வான் இலக்கை துல்லியமாக அடித்து உலகின் கவனத்தை ஈர்த்த தேஜஸ்!

Written By:

நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் போர் விமானமான தேஜஸ் புதிய சாதனை படைத்துள்ளது. ஆம், அதிக தூரத்தில் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய டெர்பி ஏவுகணையை தேஜஸ் போர் விமானம் வெற்றிகரமாக செலுத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தேஜஸ் போர் விமானம் தரை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனைகளில் முத்திரை பதித்தது. ஆனால், வான் இலக்குகளை துல்லியமாக தாக்குமா என்பதில் குழப்பம் இருந்ததுடன், கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்தது.

இந்த நிலையில், பிவிஆர் எனப்படும் தொலைவில் இருக்கும் வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தி இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒடிசா மாநிலம், சந்திப்பூர் அருகே கடலின் மீது பறக்கவிடப்பட்ட சிறிய வகை விமானத்தை தேஜஸ் போர் விமானத்திலிருந்து செலுத்தப்பட்ட டெர்பி ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.

இந்த சோதனை வெற்றி பெற்றிருப்பது தேஜஸ் போர் விமானத்தின் வரலாற்றில் புதிய மைல்கல் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. மேலும், தேஜஸ் போர் விமானத்தை குறை கூறி வந்தவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகவே அமைந்துள்ளது.

பிவிஆர் வகை ஏவுகணைகள் 37 கிமீ தொலைவிற்கும் அப்பால் இருக்கும் வான் இலக்குகளையும் துல்லியமாக தாக்கக்கூடியது. விமானத்தில் இருந்து கொடுக்கப்படும் சமிக்ஞைகள் மற்றும் ரேடார் உதவியுடன் இலக்கை நோக்கி பாய்ந்து சென்று தாக்கி அழிக்கும்.

இலக்கு வைக்கப்பட்ட எதிரிநாட்டு விமானம் திசை மாறி பறந்தால் கூட, அதனை பின்தொடர்ந்தோ அல்லது வழிமறித்தோ தாக்கி அழித்துவிடும். இந்த ஏவுகணையை செலுத்தும் பரீட்சையில்தான் இப்போது தேஜஸ் போர் விமானம் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த சோதனை வெற்றி பெற்றிருப்பதன் மூலமாக, தேஜஸ் விமானம் பன்னோக்கு பயன்பாட்டு போர் விமானம் என்பதை நிரூபித்துள்ளது. மேலும், தேஜஸ் போர் விமானம் இலகு எடையும், சக்திவாய்ந்த எஞ்சினையும் பெற்றிருப்பதால், எதிரி நாட்டு விமானங்களை வழிமறித்து கட்டுப்பாட்டில் கொண்டு வருவதிலும் சிறந்ததாக இருக்கும்.

ஏற்கனவே, இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகள் தேஜஸ் போர் விமானத்தை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இந்த புதிய ஏவுகணை சோதனை மூலமாக மேலும் பல நாடுகள் தேஜஸ் போர் விமானத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கும் என கருதப்படுகிறது.

அதேநேரத்தில், உள்நாட்டு தேவை மிக அதிகம் இருப்பதால், இப்போதைக்கு தேஜஸ் போர் விமானம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுமா என்பதும் சந்தேகம்தான். அதேநேரத்தில், எதிர்காலத்தில் தேஜஸ் போர் விமானத்திற்கு மிகச்சிறப்பான வர்த்தக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும், தேஜஸ் போர் விமானத்துக்கு காவேரி எஞ்சினை மேம்படுத்தி தருவதாக பிரான்ஸ் நிறுவனம் உறுதி தெரிவித்தது. அதேநேரத்தில், தற்போது பயன்படுத்தப்படும் ஜெனரல் எலக்ட்ரிக் எஃப்404 என்20 எஞ்சின்தான் சிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. புதிய எஞ்சினை பொருத்தும்போது வெளிநாடுகள் வாங்குவதற்கு தயக்கம் காட்டும் என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும்... #ராணுவம் #military
Story first published: Thursday, May 18, 2017, 14:35 [IST]
English summary
Tejas successfully fires Derby BVR missile.
Please Wait while comments are loading...

Latest Photos