கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண மர்மத்தில் புதிய 'ட்விஸ்ட்'!!

கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண கடல் பரப்பின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் வகையில் புதிய கூற்றை கொலராடோ பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுபற்றிய தகவல்களை காணலாம்.

Written By:

கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண கடல் பரப்பின் மர்மங்களை அவிழ்ப்பதற்கு விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதில் உண்மையான காரணம் என்று எதையும் சொல்ல முடியாமல் வெறும் கூற்றாகவே கூறி வருகின்றனர்.

பெர்முடா முக்கோண கடல் பகுதியில் செல்லும் கப்பல், விமானங்கள் காணாமல் போவதற்கு கடந்த மார்ச் மாதம் புதிய கூற்று ஒன்றை விஞ்ஞானிகள் முன் வைத்தனர். இதனால், அந்த மர்ம பிரதேசத்தின் முடிச்சு அவிழ்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. அந்த கூற்றின் விபரங்களையும், அதைத்தொடர்ந்து இப்போது வெளியிடப்பட்டிருக்கும் புதிய கூற்றையும் இந்த செய்தியில் காணலாம்.

கடந்த மார்ச் மாதம் நார்வே நாட்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட கூற்றுப்படி, பெர்முடா முக்கோண கடல்பகுதியில் அடியில் ராட்சத பள்ளங்கள் இருப்பதாக நார்வே நாட்டை சேர்ந்த ஆர்டிக் பல்கலைகழக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

நார்வே நாட்டையொட்டிய, வட மத்திய பாரன்ட் கடல்பகுதியில் இந்த ராட்சத பள்ளங்கள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். சில பள்ளங்கள் 800 மீட்டர் நீளமும், 150 அடி ஆழமும் கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில் அபரிமிதமான மீத்தேன் படிமங்கள் நிறைந்துள்ளன. இந்தநிலையில், பெர்முடா முக்கோண கடற்பகுதியில் இருக்கும் ராட்சத பள்ளங்கள் வழியாக அந்த மீத்தேன் வாயு கசிவு ஏற்படுவதாகவும், அந்த கசிவின்போது பள்ளங்களில் பெரிய வெடிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், கடல் நீரின் அடர்த்தியை குறைத்து கப்பல்கள் மிதக்க முடியாத நிலையை ஏற்பட செய்வதாகவும் கூறுகின்றனர். மேலும், இந்த பள்ளங்களிலிருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு காரணமாகவும், அபரிதமான வெப்பம் காரணமாகவும் அந்த பகுதியில் செல்லும் விமானங்களும், கப்பல்களும் விபத்தில் சிக்குவதாக தெரிவித்திருந்தனர்.

இந்த ராட்சத பள்ளங்களிலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு காரணமாக கப்பல்கள் பாதிக்கப்படுவதை ஒப்புக்கொண்டாலும், விமானங்கள் மாயமாவது குறித்த குழப்பம் நீடித்தது.

இந்த நிலையில், கப்பல் மற்றும் விமானங்கள் மாயமாவதற்கான புதிய காரணத்தை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கொலராடோ பல்கலைகழகத்தின் வானியல் செயற்கைகோள் ஆய்வாளரான ஸ்டீவ் மில்லர் கூறுகையில்," பொதுவாக மேகங்கள் சீரற்ற வடிவத்திலேயே படர்ந்திருக்கும். ஆனால், பெர்முடா முக்கோண பகுதியில் விந்தையான வடிவத்தில் மேகங்கள் காணப்படுகின்றன.

அறுங்கோண வடிவத்தில் காணப்படும் இந்த மேகங்கள் பெர்முடா முக்கோண பகுதியின் மேற்கு பகுதியில் படர்ந்துள்ளன. கிட்டத்தட்ட 30 கிமீ முதல் 90 கிமீ பரப்பளவில் இந்த மேகங்கள் காணப்படுகின்றன.

இந்த அறுங்கோண வடிவ மேகங்களுக்கு கீழே கடல் பகுதியில் மணிக்கு 170 மைல், அதாவது மணிக்கு 273 கிமீ வேகத்தில் தீவிர சூறாவளிகள் ஏற்படுகின்றன. இந்த சூறாவளி காற்றானது சீராக இல்லாமல், கடல் மட்டத்திலிருந்து காற்று பந்துகள் போன்று உருவாகி அந்த பகுதியில் தீவிரமாக வீசுகின்றன.

இந்த காற்று பந்துகளானது கடல் மட்டத்திலிருந்து மேல் எழும்பி மீண்டும் கீழ் நோக்கி திரும்புகின்றன. அப்போது 45 அடி வரை பெரும் நீர் சுழற்சி ஏற்பட்டு ராட்சத கடல் அலைகள் உருவாகின்றன. மேலும், அந்த காற்று பந்துகளானது, வெடிகுண்டுகள் போல உருவாகி, அந்த பகுதியில் செல்லும் கப்பல் மற்றும் விமானங்கள் நிலைகுலைந்து கடலில் வீழ்ந்துவிடுகின்றன.

