டிடிவி தினகரனை மாட்டிவிட்ட சுகேஷ் சந்திராவிடம் 2 சொகுசு கார்கள் எப்படி வந்தது?

Written By:

கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக.,வின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்து ஓபிஎஸ் அணிக்கும், டிடிவி தினகரன் அணிக்கும் கடும் மல்லுக்கட்டு நடந்தது தெரிந்ததே.

இது இரு பிரிவினருக்கும் கவுரவப் பிரச்னையாக உருவெடுத்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திடம் இரு அணிகளும் புகார் செய்தன. 

விசாரணை முடிவில், இரண்டு பிரிவும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த விடாமல் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெங்களூரை சேர்ந்த சுரேஷ் சந்திரா என்பவரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் ஆசை காட்டி ரூ.1.30 கோடி பெற்றதாக சுகேஷ் சந்திரா கூறியதாக டெல்லி போலீசார் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருக்கின்றனர். இதுதொடர்பான வழக்கில் டிடிவி தினகரனின் பெயரும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இந்த சுகேஷ் சந்திரா மிகப்பெரிய அகாசுகா பேர்வழி என்பது கடந்த கால வரலாறாக உள்ளது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக, சொகுசு கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

இதனால், பல சொகுசு கார்களை மோசடியாக வாங்கி வைத்து பயன்படுத்தி இருக்கிறார். பலருக்கு குறைவான விலையில் சொகுசு கார்கள் மற்றும் அரசாங்க கார்களை வாங்கித் தருவதாக கூறியும் மோசடி செய்தவர். பெரும் புள்ளிகள், சினிமா பிரபலங்கள் கூட இவரது மோசடிகளில் சிக்கி பெரும் பணத்தை இழந்துள்ளனர்.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து நகரங்களிலும் இவர் சொகுசு கார் வாங்கி மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன.

கடந்த 2013ம் ஆண்டு சென்னையில் உள்ள வங்கியில் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.19 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் இந்த சுகேஷ் சந்திராவும் அவரது லிவ்- இன் பார்ட்னராக இருந்த நடிகை லீனாவும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, டெல்லியில் சுகேஷ் சந்திராவின் காதலியான நடிகை லீனா தங்கி இருந்த பண்ணை வீட்டில் இருந்து ரூ.20 கோடி மதிப்புடைய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது நடிகை லீனாவும், சுகேஷ் சந்திராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாருதி 800 கார் வைத்திருந்த சுரேஷ் சந்திராவின் காதலியான நடிகை லீனாவின் பெயரில் ரூ.20 கோடி மதிப்புடைய பல சொகுசு கார்கள் இருந்தன. அவை அனைத்தும் சுகேஷ் சந்திரா மோசடி செய்து வாங்கிக் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

மோசடி வழக்கில் நடிகை லீனா கைதான போது, அவரது வீட்டில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புடைய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார், ரூ.4 கோடி விலை மதிப்புடைய நிஸான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் கார், ரூ.1.5 கோடி மதிப்புடைய ஹம்மர் எஸ்யூவி, ரூ.1.5 கோடி மதிப்புடைய அஸ்டன் மார்ட்டின் வாண்டேஜ் கார், ரூ.1 கோடி மதிப்புடைய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தவிரவும், ரூ.55 லட்சம் விலை மதிப்புடைய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் சொகுசு கார், ரூ.50 லட்சம் மதிப்புடைய மிட்சுபிஷி லான்சர் எவோலியூசன் எக்ஸ் மற்றும் லேண்ட்ரோவர் சொகுசு எஸ்யூவி உள்ளிட்டவையும் அந்த பறிமுதல் பட்டியலில் அடங்கும்.

இதுவரை சுகேஷ் சந்திரா மீது 50க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் மீண்டும் சிக்கி உள்ளார் சுகேஷ் சந்திரா. இப்போதும் அவரிடம் இருந்து இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறைவாசத்தில் இருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து திடீரென சொகுசு கார்கள் எப்படி வந்தன என்பதும் போலீசாருக்கு சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளன. இந்த சொகுசு கார்கள் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்காக வாங்கியதாக கருதப்படும் லஞ்சப் பணத்தில் சுகேஷ் வாங்கினாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

சொகுசு கார்களுக்கு ஆசைப்பட்டு, இன்று பல வழக்குகளில் சிக்கி சிறையில் அடைப்பட்டு இருக்கிறார் சுகேஷ் சந்திரா. இவர் மீது இத்தனை வழக்குகள் இருந்தும் மீண்டும் மீண்டும் அவர் சொகுசு கார்களை வாங்கி வலம் வந்தது அதிர்ச்சி தருவதாக உள்ளது. விசாரணையில் சொகுசு கார்கள் வந்தது எப்படி என்பது குறித்த தகவல்களும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
sukesh chandra's luxury car addiction revealed here.
Please Wait while comments are loading...

Latest Photos