விமானத்தில் எந்த இடத்தில் அமர்ந்தால் உயிர் தப்புவதற்கு வாய்ப்பு அதிகம்!

Written By:

விமானப் பயணம் எந்தளவுக்கு விரைவாகவும், சொகுசாகவும் அமைகிறதோ அந்தளவுக்கு ஆபத்துக்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. ஏனெனில், பிற போக்குவரத்து சாதனங்களைவிட விபத்தின்போது உயிர் தப்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானதாகவே விமான போக்குவரத்து அமைகிறது.

இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கெயித் ஹாலோவே கூறுகையில்," ஒவ்வொரு விமான விபத்தும் ஒவ்வொரு சூழல்களிலும், நில அமைப்புகளிலும் நடைபெறுகிறது. எனவே, எந்த இடத்தில் அமர்ந்தால் உயிர் தப்பும் வாய்ப்பு அதிகம் என்று நாம் கணித்து கூறுவது கடினம்.

அதேநேரத்தில், அவசர சமயத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு முறைகளை பயணிகள் பின்பற்றுவதால் உயிர் தப்பும் வாய்ப்பு அதிகரிக்கும். எனினும், வாகனங்களில் செல்வது, பைக் ஓட்டுவது, படகில் செல்வது, நடந்து செல்வதை விட விமான போக்குவரத்து பாதுகாப்பானதாகவே கூற முடியும் என்று அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.

எனினும், இதுவரை நடந்த விபத்துக்களின் அடிப்படையில் பல ஆய்வுகளை முன்னணி பத்திரிக்கைகள் நடத்தியிருக்கின்றன. அதில், விமானத்தின் குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்திருக்கும் பயணிகள் உயிர் தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்வுகள் முடிவுகளாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 1970ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை விபத்தில் சிக்கிய வர்த்தக விமானங்களின் விபத்து விசாரணை முடிவுகளை பாப்புலர் மெக்கானிக்ஸ் தளம் ஆய்வு செய்தது. அதில், விமானத்தின் பின்பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது.

அதாவது, பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்கள் 69 சதவீதம் அளவுக்கு உயிர் தப்புவதற்கான வாய்ப்பையும், முன்பக்கத்தில் இருப்பவர்கள் 49 சதவீதம் உயிர் தப்புவதற்கான வாய்ப்பையும் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, அமெரிக்க விமான போக்குவரத்து ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய ஆய்வுகளிலும் இதே காரணங்கள் இருப்பது தெரிய வந்தது. அதாவது, விமானம் விழுந்து நொறுங்கினாலும் பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்கள் தப்பும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில், கார்களின் பாதுகாப்பு தரத்தை கிராஷ் டெஸ்ட் செய்து சோதனை செய்வது போலவே, 2012ம் ஆண்டில் விமானம் ஒன்றை உண்மையாகவே தரையில் மோதி ஆய்வு செய்யப்பட்டது. விமான பொறியாளர்கள், பைலட்டுகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுக்காக போயிங் 727 விமானம் ஒன்று பயன்படுத்தப்பட்டது. இந்த சோதனை முழுவதையும் மெக்சிகோ நாட்டு அரசின் உயர் அதிகாரிகள் குழு மேற்பார்வையில் நடந்தது.

 

அந்த விமானத்தை கேப்டன் ஜிம் பாப் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பைலட்டாக இருந்த முன்னாள் அமெரிக்க கடற்படை விமான பைலட் சிப் சான்லே ஆகிய இருவரும் இயக்கினர். பல இருக்கைகளில் மனித பொம்மைகளும், பொறியாளர் குழுவினரும் அந்த விமானத்தில் பயணித்தனர்.

விமானம் மெக்சிகோ நாட்டின் பாஜா கலிஃபோர்னியா பகுதியில் உள்ள சொனரன் பாலைவனப் பகுதிக்கு செலுத்தப்பட்டு, அங்கிருந்து மோதலுக்கு தயாராக விமானத்தின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. அபாயகரமான கட்டத்தை தொட்டதும், விமானத்தில் இருந்த பொறியாளர் குழுவினர் பாரசூட் மூலமாக விமானத்தில் இருந்த திறப்பு வழியாக வெளியேறினர்.

விமானம் தரையில் மோதுவதற்கு 4 நிமிடங்களுக்கு முன்னதாக கேப்டன் ஜிம் பாப் பாரசூட் மூலமாக வெளியேறினார். இந்த விமானத்தை மிக நெருக்கமாக பின்தொடர்ந்து வந்த மற்றொரு விமானத்தின் மூலமாக, அடுத்த சில நிமிடங்களுக்கு ரிமோட் கன்ட்ரோல் மூலமாக விமானம் தரையில் மோத செய்யப்பட்டது.

அப்போது, விமானமானது மணிக்கு 230 கிமீ வேகத்தில் தரையை தொட்டு பயங்கரமாக மோதியது. இதில், விமானத்தின் மூக்குப் பகுதி உடல்கூடிலிருந்து தனியாக கழன்று நொறுங்கியது. விமானத்தின் உடல்கூடுயும் கடுமையாக சேதமடைந்தது.

விமானத்தில் இருந்த சென்சார்கள், கேமரா உதவியுடன் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில், விமானத்தின் முன்பகுதியில் இருந்த மனித பொம்மைகள் கடும் தாக்கத்தை சந்தித்திருந்தன. அதேநேரத்தில், பின்புறத்தில் இருந்த மனித பொம்மைகள் சேதமடைந்தாலும், அது பெரிய அளவில் இல்லை.

இதன்மூலமாக, பின்புறத்திலும், அவசர கால வழி அருகிலும் இருக்கும் பயணிகள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்ற முடிவுக்கு வந்தனர். இறக்கைகளுக்கு நடுவில் இருக்கும் உடல்கூடு பகுதியில் அமர்ந்திருப்பவர்கள் படுகாயங்களுடன் உயிர் பிழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில், பின்புறத்தில் இருந்த மனித பொம்மைகள் அதிக பாதிப்பு இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. எனவே, பின்புறத்தில் அமர்ந்திருக்கும் பயணிகள் சிறிய காயங்களுடன் இதுபோன்ற விபத்துக்களில் இருந்து உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்தனர்.

விமானத்தின் பின்பக்கம் முதலில் தரையில் மோதினால் பின்பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள்தான் அதிக பாதிப்பு அடைவர் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, விமான விபத்துக்களின் சூழலை பொறுத்து இது மாறுபடலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Which is the safest Place on an aircraft? Here is the answer.
Please Wait while comments are loading...

Latest Photos