அமெரிக்காவின் அதிநவீன போர்க்கப்பல் ஸும்வால்ட் பற்றிய சிறப்புத் தகவல்கள்!

Written By:

உலகின் மிக அதிநவீன போர்க்கப்பலை அமெரிக்கா தயாரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த புதிய போர்க்கப்பல் அமெரிக்க கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான வடிவமைப்பும், அதிநவீன தொழில்நுட்ப சிறப்புகளும் நிறைந்த இந்த புதிய போர்க்கப்பல் மூலமாக அமெரிக்காவின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும் என்று அந்நாட்டு கடற்படை அதிகாரி ரே மாபஸ் தெரிவித்தார். இந்த பிரம்மாண்டமான புதிய போர்க்கப்பல் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

வழக்கமான கப்பல்கள் போன்று இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பை பெற்றிருக்கிறது. அதாவது, கப்பலை தலைகீழாக கவிழ்த்தால் எப்படியிருக்குமோ, அதுபோன்று தோற்றமளிக்கிறது. எதிரிகளின் ரேடார்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க போர்க்கப்பல்களில் மிகவும் பிரம்மாண்டமான வடிவம் கொண்ட கப்பல்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த கப்பல் 610 அடி நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ரேடாரிலிருந்து பார்க்கும்போது சிறிய படகு போன்று தோற்றமளிக்குமாம்.

இந்த கப்பல் சப்தம் மிகவும் குறைவாக இருக்குமாம். இந்த கப்பலை கண்டுபிடிப்பது, இதன் நடமாட்டத்தை கண்காணிப்பது, தாக்குவது என்பது முடியாத காரியமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த கப்பலில் ரேடார்கள், சென்சார்கள் மற்றும் ஏவுகணகளை ஏவுவதற்கான பீரங்கி குழல்கள் அனைத்துமே மறைவாக பொருத்தப்பட்டிருக்கிறது. வெளியில் தெரியாதவாறு அவை இருப்பதும் இதன் முக்கிய விஷேசம்.

இந்த கப்பலில் இருக்கும் முக்கிய பீரங்கி மூலமாக 600 ஏவுகணைகளை செலுத்த முடியும். 70 மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்குகளை கூட இந்த ஏவுகணைகளை செலுத்தி துல்லியமாக அழிக்க முடியும்.

15,000 டன் எடை கொண்ட இந்த ஸும்வால்ட் கப்பலில் தற்காத்து கொள்வது மற்றும் தாக்குதலுக்கு தேவைப்படும் சாதனங்களை இயக்குவதற்கு அதிக மின்சாரம் தேவைப்படும். அதற்காக, இந்த கப்பலில் 78 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் சாதனங்கள் உள்ளனவாம். அதாவது, ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை சப்ளை செய்யும் அளவுக்கு திறன்கொண்டது.

இந்த கப்பலில் தோமஹாக் க்ரூஸ் ஏவுகணைகள், சீ ஸ்பேரோ ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகளை செலுத்த முடியும்.

இந்த போர்க்கப்பல் ஆடாமல் அசையாமல் விமானம் போல செல்லுமாம். அதாவது, ஒரு கப் காபியை டேபிளின் மீது பயமில்லாமல் வைக்கலாம். அந்தளவுக்கு இது மிகவும் நிலையாக செல்லும் வகையில் இதன் வடிவமைப்பு இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பலில் 147 அதிகாரிகள், வீரர்கள், பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அதாவது, அமெரிக்க வரலாற்றில் 1930ம் ஆண்டிற்கு பின் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட போர்க்கப்பல்களில் மிகவும் குறைவான பணியாளர் எண்ணிக்கை கொண்ட கப்பல் இதுதானாம். அந்தளவுக்கு அனைத்தும் தானியங்கி கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தில் இயங்கும்.

மொத்தம் 32 கப்பல்கள் 9.6 பில்லியன் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், ராணுவத்துக்கான நிதி குறைக்கப்பட்டதையடுத்து, தற்போது மூன்று ஸும்வால்ட் கிளாஸ் கப்பல்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், DDG-1000 என்ற முதலாவது கப்பல்தான் அமெரிக்க கடற்படையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த போர்க்கப்பலில் 2 ரோல்ஸ்ராய்ஸ் எம்டி30 டர்பைன்கள், 2 ரோல்ஸ்ராய்ஸ் ஆர்ஆர்4500 டர்பைன் ஜெனரேட்டர்கள் மற்றும் 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் உதவியுடன் இயங்குகிறது. இந்த கப்பல் மணிக்கு 56 கிமீ வேகம் வரை செல்லும்.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் சிறிய ராணுவ படகுகளுக்கு தலைமை விகித்த ஸும்வால்ட் என்ற அதிகாரியின் நினைவாக இந்த கப்பலுக்கு பெயர் வைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் வெண்கல பதக்கம் வென்ற ஸும்வால்ட், மிக இளவயதில் இந்த பட்டத்தை பெற்ற கடற்படை அதிகாரியாகவும் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ராணுவம் #military
English summary
Interesting Facts About Most Advanced Stealth Destroyer Zumwalt. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos