புதிய டாடா ஹெக்ஸா காரின் இரண்டு சக்கர சாகசம்... சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Written By:

அடுத்த மாதம் 18ந் தேதி புதிய டாடா ஹெக்ஸா கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆஃப்ரோடு சிறப்பம்சங்களை கொண்ட எம்பிவி ரக கார் மாடலாக இது வர இருக்கிறது. கவர்ச்சியான வடிவமைப்பும், வசதிகளும் இந்த கார் மீதான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

அடுத்த வாரத்தில் இந்த காருக்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த காரின் பராக்கிரமத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு அசத்தலான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

அதாவது, அரபு நாட்டு இளைஞர்கள் இரண்டு சக்கரங்களை பயன்படுத்தி ஒரு பக்கம் சாய்வாக கார்களை ஓட்டிச் சென்று சாகசம் புரிவது வழக்கம். அதேபோன்று, டாடா ஹெக்ஸா காரை இரண்டு சக்கரங்களில் ஓட்டும் வீடியோதான் இப்போது யூ-ட்யூபில் வெளியாகி வைரலாகி உள்ளது.

மைதானம் ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கும் சரிவு மேடை மீது பாய்ந்து ஏறும் டாடா ஹெக்ஸா கார் தொடர்ந்து இரண்டு சக்கரங்களில் வட்டமடித்து பயணிக்கிறது. மிக நிதானமாகவும், அதிக பேலன்ஸுடனும் அந்த கார் முழுமையாக வட்டமடித்து நிற்கிறது.

இந்த வீடியோ தற்போது கார் பிரியர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. இது எங்கு, எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவில்லை. ஆனால், இது டாடா ஹெக்ஸா காரின் மீதான கவனத்தை கூடுதலாக்குவதாக இருக்கிறது.

எஸ்யூவி மற்றும் எம்பிவி என இரண்டு வகை கார்களின் தகவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுன் கூடிய கலப்பின வகை கார் மாடலாக டாடா ஹெக்ஸா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வருகிறது.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 19 அங்குலம் விட்டமுடைய பிரம்மாண்ட சக்கரங்கள், 5 அங்குல அளவுடைய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பல தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது.

அதேபோன்று, இந்த காரில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினும் இரண்டுவிதமான சக்தியை வெளிப்படுத்தும் மாடல்களில் வருகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.

ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா ஹெக்ஸா காரின் இரண்டு சக்கர சாகசம்... சிலிர்க்க வைக்கும் வீடியோ!

 

 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Tata Hexa on two wheels.
Please Wait while comments are loading...

Latest Photos