இந்த கார்களில் மறைந்து கிடக்கும் தெரியாத ரகசியங்கள்: சுவாரஸ்யத் தொகுப்பு!

Written By:

டிசைனாகட்டும், வசதிகளாகட்டும், ஓட்டுதல் தரத்திலாகட்டும், ஒவ்வொரு காருக்கும் ஒரு தனித்துவமும், சிறப்பம்சமும் கொண்டதாக தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இங்கே நீங்கள் பார்க்கப்போகும் கார் மாடல்களில் சில ரகசியமான விஷயங்களை பெற்றிருக்கின்றன.

சில வேளைகளில் இந்த விஷயம் உரிமையாளர்களுக்கே கூட தெரிவதில்லை. ஆம், அதுபோன்று சில கார்களில் மறைந்து நிற்கும் ரகசியங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

அமெரிக்காவின் பழமையும், பாரம்பரியமும் மிக்க கார் தயாரிப்பு நிறுவனம் ஜீப். ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்படும் ஜீப் நிறுவனம் உயர்வகை ஆஃப்ரோடு எஸ்யூவிகளை தயாரிப்பதும், சமீபத்தில் இந்த எஸ்யூவிகள் இந்தியா வந்ததும் உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். அந்த நிறுவனம் தயாரிக்கும் மாடல்களில் ரெனிகேட் எஸ்யூவி பற்றியும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

ஆனால், அந்த எஸ்யூவியில் ஒரு விசேஷ விஷயம் உள்ளது அதன் உரிமையாளர்களுக்கே தெரியவில்லையாம். ஆம், ஜீப் ரெனிகேட் எஸ்யூவியின் கியர் ஷிஃப்ட் லிவரின் முன்பகுதியில் இருக்கும் சிறிய அறையில் கோலம் போட்டது போல வரையப்பட்டிருக்கும். குழப்படியாக இருப்பதால், பலரும் இதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், இந்த கோடுகள், அமெரிக்காவின் பிரபல ஆஃப்ரோடு பகுதியான உட்டா பாலைவன பகுதியின் நில அமைப்பை விவரிக்கும் வரைபடம்தானாம் அது. ஆனால், இதை வைத்துக் கொண்டு வெளியேறிவிட முடியுமா என்றால், இல்லை என்பதுதான் பதில்.

கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. இதற்காக, விசேஷ அம்சங்கள் கொண்ட ஃபோர்டு ஜிடி சூப்பர் காரை அறிமுகப்படுத்தியது. இந்த மாடலின் விசேஷம் என்ன தெரியுமோ? 

காரின் வலது பக்க ஹெட்லைட்டில் இருக்கும் பல்புகள் நூற்றாண்டு விழாவை குறிக்கும் விதத்தில் 100ஐ பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். நேராக காண்பது சாத்தியமில்லை என்பதாலேயே, இந்த தகவலையும், அதற்கான படத்தையும் நீங்கள் இருந்த இடத்திலேயே பார்க்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வழங்குகிறது.

உலகிலேயே சிறந்த மின்சார கார்களை தயாரிப்பதில் டெஸ்லா புகழ்பெற்று விளங்குகிறது. தொழில்நுட்பத்திலும் டெஸ்லா கார்கள் ஜாம்பவான் கார் நிறுவனங்களையே அசரடித்து வருகிறது. அந்த வகையில், டெஸ்லா மாடல் எஸ் காரின் P85S மாடலில் ஒரு விசேஷ வசதி இருக்கிறது.

இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கும் 17 இன்ச் டச்ஸ்கிரீனில் உள்ள மெனு ஆப்ஷனுக்கு சென்று About என்ற ஆப்ஷனை சிறிது நேரம் விரலை வைத்து அழுத்தினால், அந்த காரை தயாரித்த டெஸ்லா பணியாளர் குழுவினரின் படம் தெரியும். இதுபோன்று, பல விஷயங்களை இந்த தொடுதிரை சாதனம் மூலமாக பெற முடியும். அத்துடன், லோகோவை அழுத்தினால் ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்திய நீர்மூழ்கி கார் விபரங்களும் வரும்.

