மேட் இன் இந்தியா ஆளில்லா ராணுவ விமானம்... ஆளில்லா போர் விமானமாகவும் மேம்படுத்தப்படும்!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தபஸ் 201 ஆளில்லா விமானம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதன் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

ஆளில்லா போர் விமானத்தை தயாரிக்கும் முயற்சிகளில் இந்திய பாதுகாப்புத் துறை தீவிரமாக இறங்கியிருக்கிறது. அந்த நோக்கத்தை எட்டுவதற்கான அடிப்படை முயற்சியில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆளில்லா போர் விமானம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ராணுவ விமான சோதனை தளத்தில் இந்த புதிய ஆளில்லா விமானம் முதல்முறையாக பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. அட்டாக் யுஏவி என்ற ரகத்தில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக இந்தியாவின் சொந்த முயற்சியில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய ஆளில்லா விமானத்தின் சிறப்புகளை தொடர்ந்து காணலாம்.

1980களில் இருந்து இந்த ரஸ்டம் வகை ஆளில்லா உளவு விமானங்கள் தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் ரஸ்டம் 1 என்ற ஆளில்லா விமானம் 2009ம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது.

அது உளவு பார்க்கவும், எல்லைக் கண்காணிப்பு பணிகளுக்கும் ஏற்றதாக இருந்தது. இந்தநிலையில், விமானி இல்லாமல் எதிரிகளின் இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ரஸ்டம் ஆளில்லா போர் விமானத்தை வடிவமைக்கும் திட்டம் கையிலெடுக்கப்பட்டது.

பெங்களூரில் செயல்பட்டு வரும் டிஆர்டிஓ என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் மத்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில்தான் இந்த விமானமானது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. விமான மேம்பாட்டு நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மற்றும் பெல் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

ரஸ்டம் 2 விமானத்தின் பெயர் தற்போது தபஸ் 201 என்று மாற்றப்பட்டுள்ளது. இது நடுத்தர வகையை சேர்ந்த நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானம். அமெரிக்காவின் பிரடேட்டர் என்ற ஆளில்லா விமானத்துக்கு நிகரானதாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, அதிகபட்சமாக 24 முதல் 30 மணி நேரம் வரை வானில் பறக்கும் திறன் கொண்டது.

சாதாரண சமயங்களில் ராணுவத்தின் உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும். போர் அல்லது தாக்குதல் அவசியம் ஏற்படும்போது ஆயுதங்களை வைத்து எதிரிகளின் இலக்குகளை அழிக்க பயன்படுத்த முடியும்.

போர் விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளாலும், எதிரிகளின் ஏவுகணை இலக்குகளில் சிக்கினாலும், உயிரிழப்பு ஏற்படும். ஆனால், இந்த ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவதன் மூலமாக உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.

சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சர்ஜிக்கல் தாக்குதலில் எல்லைக்கு அருகில் இருந்த தீவிரவாத முகாம்கள் ஆளில்லா உளவு விமானங்கள் மற்றும் செயற்கைகோள் மூலமாக கண்காணிக்கப்பட்டு, அதன் பிறகு தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த பணியில் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட ஆளில்லா உளவு விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த விமானமானது 9.5 மீட்டர் நீளமும், 20.6 மீட்டர் இறக்கை அகலமும் கொண்டது. 1,800 கிலோ எடை கொண்டது. 350 கிலோ எடையை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது. இதன்மூலமாக, உளவு சாதனங்கள், நேவிகேஷன் கருவிகள் மற்றும் ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்ததாக குறிப்பிடப்படுகிறது.

இந்த விமானத்தில் தலா 100 எச்பி சக்தியை வழங்க வல்ல இரண்டு என்பிஓ சாட்டர்ன் 36 எம்டி எஞ்சின்கள் இறக்கைகளில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு 150 கிமீ வேகத்தில் பறக்கும். சாதாரணமாக மணிக்கு 125 கிமீ முதல் 175 கிமீ வேகம் வரை பறந்து செல்லும்.

மோசமான வானிலைகளிலும் தாக்குப் பிடித்து தளத்திற்கு திரும்பும். மின்னணு கட்டுப்பாட்டு வசதி கொண்ட இந்த விமானத்தில் தானாகவே தரையிறங்கவும், டேக் ஆஃப் செய்யவும் கூடிய ஆட்டோபைலட் வசதியும் உண்டு.

எதிர்காலத்தில் ஆளில்லா போர் விமானத்தை தயாரிப்பதற்கான முதல் படியாக இதனை கூறலாம். எல்லையில் வாலாட்டும் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க சர்ஜிக்கல் தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்தியாவிலேயே சொந்தமாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஆளில்லா விமானத்தை பயன்படுத்த முடியும்.

இந்த விமானத்தில் ஆயுதங்களை பொருத்தி தாக்குதல் நடத்துவதற்கான தொழில்நுட்பங்களை சேர்க்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிகழ்ந்தால், இது ராணுவத்திற்கு மிகப்பெரிய வலிமையை தரும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ராணுவம் #military
Story first published: Thursday, November 17, 2016, 14:31 [IST]
English summary
Interesting Facts About Made In India Rustom-2 UAV.
Please Wait while comments are loading...

Latest Photos