இந்தியா வரும் லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-16 போர் விமானம் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

Written By:

இந்திய விமானப்படையில் சேவையாற்றி வரும் ரஷ்ய தயாரிப்பு போர் விமானங்கள் பழமையாகிவிட்டதால், புதிய போர் விமானங்களை சேர்ப்பதற்கு அவசியமாகி உள்ளது. இதையடுத்து, தற்போது அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திடமிருந்து போர் விமானங்களை பெறுவதற்கு இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

தேஜஸ் போர் விமான உற்பத்தி துரிதமாக நடந்து வந்த போதிலும், உடனடி தேவைக்காக லாக்ஹீட் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது. இந்த விமானத்தை பற்றிய சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகின் சிறந்த போர் விமான மாடல்களில் ஒன்றாக லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-16 போர் விமானம் கருதப்படுகிறது. அமெரிக்க விமானப்படைக்காக இந்த போர் விமானத்தை முதலில் உருவாக்கியது ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனம். அதன்பிறகு, 1993ல் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்தின் விமானத் தயாரிப்பு பிரிவை லாக்ஹீட் மார்ட்டின் கையகப்படுத்தியது.

அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் வொர்த் என்ற இடத்தில்தான் இந்த போர் விமானம் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், முதல்முறையாக இந்தியாவில் இந்த போர் விமான உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இந்த விமானத்தை Fighting Falcon என்ற பெயரிலும் அழைக்கின்றனர்.

தற்போது இந்தியாவிற்கு லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-16 பிளாக் 70 என்ற போர் விமான மாடல் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்த போர் விமானம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த விமானத்திற்கு அதிக அளவிலான உதிரிபாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்து பெறப்பட உள்ளது.

1976ம் ஆண்டு அறிமுகமான இந்த போர் விமானம் உலகிலேயே மிகவும் வெற்றிகரமான போர் விமான மாடல்களில் ஒன்று. தொழில்நுட்ப ரீதியிலும் வல்லமையான மாடலாக கூறப்படுகிறது. இந்த விமானம் நான்காம் தலைமுறை சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. இது இலகு ரகத்திலான ஒற்றை எஞ்சின் பொருத்தப்பட்ட விமானம். இந்த விமானத்தில் ஒரு பைலட் இயக்க முடியும்.

பன்முக பயன்பாட்டு வகையை சேர்ந்த இலகு ரக போர் விமானம். இந்த போர் விமானம் வழக்கமான போர் விமான வடிவமைப்பு விலகி தாத்பரியங்களிலிருந்து சற்று வித்தியாசமான கோணத்தில் உருவாக்கப்பட்டது. அதாவது, ஏரோடைனமிக்ஸ் விதிகளிலிருந்து சற்றே விலக்கு கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் போர் விமான மாடல்.

ஏரோடைனமிக்ஸ் விதிகளிலிருந்து சற்றே விலகி  உருவாக்கப்பட்ட, இந்த விமானம் சிறந்த கையாளுமை கொண்ட விமானமாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, அதிவேகத்தில் இந்த விமானம் அதிக நிலைத்தன்மையுடன் செல்லும் திறன் வாய்ந்தது.

இந்த விமானத்தின் மிக முக்கிய சிறப்புகளில் ஒன்று நீர் குமிழி போன்ற காக்பிட் அமைப்பு. இதர போர் விமானங்கள் போன்று இணைப்பு சட்டங்களும் இல்லை. இதன்மூலமாக, பைலட் சுற்றுப்புறத்தை எளிதாக கவனித்து இயக்க ஏதுவாகிறது.

விமானத்தின் கீழ்பாகத்தை 40 டிகிரி கோணத்தில் கூட கண்காணித்து இயக்க முடியும். இதன் உடல் அமைப்பும் மிகச் சிறப்பாக இருப்பதால், எளிதாக வளைந்து நெளிந்து செல்ல ஏதுவாகிறது.

லாக்ஹீட் மார்ட்டின் எஃப்16 போர் விமானத்தை உற்பத்தி செய்வதற்கான செலவீனமும் பிற போர் விமானங்களை விட குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பராமரிப்பு செலவும் மிக குறைவாக இருக்கும். இதுவே, இந்த போர் விமானத்தை மத்திய பாதுகாப்புத் துறை தேர்வு செய்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த விமானத்தில் பிராட் அண்ட் ஒயிட்னி எஃப்100-பிடபிள்யூ-200 என்ற எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. உலகில் முதல்முறையாக ஃப்ளை- பை- ஒயர் என்ற நவீன கட்டுப்பாட்டு அமைப்புடன் வந்த முதல் போர் விமான மாடலும் இதுதான். இதன்மூலமாக, விமானத்தை துல்லியமாக கட்டுப்படுத்த முடியும்.

லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-16 போர் விமானம் மேக்-2 என்ற வேகத்தில், அதாவது மணிக்கு 2,120 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. அதிகபட்சமாக 4,220 கிமீ தூரம் வரை பறக்கும்.

வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள், 20மிமீ குழல் விட்டமுடைய எந்திர துப்பாக்கிகள். வெடிகுண்டுகள் இந்த போர் விமானத்தில் பொருத்த முடியும்.

இந்த போர் விமானத்தில் அதிநவீன வகை ரேடார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த ரேடார் மூலமாக துல்லியமாக விமானத்தை செலுத்த முடியும். எதிரிகளின் தாக்குதல்களிலிருந்தும் எளிதாக தப்புவதற்கான வசதிகளும் உண்டு.

பாகிஸ்தான் உள்பட உலகின் 26 நாடுகளில் இந்த போர் விமானம் பயன்பாட்டில் இருக்கிறது. கார்கில் போரின்போது இந்த விமானத்தையே இந்திய எல்லையோர கண்காணிப்புக்கு பாகிஸ்தான் விமானப் படை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட போர் விமானங்களில் ஒன்றாகவும் இதனை கூறலாம். இதுவரை 4,588 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த போர் விமானம் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் ஆர்டர் இல்லாததால், இந்த போர் விமானத்தை இந்தியாவில் தலையில் கொண்டு வந்து லாக்ஹீட் மார்ட்டின் கட்டுவதாக புகார் எழுந்தது. இந்த போர் விமானத்தை இந்தியா வாங்குவதற்கு பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதேநேரத்தில், 2025 வரை இந்த போர் விமானத்தை இயக்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்திருப்பதை லாக்ஹீட் மார்ட்டின் சுட்டி காட்டி இருக்கிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About Lockheed Martin F16 Fighter Jet.
Story first published: Friday, June 30, 2017, 13:16 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos