மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் பயணம்... மும்பை- புனே இடையே ஹைப்பர்லூப் போக்குவரத்து ஏற்படுத்த திட்டம்!

Written By:

விமானத்தை விட அதிவேக பயணத்தை வழங்க வல்ல ஹைப்பர் லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் அதி தீவிரமாக நடந்து வருகின்றன. உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து வசதி அபுதாபியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், மும்பை- புனே நகரங்களுக்கு இடையே ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்தி தர தயாராக இருப்பதாக, ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிபப் ஜி க்ரெஸ்ட்டா கூறியிருக்கிறார்.

பெங்களூரில் நடந்த தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்ட பிபப் ஜி க்ரெஸ்ட்டா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்தி தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மும்பையிலிருந்து புனே நகருக்கு இடையில் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான கட்டமைப்பை நிறுவுவதற்கான திட்டத்தை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்காரிடம் விருப்பம் தெரிவித்துள்ளோம்.

தற்போது முடிவு அவர் கையில்தான் உள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகளையும் துவங்கவும் தயார். மேலும், இந்த போக்குவரத்து திட்டத்திற்கான வழிமுறைகள் மற்றும் சட்ட வரைவுகளையும் வகுத்து தருவதற்கு கேட்டுக் கொண்டுள்ளோம்.

அதற்கு அமைச்சர் நிதின் கட்காரியும் இசைவு தெரிவித்துள்ளார். மேலும், ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்புக்கான திட்டத்தில் ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களிலும் 25 பொறியாளர்கள் எங்களுடைய திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இந்த திட்டத்தில் போதிய அனுபவமும், தொழில்நுட்ப வல்லமையும் இருக்கிறது," என்று தெரிவித்தார்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த க்ரெஸ்ட்டா, "எங்களுக்கு இப்போது நிதி ஏதும் தேவையில்லை. நிலத்தை மட்டும் ஒதுக்கீடு செய்தால் போதுமானது.

இந்த திட்டத்திற்கான போதிய நிதியை பெறுவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. மேலும், அரசு - தனியார் ஒத்துழைப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் முடியும்.

இந்தியாவில் சாலை கட்டமைப்புகள் மிக மோசமாக இருப்பதுடன், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. எனவே, இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஹைப்பர்லூப் போக்குவரத்து சிறந்ததாக அமையும் என்று தெரிவித்தார்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த விருப்பம் தெரிவித்து அணுகியிருப்பதுடன், முதலீடும் வழங்கியிருப்பதாக அவர் கூறினார். அபுதாபியில் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ராட்சத குழாய் அமைப்பில் பாட் என்ற சாதனங்கள் மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் இயக்கப்படும். சராசரியாக மணிக்கு 986 கிமீ வேகத்தில் இந்த பாட் சாதனங்கள் குழாய்க்குள் சீறிப் பாய்ந்து செல்லும். இவை விமானத்தைவிட வேகமானதாக இருக்கும்.

உதாரணத்திற்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு 25 நிமிடங்களில் சென்றுவிடும். இந்த ஹைப்பர்லூப் சாதனம் மிகவும் பாதுகாப்பானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது கூட எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி தரப்படுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Wednesday, December 7, 2016, 12:49 [IST]
English summary
Ready to build Hyperloop in India: HTT Co-Founder Gresta
Please Wait while comments are loading...

Latest Photos