ஜே20 ஐந்தாம் தலைமுறை விமானத்தை அறிமுகப்படுத்திய சீனா... நறநறப்பில் நான்...!!

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சீனா அறிமுகம் செய்திருக்கிறது. இந்த விமானத்தின் சிறப்பம்சங்கள், இதே ரகத்தில் நம்மிடம் ஏதாவது இருக்கிறதா என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

முதல்முறையாக தனது ஜே20 ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சீனா அறிமுகம் செய்திருக்கிறது. நேற்றுமுன்தினம் நடந்த விமான கண்காட்சியில் இரண்டு ஜே20 போர் விமானங்கள் சாகசம் செய்து பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தது.

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து ஐந்தாம் தலைமுறை அம்சங்கள் கொண்ட போர் விமானத்தை தயாரித்த உலகின் மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுவிட்டது. இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானம் நிச்சயம் இந்தியாவுக்கு ஆபத்தானதாகவே கருத முடியும். ஏனெனில், இந்த விமானமானது ஸ்டீல்த் எனப்படும் ரேடாரில் சிக்காமல் எதிரிகளின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இந்த விமானத்தை பற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

செங்க்டு ஜே20 என்ற பெயரில் இந்த போர் விமானம் குறிப்பிடப்படுகிறது. சீனாவின் செங்க்டு ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் தயாரிக்ப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டிலேயே இந்த விமானம் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அனைத்து சோதனைகள், ஆய்வுகளுக்கு பின்னர் சீன விமானப்படையில் 2018ம் ஆண்டிலிருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த விமானத்தை தயாரிக்கும் பணிகள் 1990களில் துவங்கப்பட்டது.

இது பெரிய வகை போர் விமானமாக இருக்கிறது. ரேடாரில் சிக்காத வகையில் டெல்டா விங் எனப்படும் இறக்கை அமைப்பு உள்ளது. டெல்டா ரக இறக்கை அமைப்பு மூலமாக மிக அதிக உயரத்தில், சூப்பர்சானிக் வேகத்தில் இந்த விமானம் பறக்க முடியும். அமெரிக்காவின் எஃப் வரிசை ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் டிசைனை சீனா காப்பியடித்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டும் விமர்சகர்களால் வைக்கப்படுகிறது.

இது பெரிய வகை போர் விமானமாக இருக்கிறது. ரேடாரில் சிக்காத வகையில் டெல்டா விங் எனப்படும் இறக்கை அமைப்பு உள்ளது. டெல்டா ரக இறக்கை அமைப்பு மூலமாக மிக அதிக உயரத்தில், சூப்பர்சானிக் வேகத்தில் இந்த விமானம் பறக்க முடியும்.

இந்த விமானம் இரண்டு எஞ்சின்கள் கொண்டது. புரோட்டோடைப் மாடலில் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட சாட்டர்ன் 117எஸ் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் டபிள்யூஎஸ்15 என்ற அதிசெயல்திறன் மிக்க எஞ்சினை பொருத்துவதற்கு செங்க்டு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

இந்த விமானத்தில் மிக நவீன மின்னணு கட்டுப்பாட்டு வசதிகள் உள்ளன. மூன்று எல்சிடி திரைகள் உள்ளன. அதுதவிர, பைலட் எளிதில் காண்பதற்கான ஹெட் அப் டிஸ்ப்ளே திரையும் உள்ளது. ஆயுதங்களை ஏவும் கட்டுப்பாட்டு சாதனங்களை சீனாவின் ஏ ஸ்டார் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது.

எதிரி விமானங்களை கண்டறிவது, இடைமறிப்பது, தாக்குதல் நடத்துவது என அனைத்து பணிகளையும் செய்யும் வல்லமை இந்த விமானத்திற்கு உண்டு. இந்த விமானத்தில் வானில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் குறைந்த தூர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை பொருத்த முடியும்.

