ராயல் என்ஃபீல்டு பைக்கில் வாடிக்கையாளர் பட்டியலிடும் 40 உற்பத்தி குறைபாடுகள்..!

Written By:

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிதாக அதன் அட்வெஞ்சர் ரக ஹிமாலயன் பைக்கை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அது முதலே ஹிமாலயன் பைக் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழத் தொடங்கின.

முதல் கோனல் முற்றும் கோனல் என்பது போல ஹிமாலயன் பைக்கின் அறிமுக நிகழ்வின் போது ஒரு எதிர்பாராத சம்பவம் நடைபெற்றது.

ஹிமாலயன் பைக்கின் அறிமுக நிகழ்வை புகழ்பெற்ற டாக்கர் ரேலி ரேசரான சி.எஸ்.சந்தோஷை வைத்து நிகழ்த்தியது ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.

அந்த நிகழ்வின் போது ஹிமாலயன் பைக்கில் சந்தோஷ் செய்த சாகசத்தில், எதிர்பாராதவிதமாக பைக்கின் கால் வைக்கும் பகுதி உடைந்து விழுந்தது.

கடினமான நிலப்பரப்பிலும் பயணிக்கும் தன்மை கொண்ட ஒரு அட்வெஞ்சர் பைக் இந்த சாதாரண சாகசத்துக்கே தாக்குப்பிடிக்கவில்லை என்பதாக இதன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

அதன்பிறகு ஹிமாலயன் பைக்கை வாங்கியவர்கள் பலரும் வலைத்தளங்களில் அதன் மீது அதிருப்தி தெரிவித்தபடியே இருந்தனர்.

தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு எதிராக ஹிமாலயன் பைக் உரிமையாளர் ஒருவர் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது குறித்து விரிவாக காணலாம்.

கர்நாடக மாநிலம், கோலார் பகுதியைச் சேர்ந்த புனீத் என்பவர் கடந்த ஆண்டு ஜூன்1 ஆம் தேதி புதிய ஹிமாலயன் பைக்கை வாங்கியுள்ளார்.

பைக் வாங்கிய ஒரு வார காலத்திற்குள்ளாகவே அதில் என்னற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை கண்டறிந்தார் புனீத்.

பிரச்சனையின் தன்மை புரிந்து கொள்ள எண்ணி உள்ளூர் மெக்கானிக் ஒருவரிடம் தன் பைக்கை எடுத்துச் சென்ற புனீத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பெட்ரோல் டேங்கிலிருந்து எரிபொருள் கசிவது, இஞ்சின் பகுதியில் இருந்து எரிபொருள் கசிவது, வழக்கத்துக்கு மாறான இஞ்சின் சப்தம், கியர்பாக்ஸில் கோளாறு என வரிசையான பிரச்சனைகள் அதில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் பைக் பாகங்கள் சிலவற்றில் துரு பிடிப்பது, பெயிண்ட் உரிந்து விழுவது, பெட்ரோல் டேங்க் அடைத்துக்கொள்வது, சஸ்பென்ஷனில் கோளாறு என அந்தப் பட்டியல் நீண்டது.

இதுமட்டுமல்லாமல் சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென இஞ்சின் ஆஃப் ஆகி விடுவது, தொடர் பிரேக் டவுன் என அல்லல் பட்டுள்ளார் அவர்.

போதாக்குறைக்கு ஒரு முறை தன் பைக்கின் பாகம் ஒன்று உடைந்து விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த புனீத் இது குறித்து ராயல் என்ஃபீல்டிடம் முறையிட தீர்மானித்துள்ளார்.

தனது பிரச்சனைகளை ஆவனப்படுத்தி அது தொடர்பாக விளக்கம் தருமாறு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை நிர்வகித்து வரும் ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பினார் புனீத்.

ஒவ்வொரு பிரச்சனையையும் விளக்கி, புகைப்படமாக எடுத்து அதனை ராயல் என்ஃபீல்டு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய புனீத்துக்கு எந்த பதிலும் வராதது ஏமாற்றமே.

விரக்தியில் வேறு வழியில்லாமல் தரமில்லாத உற்பத்தி கோளாறுகள் கொண்ட பைக்கை விற்றதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார் புனீத்.

இந்த பிரச்சனை புனீத்துக்கு மட்டுமல்ல ஹிமாலயன் பைக் வாங்கிய பலருக்கும் இருப்பதாக இணைய ஃபோரம்களில் கருத்துகள் பரிமாறப்பட்டு வருகிறது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு அதன் வாடிக்கையாளர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மதிப்புமிக்க பிராண்டாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு பைக்கை சொந்தமாக்குவதை பலரும் பெருமையாக கருதுகின்றனர்.

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு என பிரத்யேக ரைடர்கள் குழுக்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ரைடர்களுக்கான ஜாக்கெட்டுகளை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதாக சர்ச்சை வெடித்தது.

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த பிரச்சனையை சட்டப்படி சந்திக்கவிருப்பதாக கூறியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள புனீத் அது குறித்து நியூஸ்9 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை மேலே காணுங்கள்.

via News9

Story first published: Monday, April 24, 2017, 13:38 [IST]
English summary
Read in Tamil about Royal Enfield Himalayan has 40 manufacture defects claims royal enfield customer. files case at consumer court.
Please Wait while comments are loading...

Latest Photos