காத்திருக்க வைத்ததாகக் கூறி சுங்கச்சாவடி ஊழியரை அடித்து உதைத்த எம்எல்ஏ - பரபரப்பு வீடீயோ..!

Written By:

10 நொடிகள் காத்திருக்க வைத்ததாகக் கூறி சுங்கச்சாவடி ஊழியர் ஒருவரை பாஜக எம்எல்ஏ ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஊழியர் ஒருவர் அடித்து உதைக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தியாவிலேயே சர்ச்சைகளுக்கு பெயர் போனது உத்தரபிரதேச மாநிலம். சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வென்ற பாஜக அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள சுங்கச்சாவடி ஒன்றில் ஊழியர் ஒருவர் ஆளும்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரால் அடித்து உதைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. மாநிலம் சீத்தாபூர் மாவட்டம், பிஸ்வன் தொகுதி பாஜக எம்எல்ஏ-வான மகேந்திர யாதவ் டெல்லியில் இருந்து லக்னோ நோக்கி நெடுஞ்சாலை எண் 24-ல் பயணம் செய்துகொண்டிருந்தார்.

எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் மற்றொரு வாகனத்தில் அவரின் வாகனத்தை பின்தொடர்ந்தவாறே வந்துகொண்டிருந்தனர்.

எம்எல்ஏவின் வாகனம் பரேலி அருகேயுள்ள ஃபாதேகன்ஞ் என்ற சுங்கச்சாவடிக்கு வந்தபோது அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர் சுங்கவரி செலுத்துமாறு கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.,வின் உதவியாளர், அந்த ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக அங்கு வந்த எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்களும் வரி செலுத்த மறுத்து தகராறு செய்துள்ளனர்.

இலவச அனுமதி தராததால் அடி உதை?

அப்போது காரில் இருந்து இறங்கி வந்த எம்.எல்.ஏ., தன்னை 10 வினாடிகள் காத்திருக்க வைத்ததற்காகவும், வரி செலுத்துமாறு கேட்டதற்காகவும் அந்த ஊழியரை சரமாரியாக அடித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.

சுங்கச்சாவடிகளில் எம்எல்ஏக்களின் வாகனம் இலவசமாக கடந்து செல்ல சிறப்பு சலுகை நடைமுறையில் உள்ளது.

எனினும், அது எம்எல்ஏ வாகனத்திற்கு மட்டுமேயான இலவச சலுகையாகும். இதனை பயன்படுத்தி தன்னுடைய ஆதரவாளர்களின் வாகனங்களுக்கும் அவர் சலுகை கேட்டதாக தெரிகிறது.

சுங்கச்சாவடி ஊழியர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாலேயே ஆத்திரத்தில் எம்எல்ஏ இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர் சார்பில் பரேலி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் சம்பவத்தில் ஈடுபட்டது சீத்தாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ ராகேஷ் ரத்தோர் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக எம்எல்ஏ ராகேஷ் ரத்தோரிடம் கேட்டபோது, சம்பவத்தில் ஈடுபட்டது பிஸ்வன் தொகுதி எம்எல்ஏ யாதவ் தான் என்றும் தான் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

சம்பவத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ யார் என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

எனினும் சுங்கச்சாவடி ஊழியரின் புகாரின் அடிப்படையில் பெயர் குறிப்பிடப்படாமல் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்டது யார் என அடையாளம் காணப்பட்ட பின்னர், எம்எல்ஏ பெயர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விஐபி கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக முதல்வர்கள், அமைச்சர்கள், கவர்னர்கள் கார்களில் உள்ள சிவப்பு விளக்குகளை அகற்றவேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இதன்பேரில் பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் தங்கள் காரில் உள்ள சிவப்பு விளக்குகளை அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் உ.பி.,யில் நடந்துள்ள இச்சம்பவம் விஐபி கலாச்சாரம் மீதான விமர்சனத்தை கடுமையாக்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் எம்பி ஒருவர் தனக்கு பிசினஸ் கிளாஸ் இருக்கை அளிக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக, விமான நிலைய நிர்வாகி ஒருவரை தனது காலணியால், 25 முறை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சுங்கச்சாவடி ஊழியரை பாஜக எம்எல்ஏ அடித்து உதக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை மேலே உள்ள ஸ்லைடரில் காணுங்கள்..

English summary
Read in Tamil about BJP MLA attacks tollgate employee for refusing free entry to his supporter's vehicle at UP. cctv video goes viral.
Please Wait while comments are loading...

Latest Photos