்டல்களில் இந்த பஸ்கள் நிறுத்தப்படுவதாக பலர் தெரிவித்துள்ளனர். பலர் தூங்கியே பொழுதை கழித்ததாக தெரிவிக்கின்றனர். வால்வோ பி9ஆக் பஸ் 1,950 கிமீ தூரத்தை 31 மணிநேரத்தில் கடந்துவிட்டதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ஹைதராபாத்- டெல்லி இடையில் நேரடி பஸ் சேவையை துவங்குவதற்கு பஸ் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாம்.

வால்வோ பஸ்களை போன்றே மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஸ்கானியா மல்டி ஆக்சில் பஸ் மாடல்களும் நீண்ட தூர வழித்தடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பஸ் மாடல்களும் தற்போது வாடிக்கையாளர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Tuesday, September 27, 2016, 14:25 [IST]
English summary
Interesting Details About India's Longest Bus Route. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos