மெட்ரோ ரயில் பாலத்தில் கார் மோதியதில் மூத்த அமைச்சரின் மகன் பலி..!

Written By:

ஹைதரபாத் நகரின் மையத்தில் இன்று அதிகாலை நடந்த சொகுசுக் கார் விபத்தில் அமைச்சர் ஒருவரின் மகன் பலியாகியுள்ளார்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் ஹைதராபாத் நகரின் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் வேகமாக வந்த சொகுசுக் கார் ஒன்று மெட்ரோ ரயில் பாலத்திற்கான தூண் ஒன்றில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கியது மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி என்ற விலையுயர்ந்த காராகும். இதனை ஓட்டி வந்தது ஆந்திர மாநிலத்தின் அமைச்சரான பி.நாராயனனின் மகன் நிஷித் நாராயனன் என்பது தெரியவந்துள்ளது.

ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள சாலை எண் 36ல் மெட்ரோ ரயில் மேம்பாலத் தூணில் நிஷித் ஓட்டி வந்த கார் அதிவேகத்தில் சென்று மோதியுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் காரில் நிஷித்துடன், அவரின் நண்பர் ராஜ ரவிச்சந்திரா என்பவரும் பயணித்துள்ளார்.

நிஷித்தின் நண்பரான ராஜ ரவிச்சந்திரா ஆந்திராவின் பிரபல தொழிலதிபரான எம்.எம். கிருஷ்னாவின் மகன் ஆவார்.

நிஷித் ஓட்டிவந்த பென்ஸ் கார் மெட்ரோ ரயில்வே தூண் மீது அதிவேகத்தில் மோதியதில் நிதிஷ் மற்றும் அவரது நண்பரான ராஜ ரவிச்சந்திரா இருவரும் பலத்த காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கிய காரில் இருந்து இருவரையும் மீட்டு அருகிலிருந்த அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வழியிலேயே அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த அமைச்சர் பி.நாராயனனின் மகன் நிதிஷின் வயது 23 ஆகும். இந்த விபத்தால் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் ஹைதராபத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி மிகவும் வலிமையான எஸ்யூவிக்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன.

எண்ணற்ற வலிமை, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்திருந்தாலும் அதிவேகத்தில் வாகனத்தை செலுத்தும் போது உயிரிழப்பை தடுக்க முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

நள்ளிரவில் சொகுசுக் கார்கள் விபத்தில் சிக்குவதும், உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது.

விபத்தில் சிக்கிய காரை ஓட்டிய அமைச்சரின் மகன் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னர் தான் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த நிஷித் நாராயனா, ஆந்திராவின் பிரபலமான நாராயனா கல்விக்குழுமத்தின் இயக்குனராக இருந்துவந்தார். இந்த குழுமத்திற்கு தமிழகத்திலும் கல்வி நிலையங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவின் நகராட்சி நிர்வாகத்துறையின் அமைச்சரான பி.நாராயணா இங்கிலாந்து நாட்டிற்கு பணி நிமித்தமான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

விபத்தில் மகன் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஹைதராபாத் விரைந்துள்ள அவர் இன்று மாலை லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து அங்கிருந்து நெல்லூர் புறப்பட்டுச் செல்கிறார்.

விபத்தில் உயிரிழந்த அமைச்சரின் மகனுடை உடலுக்கு நாளை அவரது சொந்த ஊரில் இறுதிச்சடங்குகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பி.நாராயணனின் மகன் பலியானதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக எதிர்பாராத வகையில் இடிமின்னலுடன் மழையும், ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது.

இதன் காரணமாக நகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதுவும் விபத்து ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

via v6 news

Story first published: Wednesday, May 10, 2017, 16:20 [IST]
English summary
Read in Tamil about Andhra minister's son killed in car accident.
Please Wait while comments are loading...

Latest Photos