2006 முதல் 2014ம் ஆண்டு வரை இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட வாக்ஸ்ஹால் கார்ஸா காரின் கிளவ் பாக்ஸில் சுறா மீனின் ஓவியம் ஒன்று ரகசியமாக கொடுக்கப்பட்டிருக்குமாம். இந்த கார் தயாரிக்கம்போது இந்த காரை தயாரித்த இரண்டு டிசைனர்களுக்குள் ஏற்பட்ட டிசைன் போட்டி காரணமாகவே, இந்த ரகசிய சுறா மீன் ஓவியம் இந்த கார்களில் கொடுக்கப்பட்டதாம். இதனை கண்டறிவதுதான் சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

டோட்ஜ் டார்ட் காரின் ஓட்டுனர் இருக்கையின் ரகசிய அறை ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். விலை உயர்ந்த பொருட்களை உரிமையாளர்கள் வைத்துக் கொள்வதற்காகவும், முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்கவும் இந்த அறை கொடுக்கப்பட்டது. ஆனால், இதனை சமூக விரோதிகள் போதை வஸ்து உள்ளிட்டவற்றை கடத்துவதற்காக இந்த காரை பயன்படுத்த துவங்கிவிட்டனராம். எனவே, இதனை கடத்தல்கார் என்ற பெயரை தேவையில்லாமல் வாங்கிவிட்டது.

1941ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஒரிஜினல் வில்லீஸ் ஜீப் எஸ்யூவிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், 2015ம் ஆண்டு ஜீப் ரெனிகேட் எஸ்யூவியில் பல டிசைன் தாத்பரியங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சற்று உற்று நோக்கினால் பல விஷயங்களை வில்லீஸ் ஜீப்பிலிருந்து எடுத்து சேர்த்திருப்பதை காண முடியும்.

முகப்பில் க்ரில் அமைப்பு, ஹெட்லைட் அமைப்பு போன்றவை ஜீப் எஸ்யூவியின் தாக்கத்தில் உருவாகியிருப்பதை காணலாம். பின்புறத்தில் எரிபொருள் கேன், கூரையில் இருக்கும் கண்ணாடி என பல டிசைன் அம்சங்கள் ஒரிஜினல் ஜீப் எஸ்யூவியிலிருந்து மிகுந்த நுணுக்கத்துடன் கையாண்டிருப்பதை காண முடியும்.

வால்வோ எஸ்60 கான்செப்ட் காரின் ஹெட்லைட்டில் இரண்டு வைக்கிங் கப்பல்கள் இருப்பது போன்ற ஹெட்லைட் டிசைனை கொடுத்திருந்தனர். இதனை ஆட்டோமொபைல் துறையினரும், கார் பிரியர்களும் வெகுவாக பாராட்டி பேசினர். வைக்கிங் மக்களின் கலையை போற்றும் வகையில் இந்த ஹெட்லைட் அமைப்பை வால்வோ டிசைனர்கள் கொடுத்திருந்தனர். இதனால், இந்த காரின் தனித்துவம் மேலோங்கி இருந்தது. ஆனால், உற்பத்தி செலவை காரணம் காட்டி, இந்த கார் தயாரிப்பு நிலைக்கு செல்லும்போது இந்த டிசைன் மாற்றப்பட்டது. இது கார் பிரியர்களிடையே ஏமாற்றத்தை தந்தது.

விலை உயர்ந்த கார்களில் குடை ஒன்று வைப்பது வழக்கமானதுதான். ஸ்கோடா நிறுவனமும் தனது கார்களில் குடை வைப்பதற்கான இடவசதியுடன் கார்களை டிசைன் செய்வது தெரிந்த விஷயம்தான். ஆனால், அந்த குடை பத்திரமாக இருக்கும் விதத்தில், மிகவும் பிரத்யேக இடவசதி சூப்பர்ப் காரில் உள்ளது.

காரின் பின்புற கதவில் இந்த அறை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மற்றொரு விசேஷம், மழையில் நனைந்து தண்ணீர் சொட்ட சொட்ட குடையை இந்த ரகசிய அறையில் வைத்தால் கூட, குடையில் சொட்டும் தண்ணீர் கீழ் பகுதியில் இருக்கும் சிறிய துவாரம் வழியாக வெளியேறிவிடும்.

2014 செவர்லே இம்பாலா காரின் சென்டர் கன்சோலில் இருக்கும் ஒரு பட்டனை தட்டினால், மேல்புறத்தில் தெரியும் தொடுதிரை மேலே தூக்கிக் கொள்ளும். அதன் பின்னால் உள்ள ரகசிய அறையில் மொபைல்போன், கைக்கடிகாரம் போன்ற பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். ஏன், மது பாட்டில்களை கூட மறைவாக வைக்க பயன்படுத்த முடியுமாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are a few unknown facts about some car models. Read the amazing details in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos