கார் பந்தயம்... இந்தியாவின் 'தல' தமிழ்நாடு - பகுதி-2

Written By:

மோட்டார் பந்தய வளர்ச்சிக்காக நிதி தேவைப்பட்ட சமயத்தில், சோழவரம் பந்தய களத்தில் சொகுசு கேலரிகள் அமைக்கப்பட்டு, இருக்கைகள் நிறுவனங்களிடம் விற்பனை செய்யப்பட்டன. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த குலுக்கல் பெட்டியில் விருந்தினர்கள் பெயரை எழுதிப்போட்டு தேர்வு செய்து வழக்கம்.

இதில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருக்கிறார்.

ஒருமுறை சிறப்பு விருந்தினராக வந்த எம்ஜிஆரிடம், பி.ஐ.சந்தோக் தன்னுடைய வழக்கில் தடுமாற்றத்துடன் தமிழில் ஏதோ சொல்ல முனைந்துள்ளார். அவரது சங்கடத்தை புரிந்துகொண்டு சட்டென ஆங்கிலத்தில் பதில் தந்து கலகலப்பூட்டினார் எம்ஜிஆர். ஆனால், அதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் எம்ஜிஆர் தமிழில்தான் பேசினார்.

விமானப்படை தளம்...

தமிழக மோட்டார் பந்தய துறைக்கு ஆரம்ப புள்ளியாக செயல்பட்ட சோழவரம் பந்தய களம் முன்னதாக இந்திய விமானப்படையின் தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. கைவிடப்பட்ட அந்த விமானப் படைத் தளத்தில் விபத்துக்கள் அதிகம் நிகழ்ந்தன. இதுதொடர்பாக, லண்டனை சேர்ந்த ராயல் ஆட்டோமொபைல் க்ளப் [RAC] என்ற அமைப்பிடம் சென்னை மோட்டார் பந்தய அமைப்பு ஆலோசனை கோரியது.

விபத்தை தவிர்க்க 35 அடி அகலத்திற்கு மட்டுமே பந்தய களம் இருக்க வேண்டும் என்று ஆர்ஏசி அமைப்பு கொடுத்த ஆலோசனையின்படி, 150 அடி அகலமுடைய சோழவரம் பந்தய களம் இரண்டு தடங்கள் கொண்டதாக மாற்றப்பட்டது.

கிட்டங்கியான பந்தய களம்...

அதேநேரத்தில், சோழவரம் விமானப் படை தளத்தை தற்காலிக தானிய கிட்டங்கியாக மாநில அரசு பயன்படுத்த துவங்கியது. இந்த இடையூறு காரணமாக, அந்த இடத்தில் தொடர்ந்து ரேஸ் நடத்துவதில் பிரச்னைகள் எழுந்தன. இதையடுத்து, 1980களில் இருங்காட்டுக்கோட்டையில் புதிய பந்தய களம் அமைக்கும் பணிகள் துவங்கின. இந்த களம் 1990ல் திறக்கப்பட்டது. இன்றைய தலைமுறை பந்தய வீரர்களை ஈன்றெடுத்த பெருமை இந்த களத்திற்கு உண்டு.

1960களில் இருந்து 1980கள் வரை சோழவரம் பந்தய களத்தில் ஏராளமான மோட்டார் பந்தய போட்டிகள் நடந்தன. இந்திய மோட்டார் பந்தய வரலாற்றின் 'கோல்டன் பீரியடாக' இதனை குறிப்பிடலாம். இதனைத்தொடர்ந்து, 1980 தற்போது இருங்காட்டுக் கோட்டை களம் தமிழக மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது.

வலுசேர்த்த கோவை மாநகரம்...

மறுபுறத்தில், தமிழகத்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சிக்கும்,வாகனத் துறைக்கும் பெரிதும் பங்களிப்பை வழங்கி வரும் இடம் செல்வ செழிப்பு மிக்க கோவை மாநகரம். 1960களில் சூலூரில் உள்ள விமானப் படை தளத்தில் அனுமதி பெற்று மோட்டார் பந்தயங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, கோவையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்கியவர் கரிவர்தன். லட்சுமி மில் அதிபரான கரிவர்தன் மோட்டார் வாகன பந்தயத்தில் அதீத ஆர்வம் காட்டியவர். உடலாலும், பொருளாலும் நம் நாட்டு மோட்டார் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

மெக்கானிக்கல் எஞ்சினியரான கரிவர்தன் சொந்தமாக ரேஸ் காரை வடிவமைத்து அசத்தினார். விமான விபத்தில் உயிரிழந்த கரிவர்தன் நினைவாகத்தான் இன்று கோவை மோட்டார் வாகன பந்தய களம் கரி மோட்டார் ஸ்பீடுவே என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல ரேஸர்கள் உருவாக காரணகர்த்தாவாகவும், பந்தய கார் வடிவமைப்பிலும் அறியப்படும் கரிவர்தன் குறித்து தென் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகின் பிதாமகன் என்ற தலைப்பில் ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பை ஏற்கனவே வழங்கி இருக்கிறோம்.

