இந்திய வரலாற்றில் முதல்முறையாக... மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்கப்பட்ட டால்கோ ரயில்!

Written By:

இந்திய வரலாற்றில் முதல்முறையாக அதிவேகத்தில் இயக்கப்பட்ட பயணிகள் ரயில் என்ற பெருமையை டால்கோ ரயில் பெற்றிருக்கிறது. நேற்று நடந்த சோதனை ஓட்டத்தின்போது, மணிக்கு 180 கிமீ வேகத்தில் பயணித்து அசத்தியிருக்கிறது டால்கோ ரயில்.

இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை ஓட்டம் மூலம், இந்தியாவின் பயணிகள் ரயில் போக்குவரத்தில் புதிய அத்தியாயம் எழுதப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அதிவேக ரயில்கள்

தற்போது இருக்கும் தண்டவாளங்களிலேயே அதிவேக ரயில்களை இயக்குவதற்கான முயற்சியாக, ஸ்பெயினிலிருந்து டால்கோ ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டது. ஏற்கனவே இருக்கும் தண்டவாள அமைப்பில் மாறுதல்கள் செய்யாமலேயே இந்த டால்கோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டீசல் எஞ்சின்களை டால்கோ ரயிலில் இணைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆய்வுகள்

நடைமுறையில் ரயில் பயணிக்கும்போது ஏற்படும் தண்டவாளங்களில் ஏற்படும் அதிர்வுகள், எடை தாங்கும் திறன் மற்றும் ரயிலின் வேகம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டு இந்த சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தின்போது, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ நிறுவனத்தின் ஆய்வுக் குழுவினரும், இந்திய ரயில்வே துறையின் அதிகார்கள் குழுவும் இணைந்து சோதனை ஓட்டங்களை ஆய்வு செய்து வருகிறது.

முதல் கட்ட சோதனை

பெரெய்லி- மொரதாபாத் இடையில் மணிக்கு 85 கிமீ வேகம் முதல் 115 கிமீ வேகம் வரை டால்கோ ரயில் பெட்டிகள் இயக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த சோதனை ஓட்டங்கள் திருப்திகரமாக அமைந்ததையடுத்து, தற்போது இரண்டாம் கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட சோதனை

தற்போது டெல்லி- ஆக்ரா இடையில் அமைந்திருக்கும் மதுரா- பல்வால் இடையே இரண்டாம் கட்ட சோதனைகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. வரும் 31ந் தேதி வரை பல்வேறு நிலைகளில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அதிகபட்ச வேகம்

இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தின்போது அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் டால்கோ ரயிலை இயக்கிப் பார்க்க அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். அதன்படி, நேற்று டால்கோ ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தில் பறந்து புதிய சாதனை படைத்தது. மதுரா- பல்வால் வழித்தடத்தில் உள்ள பூட்டேஸ்வர் மற்றும் ருந்தி ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த அதிகபட்ச வேகம் எட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயண நேரம்

மதுரா- பல்வால் இடையிலான 84 கிமீ தூரத்தை டால்கோ ரயில் வெறும் 38 நிமிடங்களில் கடந்தது. இதே தூரத்தை கடப்பதற்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன. இந்த சோதனையின்போது வெற்று டால்கோ ரயில் பெட்டிகள் இயக்கப்பட்டன. அடுத்து, பயணிகள் எடைக்கு நிகரான எடையுடன் கூடிய மணல் மூட்டைகளை வைத்து இந்த வேகத்தை எட்டுவதற்கு திட்டமிட்டிருக்கின்றனர்.

மூன்றாம் கட்ட சோதனை

 இரண்டாம் கட்ட சோதனை திருப்திகரமாக அமைந்து வருவதால், அடுத்து டெல்லி- மும்பை இடையிலான 1,400 கிமீ தூரத்துக்கு டால்கோ ரயில் பெட்டிகள் இயக்கி சோதனை செய்யப்பட இருக்கின்றன. அப்போது மணிக்கு 200 கிமீ வேகம் வரை இயக்கி பார்க்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

புதிய அத்தியாயம்...

டால்கோ ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், அதிக டால்கோ ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யவும் மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு இருக்கிறது. இதன்படி, நாட்டின் நீண்ட தூர வழித்தடங்களில் டால்கோ அதிவேக ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்.

அதிவேகம்...

தற்போது டெல்லி- ஆக்ரா இடையில் இயக்கப்படும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்தான் இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமைக்குரியது. இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 160 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது. இந்த நிலையில், டால்கோ ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது.

விசேஷம்...

தற்போது இந்திய ரயில்வே துறையின் பயன்பாட்டில் இருக்கும் ரயில் பெட்டிகளைவிட டால்கோ ரயில் பெட்டிகள் விசேஷ ஆக்சில் அமைப்பு கொண்டது. இதனால், வளைவுகளில் வேகத்தை குறைக்காமலேயே இயக்க முடியும். இதனால், சராசரி வேகம் வெகுவாக அதிகரிப்பதால், பயண நேரம் குறைகிறது.

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Talgo train achieves target speed of 180 kmph In India.
Please Wait while comments are loading...

Latest Photos