எதிரிகளுக்கு அபாயகரமான இந்தியாவின் டாப் 5 போர் விமானங்கள்!

Written By:

எல்லையோரம் செயல்படும் தீவிர முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. எல்லைக்கு அப்பால் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிப்பதற்கு, விமானப்படையை பயன்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது.

அவ்வாறு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும்போது, இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் இருக்கும் 5 முக்கிய விமானங்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். இவை எதிரிகளுக்கு அபாயகரமானதாகவே இருக்கும்.

01. சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ

ரஷ்யாவை சேர்ந்த சுகோய் நிறுவனத்திடமிருந்து தயாரிப்பு உரிமம் பெற்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்த சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானங்களை அசெம்பிள் செய்தது. எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்குவது மட்டுமின்றி, எதிரி நாடுகளின் வான் பகுதியை கட்டுப்பாட்டில் எடுக்கும் ஏர் சுப்பீரியாரிட்டி ரகத்தை போர் விமானம் இது.

2002ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது 220 சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் உள்ளன. அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் இந்த போர் விமானம் சிறப்பாக செயல்படும். 2018-19ம் ஆண்டு காலத்தில் மேலும் 272 சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானங்கள் டெலிவிரி பெறுவதற்கான ஆர்டரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவை மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும். ஒப்பிட முடியாத அளவு திறன் மிக்கவையாக சொல்லப்படுகின்றன.

டைட்டானியம் மற்றும் உயர்தர அலுமினிய கலவையிலான உடல்கூடு கொண்டது. 38.8 டன் எடை கொண்ட இந்த விமானத்தில் இரண்டு ஏஎல்-31எஃப்பி டர்போபேன் எஞ்சின்கள் உள்ளன. அதிகபட்சமாக 2,100 கிமீ வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,000 கிமீ தூரம் வரை பறக்கும். ஒரு வினாடிக்கு 230 மீட்டர் உயரே எழும்பும் திறன் படைத்தது. இதன் விசேஷ வடிவமைப்பு காரணமாக, எதிரிகளின் ஏவுகணை தாக்குதல்களில் கூட எளிதாக தப்பும் திறன் கொண்டது.

இந்த விமானத்தில் 8 டன் வரை ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்துச் செல்ல முடியும். வானில் பறக்கும்போதே வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் நடுத்தர தூர ஏவுகணைகள், தரை இலக்குகளை தாக்கி அழிப்பதற்கான ஏவுகணைகள், வெடிகுண்டுகள் என இலக்குகளை துவம்சம் செய்யும் அம்சங்களை கொண்டிருக்கிறது. மேலும், ஒரே நேரத்தில் 4 இலக்குகளை தாக்கும் வசதியும், 11 இலக்குகளை கண்டறியும் வசதியும் உண்டு. பிரம்மோஸ், நிர்பய் போன்ற அதிபயங்கர ஏவுகணைகளையும் இந்த விமானத்தில் பொருத்த முடியும். மொத்தத்தில், சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானங்கள் எதிரிகளுக்கு அபாயகரமானவன் என்றே கூறலாம்.

02. தேஜஸ் போர் விமானம்

இது உள்நாட்டில் தயாரான விமானம். சமீபத்தில்தான் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. ஒற்றை எஞ்சினுடன், இலகு ரக, பன்முக பயன்பாட்டு போர் விமான ரகத்தை சேர்ந்தது. ரஷ்ய தயாரிப்பான மிக் - 21 போர் விமானங்களுக்கு மாற்றாக இந்திய விமானப்படையில் சேர்ப்பதற்கான நோக்கத்துடன் இந்த விமானத்தை இந்திய தயாரித்துள்ளது. எச்ஏஎல் எச்எப்-24 மாருத் விமானத்திற்கு அடுத்ததாக, எச்ஏஎல் நிறுவனம் தயாரித்திருக்கும் இரண்டாவது போர் விமானம் இதுவாகும். தற்போது விமானப்படையிடம் பயிற்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக 9 தேஜஸ் விமானங்கள் உள்ளன. 119 தேஜஸ் போர் விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பழமையாகிவிட்ட மிக்-21 மற்றும் மிக்-27 ஆகிய போர் விமானங்களுக்கு மாற்றாக இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த இலகு ரக தேஜஸ் விமானத்தின் மிக முக்கிய அம்சம் என்ன தெரியுமா? மிக குறைவான தூரத்திலேயே மேல் எழும்பும் திறன் படைத்தது. இது டெல்டா விங் எனப்படும் இறக்கை வடிவமைப்பை பெற்றிருக்கிறது. அதாவது, வால் பகுதி தனியாக தெரியாத வகையில், இதன் இறக்கை அமைப்பு உள்ளது. இதனால், எதிரிகளின் ரேடார்களில் எளிதில் சிக்காது.

இரவு நேரங்களில் இலக்குகளை துல்லியமாக கண்டறிவதற்கான நைட்விஷன் வசதியுடன் கூடிய கண்ணாடி பொருத்தப்பட்ட காக்பிட் அமைப்பு பைலட்டிற்கு மிக உகந்த வசதியாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொலைதொடர்பு சாதனத்தை எதிரிகளால் துண்டிக்க முடியாது. எளிதாக தரையிறக்குவதற்கும், பறப்பதற்கும் இரண்டு விதமான நேவிகேஷன் தொழில்நுட்பம் இருக்கிறது. இதனால், பைலட்டுகள் மிக துல்லியமாக தரையிறக்க உதவியாக இருக்கும். பைலட்டின் ஹெல்மெட்டிலேயே ஹெட் அப் டிஸ்ப்ளே வசதியும் உள்ளது.

தேஜஸ் விமானத்தில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறவனத்தின் F404-GE-F2j3 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 2,458 கிலோ எரிபொருளை நிரப்ப முடியும். 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் பெட்ரோல் டேங்குகளையும் பொருத்துவதன் மூலமாக நீண்ட தூரம் பறக்கும் திறனை பெறுகிறது. அதிகபட்சமாக 13,200 டன் எடையை டேக் ஆப் செய்யும் திறன் கொண்டது. சாதாரணமாக 1,350 கிமீ வேகத்தில் செல்லும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,000 கிமீ தூரம் வரை பறக்கும்.

220 ரவுண்டுகள் சுடுவதற்கான 23மிமீ விட்டமுடைய துப்பாக்கி, வான் இலக்குகள் மற்றும் தரை இலக்குகளை தாக்குதவதற்கான ஏவுகணைகள், கப்பல்களை தாக்கும் திறன் படைத்த ஏவுகணைகளை இந்த விமானத்தில் பொருத்த முடியும். பல ரக வெடிகுண்டுகளையும் பொருத்துவதற்கான கட்டமைப்பு வசதி உள்ளது. கடைசியாக, நமது வான் எல்லைக்குள் புகும் எதிரி விமானங்களை மணிக்கு 2,5000 கிமீ வேகத்தில் பறந்து சென்று இடைமறிக்கும் வல்லமை கொண்டது.

03. மிகோயன் மிக்-29

சோவியத் யூனியான் தயாரிப்பு. இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானமும் ஏர் சுப்பீரியாரிட்டி ரகத்தை சேர்ந்தது. 1985ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த இந்த விமானத்தை ஒப்பிட முடியாத திறன் கொண்டதாக போர் விமானிகள் வர்ணிக்கின்றனர். இந்த விமானங்களை அவ்வப்போது இந்திய விமானப்படை மேம்படுத்தியுள்ளது. கார்கில் போரின்போது மிராஜ் 2000 போர் விமானங்களுக்கு துணையாக இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

மேலும், கார்கில் போரின்போது எல்லைக்கு மிக அருகில் வந்த இரண்டு பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானங்களை இந்திய விமானப்படையின் இரண்டு மிக் 29 விமானங்களில் ரேடார்கள் எதிரி இலக்காக கருதி மிசைல் லாக் செய்துவிட்டனவாம். அதாவது, எதிரிகளின் இலக்குகளை போர் விமானத்தில் இருக்கும் ரேடார் தானாகவே இலக்காக எடுத்துக் கொண்டு ஏவுகணைகளை ஏவுவதற்கு தயாராக இருக்கும். ஆனால், அப்போது போர் அறிவிக்கப்படாத நிலையில், அதனை பைலட்டுகள் இயக்கவில்லை. மேலும், கண்களுக்கு புலப்படாத பகுதியில் இருக்கும் இலக்குகளை கூட துல்லியமாக அடிக்கும். வானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியும் உள்ளது.