அறுங்கோண மேகத்திற்கு கீழ் இருக்கும் பகுதிகளை செயற்கைகோள் மூலமாக ஆய்வு செய்தபோது இந்த தகவல்கள் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். காற்று பந்துகள்தான் வெடிகுண்டுகள் போல மாறி, கப்பல், விமானங்களை தாக்குவதாகவும் உறுதியாக தெரிவித்துள்ளார். இந்த கூற்றை ராண்ட் செர்வனி என்ற வானியல் ஆய்வாளரும் ஆமோதித்துள்ளார்.

இது உண்மையான காரணமா அல்லது இதுவும் நூற்றாண்டு காலமாக பெர்முடா முக்கோணத்தின் மீது வைக்கப்படும் வெற்று கூற்றாக மாறிவிடுமா என்பதை உறுதிப்படுத்த அடுத்த கூற்று வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். பெர்முடா முக்கோணத்தின் பற்றிய முக்கியத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

வட அட்லாண்டிக் கடல் பகுதியின் பெர்முடா, மியாமி[வடக்கு புளோரிடா] மற்றும் போர்டோ ரிகா தீவு பகுதிகளுக்கு இடையிலான முக்கோண வடிவிலான கடல் பகுதியை பெர்முடா முக்கோணம் என்று அழைக்கின்றனர். இது 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்ட அபாயகரமான பகுதி.

இந்த கடல் பகுதியை கடந்து செல்லும் விமானங்கள், கப்பல்கள் மர்மமான முறையில் காணாமல் போகின்றன. இதுவரையில் 40 கப்பல்களும், 20 விமானங்களும் இந்த பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளன. எனவே, இதனை சாத்தானின் முக்கோணம் என்று அழைக்கின்றனர்.

இந்த பகுதியில் இருக்கும் அதீத காந்த விசை காரணமாக, விமானங்களும், கப்பல்களும் கவர்ந்து உள்ளிழுக்கப்படுவதாக இதுவரை கருதப்பட்டு வருகிறது. வேறு சிலர் அந்த பகுதியில் ஏற்படும் சூறாவளி காரணமாக கப்பல்கள் காணாமல் போவதாக கூறுகின்றனர். ஆனால், யாருமே ஊர்ஜிதமான முடிவுக்கு வர முடியவில்லை. அவ்வளவு மர்ம கடல் பிரதேசமாக இருக்கிறது பெர்முடா முக்கோணம்.

வரலாற்றில் பெர்முடா முக்கோணத்தில் பதிவான முதல் விபத்து 1908ம் ஆண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 1918ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு சொந்தமாக யுஎஸ்எஸ் சைக்கிளோப்ஸ் என்ற கப்பல் இந்த பகுதியில் காணாமல் போனது. இந்த கப்பலில் பயணித்த 306 பேரின் கதி என்ன என்று இன்றுவரை தெரியவில்லை. எவ்வித தடயமும் சிக்கவில்லை.

கடந்த 1950ல் இருந்து 1975ம் ஆண்டு வரை 428 கப்பல்களும், படகுகளும் இந்த பகுதியில் மாயமாகிவிட்டதாக ஒரு தகவல் கூறி, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. 1945ம் ஆண்டில் பெர்முடா முக்கோண பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று மாயமானது.

இந்த விமானத்தை தேடுவதற்கு அனுப்பப்பட்ட குழுவினர் சென்ற விமானமும் மாயமானது. இதுபோன்று, பெர்முடா முக்கோணத்தை ஆய்வு சென்ற குழுவினரின் கப்பலும் மாயமானது. இந்த பகுதியில் இருக்கும் அமானுஷ்ய சக்தியால்தான் விமானங்களும், கப்பல்களும் மூழ்குவதாக கருதப்படுகிறது.

பெர்முடா முக்கோணத்தின் வழியாக சென்று கடந்த ஒரு சிலரும், அந்த பகுதியில் திடீர் ஒளிக்கீற்றுகள் தென்பட்டதாகவும், திசைக்காட்டி கருவிகள் செயல் இழுந்து போவதாகவும் கூறியிருக்கின்றனர். இது விஞ்ஞானிகளுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்ததே தவிர, உருப்படியான முடிவுக்கு வர முடியவில்லை.

கடந்த ஒரு நூற்றாண்டில் ஆயிரம் உயிர்களை காவு வாங்கி அமைதி காத்து வரும் பெர்முடா முக்கோணம் பற்றி விரிவான ஆய்வுகளும் தொடர்ந்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இப்போது கூறப்பட்டுள்ள கூற்றுதான் இறுதியானதா அல்லது வேறு காரணங்களுடன் ஏதாவது முடிவு எட்டப்படுமா என்பது தொடர்கதையாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Saturday, October 22, 2016, 14:08 [IST]
English summary
Mystery of Bermuda Triangle may have finally been solved. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos