டெஸ்ட் டிரைவ் செய்வது போல் நடித்து கார்களை திருடிய ‘பலே’ கில்லாடிகள்!

டெல்லியை கலக்கிய பிரபல கார் திருட்டு கும்பல் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது. திருடும் விதம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளது. இது குறித்து காணலாம்.

Written By:

விலையுயர்ந்த கார்களை வாங்குபவர்கள் அதை பொத்திப் பொத்திப் பாதுகாப்பாக வைத்தாலும், கள்ளச்சாவி போட்டு நைசாக கார்களை திருடிவிடும் கும்பலை தான் இதுவரையில் நாம் பார்த்திருப்போம். ஆனால் பட்டப்பகலிலேயே கார் ஷோரூமுக்கே சென்று கார் திருட்டில் ஈடுபட்ட நூதன திருட்டு கும்பல் ஒன்று நாட்டையே கலக்கி வந்துள்ளது.

சில மாதங்களாகவே டெல்லியில் உள்ள கார் ஷோரூம்களில் இருந்து விலை உயர்ந்த எஸ்யுவி மற்றும் செடன் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்ய எடுத்துச் சென்று அதனை திருடும் கும்பல் ஒன்று போலீசுக்கே தண்ணி காட்டி வந்தது.

லட்சக்கணக்கில் விலை போகும் ஃபார்சூனர் போன்ற கார்களை திருடும் இவர்கள் அதனை சில லட்சங்களுக்கு மலிவு விலையில் விற்றுச்சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்த கும்பல் தற்போது காவல்துறையின் கையில் வகையாக சிக்கிக்கொண்டது.

கார்களை திருடியது தொடர்பாக தற்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா எக்ஸ்யுவி500, ரெனால்ட் டஸ்டர் போன்ற 5 கார்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த கார் திருட்டு கும்பல் கைது செய்யப்பட்ட பின்னர், அவர்களின் திருட்டு முறை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் காரின் உரிமையாளர்கள் மட்டுமல்ல இனி ஷோரூம் நிர்வாகத்தினர் கூட விழிப்புடன் இருத்தல் அவசியம் என்பது புரிகிறது.

மிகவும் ஸ்மார்டாக டிரஸ் செய்து கொண்டு ஷோரூம்களுக்கு கார் வாங்குவதைப் போல் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் கார் பற்றிய முழு தகவலகளையும் விசாரிக்கின்றனர். பொதுவாக கார் வாங்கும் முன்னர், அதனை ஓட்டிப்பார்க்கவே பலரும் விரும்புவர்.

இதற்காகவே டெஸ்ட் டிரைவ் கார்களையும் ஷோரூம்களில் வைத்திருப்பர். நைசாகப் பேசி ஷோரூம் ஊழியரின் நம்பிக்கையை பெற்ற பின்னர், அந்த ஊழியருடன் டெஸ்ட் டிரைவ் செய்ய காரை ஓட்டிச் செல்கின்றனர்.

சிறிது தூரம் சென்ற பின்னர், ஏற்ற இடம் ஒன்றினில் இருக்கும் கடையில் தாகமாக உள்ளது தண்ணீர் வேண்டும் அந்த ஷோரூம் ஊழியரிடம் என ஒரு 100 ரூபாய் தாளை கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி வருமாறு கூறுகின்றனர்.

இவர்களின் பகட்டை நம்பிய ஷோரூம் ஊழியரை ஏமாற்றிவிட்டு காருடன் எஸ்கேப் ஆகிவிடுவது இவர்களின் தந்திரம். இதைப் போன்று இவர்கள் பல ஷோரூம்களில் விதவிதமாக ஏமாற்றி கார்களை அபேஸ் செய்துள்ளனர்.

திருடிய வேகத்தில் கார்களை இக்கும்பல் விற்றுவிடுகிறது. அதிலும் ஒரு நூதன முறையை இவர்கள் செய்வதால் திருடிய காரை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது.

விபத்துகளில் சுக்குநூராக நொருங்கிப் போகும் கார்கள் சிலவற்றை பழைய நிலைக்கு கொண்டுவர இன்ஷூரன்ஸ் செய்த தொகையைக் காட்டிலும் அதிகம் செலவாகும். அதிலும் இன்ஷூரன்ஸ் இல்லாத கார்கள் பொதுவாக கைவிடப்பட்டுவிடும். இது பழைய இரும்புக்கு தான் எடுக்கப்படும்.

இப்படி வீணாய்ப்போகும் கார்களின் பதிவு புத்தகம், இன்ஷூரன்ஸ் பத்திரம், ஆகியவைகளை பழைய கார்களை உடைக்கும் நிறுவனத்தினரிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றனர்.

பின்னர், தாங்கள் திருடிய காரில் உள்ள இஞ்சின் எண், சேசிஸ் எண் ஆகிய வாகனத்தின் அடையாளங்களை அழித்துவிட்டு, வீணாய்ப்போகும் அதே மாடல் காரின் இஞ்சின் சேசிஸ் நம்பர் ஆகியவற்றை பொறித்துக்கொள்கின்றனர். இதனால் புதிய பதிவு எண் உட்பட காரின் அனைத்து ஆவணங்களும் பழைய காருடையதாக இருக்கும்.

புதிய ஆவணங்களுடன் இருக்கும் காரினை இவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் மலிவு விலைக்கு விற்று காசாக்குகின்றனர். ஒவ்வொரு காரையும் திருடிய பின்னர், இதே விதத்தில் விற்று வந்துள்ளனர்.

இந்த திருட்டு கும்பலிடம்,காவல்துறையினர் விசாரித்த போது சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருட்டு கார்களை விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் எஸ்யுவி, செடன் கார்களை தேதல் பணிக்காக அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்துவர். அதுவும் மலிவு விலையில் கிடைக்கும் போது யார்தான் வாங்காமல் இருப்பார்கள்?.. அரசியல்வாதிகள் என்றால் காவல்துறையின் கெடுபிடியும் இருக்காது. இதனால் அரசியல்வாதிகளை குறிவைத்து தங்கள் தொழிலை இவர்கள் நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆரிஃப் ஹுசைன் மற்றும் லக்விந்தர் சிங் என்ற இருவரும் குஜராத் மாநிலம் துவாரகா அருகே வாகன சோதனையின் போது காவல்துறையின் பிடியில் சிக்கியுள்ளனர். சட்டீஸ்கர் மாநில பதிவெண் கொண்ட திருடப்பட்ட புதிய ரெனால்ட் டஸ்டர் காரின் சேசிஸ் எண் அழிக்கப்பட்டுள்ளதைப் போல் தெரிந்ததால் இவர்கள் மீது காவல்துறையினர் சந்தேகக் கண் பட்டது.

போலீசாரின் தீவிர விசாரணையில், உண்மையை ஒத்துக்கொண்டனர். திருடிய டஸ்டர் காரை ஒருவரிடம் டெலிவரி செய்ய இவர்கள் எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. டெல்லியில் கைவரிசை காட்டி வந்த கும்பல் இது என்பது காவல்துறைக்கு தெரியவந்தது.

இத்திருட்டு பற்றிய இவர்கள் தெரிவித்தபோது, கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் விலை கொண்ட டாப் மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை திருடி அதனை வெறும் 3.5 லட்ச ரூபாய்க்கு இக்கும்பல் விற்பனை செய்துள்ள விபரத்தை கேட்ட காவல்துறையினருக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் இவர்கள் கடந்த சில மாதங்களில் 40க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த கார்களை திருடியுள்ளது தெரியந்துள்ளது. இதில் 8 கார்களை டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கார் ஷோரூம்களில் இருந்து தான் திருடியுள்ளனர்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதைப் போல் பல மாதங்களாக காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்துவந்த இந்த கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் காவல்துறையினர் வலை விரித்துள்ளனர்.

கார் திருட்டு என்பது காவல்துறைக்கு கடும் சவால் விடுக்கும் ஒரு குற்றமாக உள்ளது. டெல்லியை பொருத்தவரையில் திருடப்பட்ட கார்களில் வெறும் 15% அளவிலான கார்கள் மட்டுமே மீட்கப்படுகின்றன என்பது அதிர்ச்சி தரும் புள்ளிவிவரமாக உள்ளது.

டெல்லி மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் இதே போன்ற பிரச்சனை தான் நிலவி வருகிறது. ‘பொல்லாதவன்' படத்தில் தனுசின் பல்சர் பைக் திருட்டு போனது போல பலரும் இங்கு திருடப்பட்ட தங்கள் வாகனங்களை தேடி அலைவது வாடிக்கையான ஒன்றாகிவிடுகிறது.

சென்னையில் உள்ள புதுப்பேட்டை போன்ற பகுதியில் திருடுபோன பலரது கார்/ பைக்-களின் உதிரிபாகங்கள் விற்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

ஸ்போர்ட்ஸ் பைக்கான புதிய 2017 கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-10 ஆர் ஆர் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்: 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Thursday, March 16, 2017, 17:12 [IST]
English summary
Some of the SUVs which were seized by the police. The gang of thieves used to sell the stolen cars in UP
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK