அமெரிக்க அதிபருக்கான புதிய விமானங்களுக்கான ஆர்டரை ரத்து செய்க: டிரம்ப் ஆவேசம்!

Written By:

அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்துவதற்காக விசேஷ பாதுகாப்பு வசதிகள் கொண்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் 'ஏர்ஃபோர்ஸ் ஒன்' என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றன.

ஏவுகணை தாக்குதல்கள், அணுகுண்டு தாக்குதல்களில் கூட இந்த விமானங்கள் பாதிக்கப்படாத வகையில் விசேஷ கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக கட்டமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

அமெரிக்க அதிபருக்கான ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானங்களை 1943ம் ஆண்டிலிருந்து அந்நாட்டை சேர்ந்த போயிங் நிறுவனம்தான் வடிவமைத்துக் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் போயிங் 747-200பி என்ற இரண்டு விமானங்கள் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

அவற்றை இயக்குவதற்கான செலவும், பராமரிப்பும் மிக அதிகமாக இருக்கிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்க அதிபருக்கு புதிய விமானங்களை வாங்குவதற்கு அந்நாட்டு புலனாய்வுத் துறை முடிவு செய்தது.

ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளக்கு அடுத்து, போயிங் நிறுவனத்திடமிருந்து இரண்டு போயிங் 747-8 ரக விமானங்களை வாங்க ஆர்டர் செய்தது. இந்த இரண்டு விமானங்களும் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், அமெரிக்க அதிபருக்காக வாங்கப்பட இருக்கும் புதிய போயிங் விமானங்கள் ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், புதிய போயிங் விமானங்களுக்கான பட்ஜெட் 4 பில்லியன் டாலர் என்று குறிப்பிட்டிருப்பதுடன், இது கைக்கு மீறிய பட்ஜெட் என்றும் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனால், அமெரிக்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் டொனால்டு டிரம்ப். அடுத்த மாதம் 20ந் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் அவர் தற்போது புதிய விமானங்களுக்கான ஆர்டரை ரத்து செய்யுமாறு கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

அமெரிக்காவின் பெரும் செல்வந்தரான டொனால்டு டிரம்ப் வசம் சொந்தமாக தனிநபர் பயன்பாட்டு விமானம் உள்ளது. அவரிடம் உள்ள போயிங் 757 விமானமானது தங்க முலாம் பூச்சு உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டிருப்பதுடன், பல சொகுசு வசதிகளும் உள்ளன. ஆனாலும், அமெரிக்க அதிபருக்காக வகுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் அந்த விமானத்தில் இருக்காது.

எனவே, டொனால்டு டிரம்ப் இவ்வாறு கூறி இருப்பது ஏற்புடையதாக இல்லை என்று பலரும் விமர்சனம் செய்துள்ளனர். மேலும், தற்போது அமெரிக்க அதிபருக்கான பயன்பாட்டில் உள்ள போயிங் 747-200பி விமானத்தையும் தொடர்ந்து பயன்படுத்துவதும் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபருக்கான புதிய போயிங் விமானங்களை உருவாக்கும் பணிகள் தற்போது ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளன. என்னென்ன வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால், கட்டமைப்புப் பணிகள் இன்னும் துவங்கப்பட வில்லை. நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. எனவே, இந்த ஆர்டரை ரத்து செய்தாலும் போயிங் நிறுவனத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கருதப்படுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Trump on Boeing's Air Force One contract: 'Cancel order!'
Please Wait while comments are loading...

Latest Photos