உலக வரலாற்றில் அதிகம் விற்பனையான டாப் 10 கார் மாடல்கள்!

By Saravana Rajan

"நிறம் இருந்தால் சுவையில்லை; சுவையிருந்தால் திடமில்லை; திடமிருந்தால் மணமில்லை," என்று வரும் தேனீர் விளம்பரம் போன்று, எந்தவொரு தயாரிப்பும் வாடிக்கையாளர்களை ஒட்டுமொத்தமாக திருப்தியை பெறுவதில்லை. கார்களும் இதற்கு விதிவிலக்கல்ல. டிசைன் நன்றாக இருந்தால், நிறுவனத்தின் சேவை தரம் சொதப்பலாக இருக்கும். எல்லாம் சரியாக இருந்தால் பராமரிப்பு செலவு கையை பழுக்க வைத்துவிடும். அனைத்தும் சரியாக இருந்தால் டிசைன் மொக்கையாக இருக்கும்.

இவ்வாறு ஒட்டுமொத்தமாக பெரும்பான்மையான வாடிக்கையாளர்களின் திருப்தியை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், சில கார்கள் மாடல்கள் அனைத்து அம்சங்களிலும் திருப்தியை தந்து வாடிக்கையாளர்களிடத்தில் நம்பகத்தன்மையையும், அதிக வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. அவ்வாறு உலக ஆட்டோமொபைல் வரலாற்றில் வாடிக்கையாளர்களின் நன்மை மதிப்பை பெற்று விற்பனையில் சாதித்த டாப் 10 கார்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

10. செவர்லே இம்பாலா

10. செவர்லே இம்பாலா

கடந்த 1958ம் ஆண்டு செவர்லே இம்பாலா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 14 மில்லியன் இம்பாலா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. 2014ம் ஆண்டில் புதிய தலைமுறை மாடலாக இம்பாலா வெளிவந்தது. இந்த காரில் 195 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.5 லிட்டர் ஈக்கோடெக் எஞ்சின், 304 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 3.6 லிட்டர் வி6 எஞ்சின் மற்றும் 260 பிஎச்பி பவரை அளிக்க வல்ல உயிரி எரிபொருளில் இயங்கும் 3.6 லிட்டர் வி6 எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

09. ஃபோக்ஸ்வேகன் பஸாத்

09. ஃபோக்ஸ்வேகன் பஸாத்

கடந்த 1973ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் தற்போது வரை 8 தலைமுறை மாற்றங்களை சந்தித்திருக்கிறது. இதுவரை 15.5 மில்லியன் பஸாத் கார்கள் உலக அளவில் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. 1.8 லிட்ர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின், 3.6 லிட்டர் வி6 எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது.

 08. ஃபோர்டு மாடல் டி

08. ஃபோர்டு மாடல் டி

பட்ஜெட் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலகின் முதல் கார் என்ற பெருமை இதற்கு உண்டு. 1908ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் ஹென்றி ஃபோர்டு நேரடியாக உருவாக்கிய மாடல். உற்பத்தி நிறுத்தப்பட்டு 86 ஆண்டுகள் ஆகிறது ஆனாலும், இந்த பட்டியலில் 8ம் இடம் பிடித்திருக்கிறது. சரி, எவ்வளவு கார்கள் விற்பனையாகின்றன தெரியுமா? 16.5 மில்லியன் மாடல் டி கார்கள் விற்பனையாகி மூக்கில் மேல் விரல் வைக்க தூண்டுகிறது. ஏனெனில், இப்போதுள்ளது போன்று பெரிய அளவிலான கார் சந்தை வளர்ச்சி பெறாத காலத்திலேயே அசத்தி இருக்கிறது.

 07. ஹோண்டா அக்கார்டு

07. ஹோண்டா அக்கார்டு

1976ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் விற்பனையிலும் கொடி கட்டி பறக்கிறது. இதுவரை 17.5 மில்லியன் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

06. ஹோண்டா சிவிக்

06. ஹோண்டா சிவிக்

கடந்த 1972ம் ஆண்டு ஹோண்டா சிவிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 18.5 மில்லியன் ஹோண்டா சிவிக் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. தற்போது 10வது தலைமுறை மாடலாக விற்பனையில் இருக்கும் ஹோண்டா சிவிக் கார் 1.8 லிட்டர், 2.4 லிட்டர், 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் ஆகிய 4 விதமான பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

05. ஃபோர்டு எஸ்கார்ட்

05. ஃபோர்டு எஸ்கார்ட்

1981ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 20 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த 2004ம் ஆண்டுடன் இந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது.

 04. ஃபோக்ஸ்வேகன் பீட்டில்

04. ஃபோக்ஸ்வேகன் பீட்டில்

1938ம் ஆண்டு ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் எண்ணத்தில், போர்ஷே நிறுவனத்தை ஸ்தாபிதம் செய்த பெர்டினான்ட் போர்ஷேவின் கைவண்ணத்திலும் உருவான கார் மாடல். ஃபோக்ஸ்வேகன் என்று அழைக்கப்பட்ட இந்த காரின் தோற்றம் வண்டு போல இருந்ததால், அந்த பெயரே நிலைத்துவிட்டது. ஜெர்மானிய மொழியில் ஃபோக்ஸ்வேகன் என்றால் மக்கள் கார் என்று பொருள்படுகிறது. உலகிலேயே அதிக காலம் உற்பத்தியில் இருந்து வரும் இந்த காரின் டிசைன் தாத்பரியம் நவீன யுகத்துக்கு தகுந்தவாறு அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 23.5 மில்லியன் பீட்டில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.

 03. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப்

03. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப்

1974ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கார் மாடல் கோல்ஃப். உருவத்தில் அல்ல, விற்பனையிலும், பிரபலத்திலும் ஐரோப்பாவின் ஆல்ட்டோ என்று கூறலாம். இதுவரை 27.5 மில்லியன் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. 7 தலைமுறை மாற்றங்களை சந்தித்துவிட்டது.

02. ஃபோர்டு எஃப் சீரிஸ்

02. ஃபோர்டு எஃப் சீரிஸ்

1948ம் ஆண்டு ஃபோர்டு எஃப் சீரிஸ் பிக்கப் டிரக் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 35 மில்லியன் ஃபோர்டு எஃப் சீரிஸ் பிக்கப் டிரக்குகள் விற்பனையாகி மலைக்க வைக்கின்றன. அமெரிக்காவின் மிகவும் விருப்பமான தனி நபர் பயன்பாட்டு வாகனங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

 01. டொயோட்டா கரொல்லா

01. டொயோட்டா கரொல்லா

1966ம் ஆண்டு டொயோட்டா கரொல்லா அறிமுகம் செய்யப்பட்டது. 1974ம் ஆண்டில் உலகின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பெற்றது. இதுவரை 40 மில்லியன் கரொல்லா கார்களை டொயோட்டா உலக அளவில் விற்பனை செய்திருக்கிறது. 11ம் தலைமுறை சந்தித்துவிட்ட இந்த மாடல் தற்போது இந்தியாவிலும் விற்பனையில் இருக்கிறது. நம்பகத்தன்மையில் சிறந்ததே இதன் வெற்றிக்கு காரணம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Top 10 History’s Best-Selling Cars Of All Time
Story first published: Wednesday, August 24, 2016, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X