பிஎஸ்- 3 பைக்கை பதிவு செய்து தராமல் இழுத்தடித்த ஹோண்டா டீலர்: துப்பாக்கியால் சுட்ட வாடிக்கையாளர்!

Written By:

பாரத் ஸ்டேஜ்-3 மாசு தர எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கு கடந்த ஏப்ரல் 1 முதல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இருப்பில் தேங்கிய இருசக்கர வாகனங்களை பெரும் தள்ளுபடியுடன் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் டீலர்கள் விற்பனை செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தடை விதிக்கப்பட்ட பின்னரும் இருசக்கர வாகனங்களை பெங்களூரை சேர்ந்த ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் முறைகேடாக விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது. மேலும், இது கொலை செய்யும் அளவுக்கு சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர், கெங்கேரி பகுதியில் இயங்கி வரும் சேட்டிலைட் மோட்டார்ஸ் என்ற ஹோண்டா டீலரில் இருந்த ஊழியர்களை நோக்கி முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக கெங்கேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின்னால் இருந்த காரணம் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அதாவது, ஏப்ரல் 1ந் தேதிக்கு பின்னர் இருப்பில் தேங்கிய இருசக்கர வாகனங்களை சேட்டிலைட் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதில் ஒரு பைக்கை ஜெகதீஷ் என்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வாங்கி இருக்கிறார். தற்காலிக பதிவு எண்ணுடன் அந்த பைக்கை சேட்டிலைட் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கி இருக்கிறார். அதன் பிறகு அந்த பைக்கை நிரந்தர பதிவு செய்து தருமாறு டீலரை அணுகி இருக்கிறார்.

ஆனால், அந்த பைக்கில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவு செய்ய முடியாத நிலை இருந்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களை கடந்தும் பைக்கை பதிவு செய்து தராததால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் டீலரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், கிட்டத்தட்ட 48 பிஎஸ் 3 பைக்குகளை சேட்டிலைட் மோட்டார்ஸ் நிறுவனம் தடை செய்யப்பட்ட தேதிக்கு பின்னரும் முறைகேடாக விற்பனை செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

மேலும், ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் உதவியுடன் அந்த பைக்குகளை பதிவு செய்ய முயன்றதும், ஆனால் ஜெகதீஷ் பைக்கில் இருந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதனை பதிவு செய்ய முடியாத நிலை இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த முறைகேட்டில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Monday, June 12, 2017, 14:17 [IST]
English summary
Shootout At bike showroom in Bangalore.
Please Wait while comments are loading...

Latest Photos