காலா பட போஸ்டரில் ரஜினி பயன்படுத்திய வாகனத்தை விலைக்கு கேட்ட மஹிந்திரா நிறுவன தலைவர்: காரணம் என்ன?

Written By:

காலா பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ரஜினி அமர்ந்திருக்கும் காரை விலைக்கு கேட்டுள்ளார் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த். காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘காலா', சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் சமூகவலைத்தளங்களிலும் வைரலாக பரவிய நிலையில் இந்தப் போஸ்டர் குறித்த செய்தி ஒன்றை தான் நாம் பார்க்கவிருக்கிறோம்.

கபாலி என்ற மிகப்பெரிய மாஸ் ஹிட் படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினி - இயக்குனர் பா.ரஞ்சித் கூட்டணியில் தொடங்கப்பட்டுள்ள புதிய படம் காலா. இது தமிழகத்தில் இருந்து மும்பைக்கு சென்று அங்குள்ள தாராவி பகுதியில் கோலோய்ச்சும் நிழல் உலக தாதா பற்றிய கதை என்று கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் தயாரிப்பில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நேற்று (28/05/17)துவங்கப்பட்டது. முன்னதாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வியாழக்கிழமையன்று வெளியானது.

அந்த போஸ்டரில் ஏழைகள் வாழும் பகுதியான தாராவியின் பேக்டிராப்பில் கருப்பு ஜிப்பா, காவி வேஷ்டி சகிதமாக கருப்பு நிற கண்ணாடி அணிந்தபடி சிரித்த முகத்துடன் கார் ஒன்றின் மீது கால் மேல் கால் போட்டபடி ரஜினி அமர்ந்திருக்கிறார்.

இந்தப் போஸ்டர் வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது. ஒரு புறம் சாதிய ரீதியிலான கருத்துருக்கள் கொண்டிருப்பதாகவும் இந்தப் போஸ்டர் மீது விமர்சங்கள் எழுந்தன.

இது ஒருபுறமிருக்க, இந்தப் போஸ்டரால் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். அதற்கு காரணம் காலா பட போஸ்டரில் ரஜினி அமர்ந்திருப்பது, மஹிந்திரா நிறுவனத்தின் ‘தார்' எஸ்யூவி ஜீப் மாடல் மீது தான்.

ஆனந்த் மஹிந்திரா இது தொடர்பாக அவர் இரண்டு டிவீட்டுகளை டிவீட்டியுள்ளார்.
முதலாவதில், "மிகப்பெரிய சாதனையாளரான ரஜினி ஒரு காரை தனது சிம்மாசனமாக பயன்படுத்தும் போது அதுவும் கூட ஒரு சாதனையாளராக மாறிவிடுகிறது" என்று தனது நிறுவனத்தின் தார் ஜீப் மாடலை பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார்.

மஹிந்திரா நிறுவனத்தின் மியூசியத்திற்காக ரஜினி பயன்படுத்திய தார் ஜீப்பை வாங்க விரும்புவதாகவும், யாராவது இது தொடர்பாக தகவல் தெரிந்தால் உதவலாம் என்றும் தனது இரண்டாவது டிவீட்டில் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளமான டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திரா மிகவும் ஆக்டிவ் ஆக உள்ளார். ஏற்கெனவே ஒரு முறை இதே போன்றதொரு செயலில் ஆனந்த் மஹிந்திரா ஈடுபட்டுள்ளார். அதுவும் நம் டிரைவ்ஸ்பார்க் தளத்தில் செய்தியாக வெளிவந்தது நினைவிருக்கலாம்.

கேரளாவைச் சேர்ந்த சுனில் என்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் மீது கொண்ட ஆர்வத்தால் தனது ஆட்டோவின் பின்பகுதியை ஸ்கார்பியோ போல மாற்றியமைத்திருந்தார். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி ஆனந்த் மஹிந்திராவின் பார்வைக்கும் அது எட்டியது.

அப்போதும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்கார்பியோ போன்று மாற்றியமைக்கப்பட்ட இந்த ஆட்டோவை மஹிந்திரா மியூசியத்திற்காக வாங்க விரும்புவதாகவும், யாரேனும் இது குறித்து தகவல் தெரிந்தால் கூறவும் என பதிவிட்டிருந்தார்.

ஆட்டோ ஓட்டுநர் குறித்த தகவல் தெரிந்தவுடன் கூறியது போலவே அந்த ஆட்டோவை வாங்கி அதற்குப் பதிலாக அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு புதிய சுப்ரோ வாகனம் ஒன்றினை பரிசாக அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஜினி பயன்படுத்திய தார் ஜீப்பை கேட்டு பதிவு செய்துள்ளார். விவரம் தெரிந்தவர்கள் இது தொடர்பான தகவல்களை ஆனந்த் மஹிந்திராவிற்கு பகிரலாம்.

English summary
Read in Tamil about Anand Mahindra asks for sale of rajini used thar jeep in kaala movie's first look poster.
Please Wait while comments are loading...

Latest Photos