04. டஸ்ஸால்ட் மிராஜ் 2000

இது பிரான்ஸ் நாட்டு தயாரிப்பு. தற்போது ரஃபேல் போர் விமானத்தை தயாரித்த அதே டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த மிராஜ் 200 போர் விமானங்கள். 1985ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையிடம் மிராஜ் 2000 போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. மொத்தம் 59 மிராஜ் 2000 போர் விமானங்கள் வாங்கப்பட்டன. அதில், 50 மிராஜ் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இமயமலையின் ஊடாக செல்லும் எல்லைப்பகுதியை கட்டிக் காப்பதில் இந்த போர் விமானங்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. 2040ம் ஆண்டு வரை பயன்படுத்தக்கூடிய வகையில், இந்த விமானங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.

கார்கில் போரில் மிராஜ் விமானங்களின் பங்கு போற்றத்தக்கதாக இருந்தது. இரண்டு மிராஜ் படைப்பிரிவுகளை சேர்ந்த மிராஜ் போர் விமானங்கள் 515 முறை பரந்து 55,000 கிலோ எடையுடைய வெடிகுண்டுகளை இலக்குகள் மீது வீசி திரும்பின. அதிக முறை பறக்கும் திறன் கொண்டதுதான் இதன் சிறப்பு. அத்துடன், பராமரிப்பு மிக எளிமையானதும், குறைவானதும் கூட. லேசர் வழிகாட்டுதல் முறையில் வெடிகுண்டுகளை வீசும் வசதியும், சாதாரண வெடிகுண்டுகளை வீசும் வசதியும் உள்ளது. மேக் 2.2 வேகத்தில் பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3,335 கிமீ தூரம் பறக்கும்.

இந்த விமானத்தில் 6.3 டன் எடையுடைய ஆயுதங்களை பொருத்த முடியும். 125 ரவுண்டுகள் சுடக்கூடிய துப்பாக்கி, 68மிமீ விட்டமுடைய சாதாரண வகை ராக்கெட்டுகளை பொருத்துவதற்கான வசதியும் உள்ளது. வானிலிருந்து வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள், தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளும் இந்த விமானத்தில் பொருத்த முடியும்.

05. மிகோயன் மிக் 21

இது சூப்பர்சானிக் வகை போர் விமானம். தரை தாக்குதல்களை நடத்துவதற்கான ஏதுவானது. உலக அளவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. 1964ம் ஆண்டில் இந்திய விமானப்படையின் முதல் சூப்பர்சானிக் போர் விமானமாக பயன்பாட்டுக்கு வந்தது. 1965ம் ஆண்டு நடந்த போரின்போது மிக் 21 போர் விமானங்களின் செயல்பாடுகள் குறித்து விமானிகள் திருப்தி தெரிவித்ததையடுத்து, அதிக அளவில் கொள்முதல் செய்ய இந்தியா முடிவு செய்தது.

அதுமுதல் ஆர்டர் செய்யப்பட்டு, தற்போது 1,200க்கும் அதிகமான மிக் 21 போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. ஆனால், தற்போது 252 மிக் 21 போர் விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், அதிக விபத்துக்களை சந்தித்த விமானமும் இதுதான். இதுவரை 170 பைலட்டுகளும், 40 பொது மக்களும் மிக் 21 ரக போர் விமான விபத்துக்கள் மூலமாக உயிரிழந்துள்ளனர்.

 

 

மணிக்கு 2,175 கிமீ வேகத்தல் பயணிக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 1,210 கிமீ தூரம் பறக்கும். இந்த விமானத்தில் 23மிமீ துப்பாக்கி மறறும் தரை தாக்குதல்களுக்கு ஏதுவான வெடிகுண்டுகள் பொருத்த முடியும். அதிகபட்சமாக 8,825 கிலோ எடையுடன் பறக்கும். இதற்கு மாற்றாகவே, தேஜஸ் போர் விமானங்கள் அதிக அளவி்ல சேர்க்கப்பட உள்ளன.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ராணுவம் #military
Story first published: Tuesday, September 27, 2016, 12:17 [IST]
English summary
Top 5 Most Dangerous Fighter Aircrafts Of Indian Airforce. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos