விண்வெளி சுற்றுலா கனவு நனவாகிறது... விண்கலம் வெற்றிகரமாக பறந்து தரையிறங்கியது!

விண்வெளி சுற்றுலாவுக்காக தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய விண்கலம் வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது.

Written By:

விண்வெளிக்கு பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதற்காக தயாரிக்கப்பட்டு வரும் வெர்ஜின் யுனிட்டி விண்கலம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

அடுத்தடுத்து, இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட இருப்பதாக வெர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சோதனை ஓட்டங்கள் முடிவடைந்து, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் பயணிகள் விண்வெளிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து

விண்வெளி சுற்றுலா திட்டத்துக்காக விண்கலம் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த வெர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விண்கலமானது முதல் சோதனை ஓட்டத்தின்போது நடுவானில் வெடித்து சிதறியது.

உயிரிழப்பு

இந்த விபத்தில் விண்கலத்தை இயக்கி விமானி பாரசூட் மூலமாக படுகாயங்களுடன் உயிர் தப்பினார். துணை விமானி விபத்தில் சிக்கி பலியானார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, விண்வெளி சுற்றுலா திட்டத்தில் சிறிய தடங்கல் ஏற்பட்டது.

திட்டத்தில் உறுதி

இருப்பினும், வெர்ஜின் நிறுவனம் தனது விண்வெளி சுற்றுலா திட்டத்தில் உறுதியாக இருந்தது. இதையடுத்து, தற்போது புதிய விண்கலத்தை தயார் செய்துள்ளது. ஸ்பேஸ்டூ என்று குறிப்பிடப்படும் இந்த விண்கலம் விஎஸ்எஸ் யுனிட்டி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

முதல் சோதனை

இந்த விண்கலம் முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. கலிஃபோர்னியாவில் உள்ள விமான தளத்திலிருந்து ஒயிட்நைட்டூ விமானம் மூலமாக விண்ணில் தூக்கிச் செல்லப்பட்டு குறிப்பிட்ட உயரத்தில் ஸ்பேஸ்டூ விண்கலம் தனியாக பிரிந்தது.

வெற்றி

இதனையடுத்து, பூமியை நோக்கி மிக பாதுகாப்பாக வந்து தரையிறங்கியது. சுமார் 10 நிமிடங்கள் சோதனை ஓட்டத்தின்போது இந்த விண்கலத்தின் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து சோதனை

இதுபோன்று தொடர்ந்து பல கட்ட சோதனைகளுக்கு இந்த விண்கலம் உட்படுத்தப்படும். பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் விண்வெளி சுற்றுலாவுக்காக இந்த ஸ்பேஸ்டூ விண்கலம் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சி

ஸ்பேஸ்ஒன் விமானம் விபத்தில் சிக்கியதால், இந்த சோதனை ஓட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டிருப்பதால், ஸ்பேஸ்டூ விண்கலம் பூமிக்கு திரும்பியது.

சுற்றுலா

விண்வெளி ஆரம்பமாகும் பகுதியாக கருதப்படும் பூமியிலிருந்து 100 கிமீ உயரத்திற்கு இந்த விண்கலம் பயணிகளுடன் செல்லும். அங்கிருந்து பூமியின் மொத்த வடிவத்தை பார்க்கும் வாய்ப்பை சுற்றுலா செல்லும் பயணிகள் பெற முடியும். அத்துடன், எடையற்ற உணர்வையும் அவர்கள் அனுபவிக்க முடியும்.

நீண்ட க்யூ

இந்த விண்கலத்தில் 6 பேர் பயணிக்க முடியும். மூன்று மணி நேர பயணத்தில் விண்வெளியை சென்றடையும். இந்த விண்வெளி சுற்றுலாவுக்காக ஏற்கனவே 600 பேர் முன்பணம் செலுத்தி முன்பதிவு காத்திருக்கின்றனர்.

பிரபலங்கள்

இந்த பட்டியலில் விண்வெளி வீரர்கள் ஏராளமானோர் பதிவு செய்துள்ளனர். அத்துடன், டைட்டானிக் புகழ் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ மற்றும் நடிகர் அஸ்டன் கட்ச்சர் உள்ளிட்ட பல பிரபலங்களும் உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு விபத்துக்கு பின்னர் பலர் முன்பதிவை ரத்து செய்தனர்.

எதிர்பார்ப்பு

ஆனால், சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்து திருப்தி ஏற்பட்டால் மட்டுமே விண்வெளி சுற்றுலா திட்டம் துவங்கப்படும் என்று வெர்ஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி சோதனைகள் நிறைவடைந்தால், அடுத்த ஆண்டு விண்வெளி சுற்றுலா துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Virgin Galactic's new spaceship makes first glide flight.
Please Wait while comments are loading...

Latest Photos