இந்த விமானம் 20 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும், 4.45 மீட்டர் உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மூன்று லேண்டிங் கியர்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மணிக்கு 2,100 கிமீ வேகம் வரை பறக்கும் வல்லமை கொண்ட இந்த போர் விமானம், வினாடிக்கு 304 மீட்டர் உயரத்திற்கு மேல் எழும்பும் திறன் படைத்தது.

இந்த விமானத்தில் 11,340 கிலோ எரிபொருளை நிரப்பும் வசதி கொண்ட எரிபொருள் டேங்க்குகள் உள்ளன. இதன்மூலமாக, 3,400 கிமீ தூரம் வரை பறந்து செல்லும்.

32 டன் எடை கொண்ட இந்த விமானமானது 36 டன் எடையை சுமந்து மேல் எழும்பி பறக்கும் திறன் கொண்டது. ஒரு பைலட் இயக்கும் வசதி கொண்ட இந்த போர் விமானத்தில் பிஎல்-10 மற்றும் பிஎல்-12 ஆகிய ஏவுகணைகளை பொருத்துவதற்கான வசதிகள் உள்ளன.

இதையெல்லாம் படித்த பின்னர், எதிரியாக கருதப்படும் சீனாவிடம் ஐந்தாம் தலைமுறை விமானம் வந்துவிட்டதே, நம்மிடம் எதுவம் இல்லையா என்ற கேள்வி எழும். ஆம், ரஷ்யாவுடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை இந்தியா தயாரித்து வருகிறது.

சுகோய்/எச்ஏஎல் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் தயாரிக்கப்பட உள்ள இந்த புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம் 2022ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அடுத்த ஆண்டு ரஷ்யா விமானப்படையில் சேர்க்கப்பட இருக்கும் புதிய PAK FA T50 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை இந்திய விமானப்படையின் டெஸ்ட் பைலட்டுகள் இயக்கிப் பார்க்கவும் அந்நாடு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதனிடையே மற்றொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். உலகிலேயே அதிக ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனால், ஐந்தாம் தலைமுறை விமானத்தை சீனா உருவாக்கிவிட்ட நிலையில், இப்போதுதான் நான்காம் தலைமுறை விமானங்களை விமானப்படையில் சேர்க்க முனைப்பு காட்டி வருகிறது.

எப்போதுமே பிற நாடுகளிடமிருந்து போர் விமானங்கள் மற்றும் ராணுவ ஆயுதங்களை வாங்க இந்தியா முட்டி மோதுகிறது. ஆனால், நவீன போர் விமானங்களை தயாரிக்கும் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட எந்தவொரு நாடும் புதிய தலைமுறை போர் விமானங்களை உடனடியாக விற்க விரும்புவதில்லை.

அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட போர் விமானத்தை உருவாக்கும் வரை அவை வெளிநாடுகளுக்கு கொடுப்பதில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் இந்தியா காத்திருந்து காத்திருந்து போர் விமானங்களை வாங்கும் அவல நிலை இருக்கிறது.

ஆனால், சீனாவின் யுக்தி வேறு. வெளிநாடுகளிடம் வாங்குவதற்கு காத்திருக்காமல் சொந்த போர் விமானத்தை தயாரிக்கும் பணிக்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும், முதலீடுகளையும் அள்ளி தந்து காரியத்தை குறித்த காலத்தில் முடித்துவிட்டது.

இப்போது நான்காம் தலைமுறை ரஃபேல் போர் விமானத்துக்காக ஒப்பந்தம் போட்டு காத்திருக்கிறோம் என்பதே கசப்பான உண்மை. நாம் ஐந்தாம் தலைமுறை விமானத்தை பெறுவதற்குள், வல்லரசு நாடுகள் ஆறாம் தலைமுறை போர் விமானத்தை தயாரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Photo Credit: Youtube, APP,Wiki commons and China Xinhua News

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ராணுவம் #military
Story first published: Thursday, November 3, 2016, 15:47 [IST]
English summary
Interesting Facts About China's new J-20 stealth fighter. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos