மாருதி நெக்ஸா ஷோரூமில் தீ விபத்து - மர்மமான முறையில் இருவர் பலி..!

Written By:

மும்பையில் உள்ள மாருதி நெக்ஸா ஷோரூமில் எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஷோரூம் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது. காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பட்ஜெட் விலையிலான கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்று மாருதி நிறுவனத்திற்கு ஒரு பெயர் உள்ளது.

இதன் காரணமாகவே இந்தியர்களிடத்தில் நம்பகத்தன்மை நிறைந்த நிறுவனமாகவும் மாருதி விளங்குகிறது.

எளியவர்களுக்கான கார் நிறுவனம் என்ற பெயரை போக்க அந்நிறுவனம் தீர்மானித்து சொகுசு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவீக்களையும் தயாரித்து வருகிறது.

விட்டாரா பிரேஸா, பலினோ, சியாஸ், இக்னிஸ் மற்றும் எஸ்-கிராஸ் ஆகிய கார்களை புதிதாக களமிறக்கியுள்ளது மாருதி சுசுகி நிறுவனம். இந்தக் கார்களை விற்பனை செய்ய நெக்ஸா என்ற பிரத்யேக ஷோரூம்களையும் திறந்து வருகிறது மாருதி.

மாருதி நிறுவனத்தின் சொகுசுக் கார்களை மட்டும் விற்பனை செய்வதற்காக பிரத்யேகமாக 200க்கும் மேற்பட்ட நெக்ஸா ஷோரூம்களை திறந்துள்ளது மாருதி நிறுவனம். அதில் ஒன்று தான் எதிர்பாராத விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

மகரஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள கோப்ரா-கார்கா பகுதியில் எக்ஸல் ஆட்டோவிஸ்டா என்ற டீலரின் கட்டுப்பாட்டில் நெக்ஸா ஷோரூம் உள்ளது.

ஆதித்யா பிளேனட் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இந்த ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஷோரூமில் நேற்று அதிகாலை 5.15 மணியளவில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தியணைப்பு துறையினர் விரைந்து வருவதற்குள்ளாக மளமளவென தீ பரவி பற்றி எரியத் தொடங்கியது.

5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு முற்றிலும் அணைக்கப்பட்டது.

தீ அணைக்கப்பட்ட பின்னர் சேதாரம் குறித்து மதிப்பிடச் சென்ற தீயணைப்பு துறையினர் எதிர்பாராத வகையில் அங்கு இரண்டு பேர் எரிந்த நிலையில் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இறந்துகிடந்த இருவரும் அந்த ஷோரூமின் காவலாளிகளாக இருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்ட போது இவர்கள் இருவரும் ஏன் தப்பிக்க முயற்சிக்கவில்லை? ஷோரூம் வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்ததா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

எனினும், காவலாளிகள் தப்பிக்க முயற்சிக்காமல் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஷோரூமின் உரிமையாளரிடத்தில் காவல்துறையினர் விசாரித்தனர். மேலும் ஷோரூமில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என்றும் அச்சம் எழுந்துள்ளது.

இது குறித்தும் தீ முதலில் எங்கு ஏற்பட்டது, மின்சார கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

English summary
Read in Tamil about Maruti suzuki showroom catches fire in mumbai and 2 dead mysteriously.
Please Wait while comments are loading...

Latest Photos