சீன விமானம் தாங்கி கப்பல்களால் இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலும் கிடையாது?

Written By:

அண்மையில் சொந்தமாக உருவாக்கிய முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை சீனா அறிமுகம் செய்தது. ஏற்கனவே, ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் இருக்கும் நிலையில், ரகசியமாக தயாரித்த இந்த புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலும் சீனாவின் கடற்படைக்கு மிகவும் வலிமை சேர்க்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய பெருங்கடலில் தனது ஆளுமையை அதிகரித்துக் கொள்வதற்கு ஏதுவாகவே இந்த புதிய கப்பலை சீனா களமிறக்கி உள்ளதாகவும், அது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் தரும் விஷயம் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், சீனாவின் புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல் மூலமாக இந்தியாவுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ரஷ்யாவிடம் இருந்து வாங்கி மாற்றங்கள் செய்யப்பட்ட லயோனிங் என்ற சீனாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் தற்போது பயிற்சிக்காகவே மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது இன்னமும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.

அதேநேரத்தில், நம் நாட்டின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பல் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அடுத்து விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலும் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், சீனா தனது இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை அறிமுகம் செய்துவிட்டாலும் கூட, அது முழுமையான பயன்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ஷான்டாங் கடலில் செலுத்தி சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

அதேநேரேத்தில், இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை சீனா வைத்திருந்தாலும் கூட, அந்நாட்டிற்கான சாதகங்கள் குறைவே. ஆனால், பூகோள ரீதியிலும், விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பயன்படுத்திய அனுபவத்திலும் இந்தியா முன்னிலை பெறுகிறது.

விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்குவதில் பல யுக்திகளை கையாள வேண்டி இருக்கும். இந்த வகை கப்பல்களை இந்தியா பல தசாப்தங்களாக பயன்படுத்தி வந்துள்ளதால், சீனாவைவிட மிகச் சிறப்பான முறையில் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்க முடியும்.

அதேநேரத்தில், விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்குவதற்கான யுக்திகளை வகுப்பதற்கும், கையாள்வதற்கும் சீனாவிற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும். மேலும், சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் அவசர கோலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவே பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஷான்டாங் விமானம் தாங்கி போர்க்கப்பலில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் இன்னும் பொருத்தப்படவில்லை என்றே தெரிகிறது. அவை முழுமை பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். அத்துடன், லயோனிங் மற்றும் ஷான்டாங் ஆகிய இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்களுமே இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்ப முடியாத நிலை இருக்கிறது.

ஏனெனில், தென் சீனா மற்றும் கிழக்கு சீனா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படையின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. பதட்டம் நிறைந்த அந்த கடல்பகுதியை காத்துக் கொள்ளவும், தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவுமே சீனாவிற்கு இந்த இரு கப்பல்களுமே போதாது.

எனவே, அவ்வப்போது இந்திய பெருங்கடலுக்கு சீன விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் விசிட் அடிக்கும். மேலும், பாகிஸ்தானின் க்வாடர் துறைமுகத்தையே சீனா பயன்படுத்த இருக்கிறது. அதேநேரத்தில், இந்த பிராந்தியத்தில் விமானம் தாங்கி கப்பல்களை நிலை நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

தளவாடங்கள் மற்றும் கப்பலுக்கு தேவையான பொருட்களை அனுப்புவதற்கு பூகோள ரீதியில் இந்தியாவுக்கு அதிக சாதகங்கள் உள்ளதாகவே கருதப்படுகிறது. எனவே, சீனாவின் புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் என்பது இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்ற கருதப்படுகிறது.

அதேநேரத்தில், இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை காட்டுவதற்காக இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை சீனா கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது 5 ஆண்டுகளாவது பிடிக்கும். அதற்குள் இந்தியாவும் தனது சொந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தொடர்ந்து களமிறக்கவும் திட்டமிட்டு இருக்கிறது.

மேலும்... #ராணுவம் #military
English summary
New Chinese Aircraft Carriers Really Threat For India?
Please Wait while comments are loading...

Latest Photos