மணிக்கு 7,200 கிமீ வேகத்தை தொட்ட உலகின் ஒரே விமானம் இதுதான்!

Written By:

மோட்டார் வாகனங்களின் வேகம் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பல தசாப்தங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட நார்த் அமெரிக்கன் எக்ஸ்- 15 விமானம்தான் உலகிலேயே அதிவேக தொட்டு சாதனை படைத்த விமானமாக இன்றளவும் பெருமையை தாங்கி நிற்கிறது.

ஆம், மணிக்கு 7,200 கிமீ வேகத்தில் பறந்து சாதனை படைத்த இந்த விமானம்தான், மனிதன் மூலமாக இயக்கப்பட்ட உலகின் அதிவேக விமானம். இந்த விமானத்தை பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

அமெரிக்க விமானப்படையின் பயன்பாட்டிற்காக நார்த் அமெரிக்கன் எக்ஸ்- 15 விமானம் உருவாக்கப்பட்டது. சோதனை அடிப்படையில் அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா அமைப்பின் எக்ஸ் வரிசையில் இந்த விமானம் வெளிவந்தது. விண்ஓடம் மற்றும் அதிவேக போர் விமானத்தை உருவாக்குவதற்கான முன் மாதிரியாக தயாரிக்கப்பட்டது.

இன்றைய நவீன தொழில்நுட்பங்களுக்கு சவால் விடும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருந்தது நார்த் அமெரிக்கன் எக்ஸ்- 15 விமானம். 1960ல் அதிக உயரத்தில் பறந்து புதிய சரித்திர சாதனை படைத்தது. அதாவது, கர்மன் லைன் என்று அழைக்கப்படும் வளி மண்டல அடுக்குக்கும், விண்வெளிக்கும் இடையிலான விளிம்பு பகுதிக்கு மிக நெருக்கமாக பறந்து சாதனை படைத்தது.

அதாவது, புவியிலிருந்து 100 கிமீ உயரத்தில் இந்த விமானம் பறந்தது. இந்த விமானத்தின் மூலமாக பெறப்பட்ட தகவல்களை கொண்டு விண்வெளி ஓடங்களை தயாரிப்பதற்கான பல அடிப்படை விஷயங்களையும், தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான விஷயங்களையும் நாசா அமைப்பு பெற்றது.

1954ம் ஆண்டு இந்த ஹைப்பர்சானிக் ரக விமானத்தை வடிவமைக்கும் திட்டம் வெளியிடப்பட்டது. இந்த விமானத்தின் ஏர்ஃப்ரேம் எனப்படும் உடல்கூடு அமைப்பை நார்த் அமெரிக்கன் ஏவியேஷன் நிறுவனமும், ராக்கெட் எஞ்சினை தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பை ரியாக்ஷன் மோட்டார்ஸ் நிறுவனமும் ஏற்றன.

இந்த விமானமானது நாசாவின் பி-52 மதர் ஷிப் என்ற விமானம் தாங்கி விமானம் மூலமாக 13.7 கிமீ உயரத்திற்கு எடுத்துசெல்லப்பட்டு மணிக்கு 805கிமீ வேகத்தில் விமானம் பறக்கும்போது, வானில் விடுவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இரண்டு ராக்கெட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது. பின்னர், ஒரு ராக்கெட் எஞ்சின் கொண்டதாக மாற்றப்பட்டது. முதலில் இருந்த ராக்கெட் எஞ்சின்கள் எத்தில் ஆல்கஹால் மற்றும் திரவ ஆக்சிஜன் மூலமாக இயக்கப்பட்டது. பின்னர் பொருத்தப்பட்ட ஒற்றை எஞ்சின் அமோனியா மற்றும் திரவ ஆக்சிஜனில் இயங்கியது. மேலும், அதிவேகத்தை எட்டுவதற்காக ஹைட்ரஜன் பெராக்ஸைடு எரிபொருளும் பயன்படுத்தப்பட்டது.

மூன்று எக்ஸ்-15 விமானங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த விமானங்களை இயக்குவதற்கு 15 விமானிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், இந்த விமானத்தை பூமியிலிருந்து 80 கிமீ உயரத்திற்கு மேலே செலுத்திய 8 பைலட்டுகள் நேரடியாக நாசாவின் விண்வெளி ஆய்வு வீரர்களுக்கான அணியில் நேரடியாக இடம்பிடித்தனர். ஆனால், 2005ம் ஆண்டு முதல் விமானப்படையில் இருந்து நேரடியாக விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த விண்வெளி விமானமானது 50 அடி 9 இன்ச் நீளமும், 22 அடி 4 இன்ச் அளவுக்கு இறக்கை அகலமும், 13 அடி 6 இன்ச் உயரமும் கொண்டது. ஒரு பைலட் மட்டுமே இயக்கு வசதி கொண்ட இந்த விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 450 கிமீ தூரம் மட்டுமே பறக்கும். ராக்கெட் எஞ்சின்கள் அந்தளவுக்கு எரிபொருளை உறிஞ்சித் தள்ளும்.

கடந்த1967ம் ஆண்டு அக்டோபர் 3ந் தேதி இந்த விமானத்தை வில்லியம் ஜே பீட் நைட் என்பவர் மணிக்கு 7,274 கிமீ வேகத்தில் இயக்கி புதிய சாதனை படைத்தார். அதாவது, மேக் 6.72 என்ற வேகத்தில் இயக்கி உலகின் புருவத்தை உயர்த்தினார். இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களிலேயே மனிதர் இயக்கிய அதிவேக விமானம் இதுதான்.

இந்த விமானத்தை நிலவில் காலடி வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோரும் இயக்கியிருக்கின்றனர். இதிலிருந்துதான் விண்வெளி வீரர்களாக அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த விமானத்தை மணிக்கு 6,419 கிமீ வேகத்தில் இயக்கியிருக்கிறார். அதாவது, மேக் 5.74 வேகத்தில் இயக்கினார்.

இந்த விமானம் மொத்தமாகவே 85 வினாடிகள்தான் எரிபொருளில் இயங்கும். வினாடிக்கு 4,000 அடி உயரத்திற்கு மேல் எழும்பும் திறன் கொண்டது. எனவே, விமானத்தை இயக்கும்போது ஒரு வினாடி கட்டுப்படுத்துவதை விட்டாலும் பைலட்டுக்கு கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான்.

1967ம் ஆண்டு நார்த் அமெரிக்கன் எக்ஸ்-15 விமானம் ஒன்று வெடித்து சிதறியது. இதில், அந்த விமானத்தை இயக்கிய மைக்கேல் ஆடம்ஸ் என்ற பைலட் பலியானார். இந்த சம்பவத்தையடுத்து, இந்த விமானத் திட்டத்தை நாசா அமைப்பு கைவிட்டது. தற்போது அருங்காட்சியங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Monday, October 10, 2016, 13:13 [IST]
English summary
Interesting Details About World's Fastest North American X15 Plane. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos