பாகிஸ்தான் விமானங்களை திணறடித்த ஜிநாட் போர் விமானத்தின் சிறப்புகள்!

பாகிஸ்தான் விமானங்களை திணறடித்த இந்திய விமானப்படையின் ஜிநாட் போர் விமானத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Written By:

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சிறு பிரச்னை கூட பெரிய அளவில் பரபரக்கப்படுகிறது. கடந்த காலத்தில் அந்த நாட்டுடன் நிகழ்ந்த போர்கள்தான் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சுதந்திரத்திற்கு பின் தனது கொள்கைகள் மூலமாக அமெரிக்காவுடன் நட்பு பாராட்டிய பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பெரும் பயன் கிட்டியது. அவ்வாறு கிடைத்த ராணுவ பலத்தை பிரயோகிப்பதற்காக காஷ்மீர் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு இந்தியாவை சீண்டத் துவங்கியது பாகிஸ்தான்.

கடந்த 1965ம் ஆண்டு நடந்த இந்தோ-பாக் போரில் அமெரிக்கா வழங்கியிருந்த சாபர் விமானங்களை வைத்துக்கொண்டு பாகிஸ்தான் போட்ட ஆட்டம் உலகறியும். அவ்வாறு பாகிஸ்தான் போட்ட ஆட்டத்தை அவ்வப்போது குட்டு வைத்து அடக்கிய பாகிஸ்தானை நடுங்க வைத்தது இந்தியாவிடம் இருந்த ஜிநாட் போர் விமானங்கள்.

பாகிஸ்தானிடமிருந்து சாபர் போர் விமானங்கள், ஜிநாட் விமானத்தை விட தொழில்நுட்பத்தில் சிறந்தவையாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப திறன் குறைவாக இருந்த ஜிநாட் விமானத்தை வைத்தே பல பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா வீழ்த்தியது வரலாறு.

1971ம் ஆண்டு மீண்டும் ஏற்பட்ட வான் சண்டையில் பாகிஸ்தான் விமானப்படையின் ஆறு சாபர் போர் விமானங்கள் காஷ்மீரத்தில் ஊடுருவின. அங்கிருந்த விமான தளத்தை தகர்ப்பதே திட்டமாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இதனை அறிந்த இந்திய விமானப்படை காஷ்மீரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜி-நாட் போர் விமானங்களை களத்தில் இறக்கியது.

இரண்டு ஜிநாட் விமானங்களையும் சுட்டு வீழ்த்திவிட ஆறு பாகிஸ்தான் போர் விமானங்களும் எவ்வளவு முயற்சி செய்தும் பலனில்லை. பாகிஸ்தான் விமானங்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது இந்திய விமானப்படையின் இரண்டு ஜிநாட் விமானங்கள்.

மிக நெருக்கமாக எதிரி போர் விமானங்களுடன் வானில் சண்டைபோடும் முறையை 'நாய் சண்டை' போர் முறை என்று குறிப்பிடுகின்றனர். அதுபோன்ற, போர் முறையில் ஜிநாட் விமானங்களிடம் வலிய வந்து மாட்டிக்கொண்டு திணறியது பாகிஸ்தான் சாபர் போர் விமானங்கள்.

குறிப்பாக, நிர்மல் ஜித் சிங் செகான் என்ற போர் விமானி ஓட்டிய ஜிநாட் விமானம் பாகிஸ்தான் விமானங்களுக்கு தண்ணி காட்டிய விதம் இன்றளவும் புகழப்படுகிறது. இந்த கடுமையான வான் போரில் இரண்டு சாபர் விமானங்களை ஜிநாட் வீழ்த்தியது. இறுதியில் 4 போர் விமானங்களுக்கு தண்ணி காட்டிய ஜிநாட் எதிரிகளின் இலக்குக்கு இறையானது.

இந்த நிலையில், திறன் குறைவாக இருந்தாலும், சாபர் விமானங்கள் ஜிநாட் விமானங்களிடம் தோற்றுப்போனது குறித்த விஷயங்கள் பின்னாளில் வெளிவந்தது. அதாவது, சாபர் போர் விமானங்கள் நேருக்கு நேர் போர் புரிவதில் வல்லமை கொண்டவை.

அதேநேரத்தில், செங்குத்தாக செல்வதில் அவை திறன் குறைந்ததாக இருந்தன. இதனை பயன்படுத்தி ஜிநாட் போர் விமானிகள் செங்குத்தான திசையில் மேலும், கீழுமாக ஜிநாட் விமானத்தை செலுத்தி பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு தண்ணி காட்டின.

மேலும், காஷ்மீரத்து விமான தளத்தை அழிக்கும் கனவுடன் வந்த பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு நிர்மல் சிங் செலுத்திய ஜிநாட் விமானம் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் கால காலத்துக்கும் பேச வைத்தது. போர் முடிந்த பின்னரும், இந்த சம்பவத்தில் வீர தீரமாக செயல்பட்ட நிர்மல் சிங்கையும், ஜி நாட் விமானத்தையும் பாகிஸ்தான் விமானிகள் வெளிப்படையாக பாராட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

மற்றொரு சிறப்பம்சமாக சொல்லப்படுவது, இதன் சிறிய வடிவம் காரணமாக, வானில் நடைபெறும் போர் விமானங்களுக்கு இடையிலான நாய் சண்டை போர் முறையின்போது இந்த விமானத்தை பிற விமான ஓட்டிகள் எளிதாக கண்டறிய முடியாது. அத்துடன், தாழ்வாக பறக்கத் துவங்கிவிட்டால், எதிரி விமானங்களால் சிறிதும் கண்டுபிடிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

இந்த போர் விமானத்தை ஒரு போர் விமானி இயக்க முடியும். 28 அடி நீளமும், 22 அடி அகலமும் கொண்டது. 2,175 கிலோ எடை கொண்ட இந்த போர் விமானமானது, சுமையுடன் சேர்த்து 4,100 கிலோ எடை வரை சுமந்து பறக்கும் திறன் கொண்டது.

இந்த விமானத்தில் பிரிஸ்டல் சிடெல்லே ஓர்பியஸ் 710-01 டர்போஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த விமானம் மணிக்கு 1,120 கிமீ வேகம் வரை பறக்க வல்லது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 800 கிமீ தூரம் பறக்கும். இந்த விமானத்தில் 30 மிமீ விட்டமுடைய இரண்டு அடென் துப்பாக்கிகள், 227 கிலோ எடை கொண்ட இரண்டு வெடிகுண்டுகள் மற்றும் 76 மிமீ ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்தியா பயன்படுத்திய ஜிநாட் போர் விமானங்கள் இங்கிலாந்தை சேர்ந்த ஃபாலன்ட் ஏர்கிராஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு. 1955ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்பட்டு 1959ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தது. 1979ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.

ஜிநாட் விமானங்களின் செயல்திறனை பார்த்து வியந்து அந்த விமானத்தை லைசென்ஸ் பெற்று தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, எச்ஏஎல் நிறுவனத்தால் எச்ஏஎல் அஜீத் என்ற பெயரில் இந்த விமானம் உற்பத்தி செய்தது.

இந்த போரில் பாகிஸ்தான் போர் விமானங்களை அலற விட்ட ஜிநாட் போர் விமானி நிர்மல் ஜித் சங் செகானுக்கு பரம் வீர் சக்ரா என்ற நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதை பெற்ற ஒரே இந்திய விமானப்படை வீரர் இவர் ஒருவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Images Via Wiki Commons

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ராணுவம் #military
Story first published: Thursday, February 2, 2017, 12:59 [IST]
English summary
Interesting Facts About Gnat Fighter Jet.
Please Wait while comments are loading...

Latest Photos