திறமையான வீரர்கள்...

சென்னை மற்றும் கோவை பந்தய களங்கள் மூலமாக பல தன்னிகரற்ற மோட்டார் பந்தய வீரர்கள் தமிழகத்தில் இருந்து உருவாகினர். தமிழக ரேஸர்கள் என்றவுடன் நரேன் கார்த்திகேயனும், கருண் சந்தோக்கும் சட்டென நினைவிற்கு வந்தாலும், தமிழகத்தில் மிக திறமையான பல மோட்டார் வாகன பந்தய வீரர்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றனர்.

நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், அர்மான் இப்ராஹீம் தவிர்த்து சரத்குமார், ரஜினி கிருஷ்ணன் என ஏராளமான பந்தய வீரர்களை உருவாக்கித் தந்தது மட்டுமல்ல, இந்தியாவின் முதல் பெண் மோட்டார் பந்தய வீராங்கனையை உருவாக்கி தந்த பெருமையும் தமிழகத்தையே சாரும். ஆம், இன்று மோட்டார் பந்தய பிரியர்களை மூக்கின் விரல் வைக்கும் அளவுக்கு கலக்கும் வீராங்கனை அலிஷா அப்துல்லாவும் சென்னையை சேர்ந்தவர்தான்.

தமிழகத்தில் பல திறமையான வீரர்களில் ஒருவர் ரஜினி கிருஷ்ணன். கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பான ஸ்பான்சர்கள் கிடைக்கும் நிலையில், பைக் பந்தய வீரர்களுக்கு போதிய ஸ்பான்சர் கிடைக்காமல் திறமையிறந்தும் பலனில்லாத நிலை இருக்கிறது. அந்த வறுமையை திறமையால் வென்றெடுத்தவர்களில் ரஜினி கிருஷ்ணனும் ஒருவர்.

தமிழக ரேஸ் பாரம்பரியத்துக்கு நடிகர்கள் அஜீத், ஜெய் போன்றோரும் வலு சேர்த்து வருகின்றனர். இவற்றை மட்டும் அளவுகோலாக வைத்துக் கொள்ள முடியாது. இன்று நாடு முழுவதும் நடைபெறும் பைக் சாகச நிகழ்ச்சிகளில் தமிழகத்தை சேர்ந்த அணிகள் கலக்கி வருகின்றன. நம் நாட்டின் எந்த மூலையில் நடக்கும் மோட்டார் பந்தயங்களிலும் தமிழக வீரர்கள் முன்னிலை வகிப்பதை காண முடியும்.

தமிழக வீரர்கள் இல்லாமல் நடக்கும் பந்தயங்கள் அல்லது சாகச நிகழ்ச்சிகள் உப்பு சப்பிலா நிகழ்வாக பார்க்கப்படும் அளவுக்கு இன்றைய நிலைமை மாறி இருப்பது நிதர்சனம்! தமிழர்களின் ரத்தத்திலும், கலாச்சாரத்திலும் ஜல்லிக்கட்டு போன்றே வாகனங்கள் மீதான பற்றும், பாசமும் ஊறிப் போயிருப்பதை மறுக்க இயலாது.

ஜல்லிக்கட்டு போல, இன்று மோட்டார் வாகன பந்தயங்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றுக்கிறது. கார் பந்தயம்... இந்தியாவின் 'தல' தமிழ்நாடு... !!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Tuesday, April 18, 2017, 10:09 [IST]
English summary
மோட்டார் பந்தய வளர்ச்சிக்காக நிதி தேவைப்பட்ட சமயத்தில், சோழவரம் பந்தய களத்தில் சொகுசு கேலரிகள் அமைக்கப்பட்டு, இருக்கைகள் நிறுவனங்களிடம் விற்பனை செய்யப்பட்டன. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த குலுக்கல் பெட்டியில் விருந்தினர்கள் பெயரை எழுதிப்போட்டு தேர்வு செய்து வழக்கம்.
Please Wait while comments are loading...

Latest Photos