மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் டால்கோ ரயில் 2018ல் இந்தியா வருகிறது!

Written By:

நீண்ட தூர தடங்களில் அதிவேக ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகளில் மத்திய ரயில்வே அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ நிறுவனத்தின் அதிவேக ரயில் பெட்டிகளை இந்திய தடங்களில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு டால்கோ அதிவேக ரயில்களை இந்தியாவில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளில் ரயில்வே துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக மூன்று பேர் கொண்ட ரயில்வே அதிகாரிகள் குழு டால்கோ ரயிலை இந்தியாவில் வணிக ரீதியில் இயக்குவதற்கான தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் டால்கோ ரயில் அறிமுகம் செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து டால்கோ நிறுவனத்தின் உயர் அதிகாரி சுப்ரத் நாத் கூறுகையில்," டால்கோ ரயில் பெட்டிகள் இந்திய ரயில் தடங்களில் மிகச் சிறப்பாக இருந்தது எங்களது சோதனையில் தெரிய வந்துள்ளது. அத்துடன், இந்திய ரயில்வே துறையிடம் உள்ள ரயில் எஞ்சின்கள் மிகவும் சக்திவாய்ந்தவையாக இருப்பதும் எங்களது சோதனையில் தெரிய வந்துள்ளது.

சோதனைகள் திருப்திகரமாகவே அமைந்தது. ரயில்வே துறையின் அறிவுறுத்தலின்படி, இந்தியாவில் இயக்குவதற்கு டால்கோ ரயில் பெட்டிகளில் சிறிய மாறுதல்களை செய்ய வேண்டி இருக்கும். அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளின் அங்கீகாரத்தை பெற வேண்டி இருக்கும்.

தற்போது உள்ள நிலவரப்படி அனைத்து பணிகளும் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. எனவே, திட்டமிட்டப்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டால்கோ ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டால்கோ ரயிலை பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்," என்று கூறி உள்ளார்.

டெல்லி- மும்பை இடையில் நடத்தப்பட்ட சோதனையின்போது டால்கோ ரயில் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தை தொட்டு சாதனை படைத்தது. எனவே, இந்த இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 17 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், டெல்லி - கொல்கத்தா மற்றும் சென்னை - பெங்களூர் இடையிலான வழித்தடங்களிலும் டால்கோ ரயிலை இயக்குவதற்கான திட்டம் உள்ளது. இதன்மூலமாக, நெடுந்தூர வழித்தடங்களில் பயண நேரம் வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது.

டால்கோ ரயில் பெட்டிகள் இலகுவானது என்பதால், அதிக எரிபொருள் சிக்கனம் கிடைக்கும். அத்துடன், டால்கோ ரயில்களின் நவீன ஆக்சில் அமைப்பு காரணமாக, வளைவுகளில் ரயிலின் வேகத்தை குறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால், சராசரி வேகம் மிக அதிகமாக இருக்கும்.

இந்த திட்டத்தை தொடர்ந்து தனது நவீன வகை புல்லட் ரயில்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு டால்கோ திட்டமிட்டு இருக்கிறது. இந்த புல்லட் ரயில்களை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யவும் டால்கோ முடிவு செய்துள்ளது. இந்த ரயில்கள் மணிக்கு 350 கிமீ வேகம் வரை பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Talgo Train Coming To India By Next Year.
Please Wait while comments are loading...

Latest Photos