சென்னை நகரம் ஆசியாவின் ‘டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படுவதன் பின்னணி இது தான்..!

Written By:

இந்தியாவிலேயே ஆட்டோமொபைல் துறையின் முன்னோடி நகரமாக பார்க்கப்படுவது நம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை தான்.

நம் தலைநகர் சென்னையை ஆசியாவின் ‘டெட்ராய்ட்' என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர் உலக ஆட்டோமொபைல் துறையினர்.

 • ஆசியாவின் டெட்ராய்ட் என்று சென்னை அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன? 
 • டெட்ராய்ட் என்றால் என்ன அர்த்தம்? 
 • அப்படி என்ன தான் இருக்கிறது சென்னையில்?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் நாம் இந்த தொகுப்பில் விடை காண இருக்கிறோம்.

இதன் மூலம் உலகில் நம் சென்னைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்றும் உலகின் பிற நகரங்களுக்கு சென்னை எவ்வாறு போட்டியளித்து வருகிறது என்பதும் வியப்பை ஏற்படுத்தலாம்.

டெட்ராய்ட் என்றால் என்ன?

வட அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள சிறிய நகரமே டெட்ராய்ட் ஆகும். அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் தலைநகரமாகவும் இது விளங்குகிறது.

ஜூலை 24, 1701ஆம் ஆண்டு ஃபிரஞ்சு பயணி ஒருவரால் இந்நகரம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. சுமார் 50 லட்சம் மக்களை கொண்டது இந்நகரம்.

டெட்ராய்ட் என்ற நதிக்கரையில் அமைந்துள்ளதால் இந்நகருக்கு இந்த பெயர் வந்துள்ளது. இது கனடா நாட்டிற்கு அருகாமையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி காரணமாக டெட்ராய்ட் நகரம் அமெரிக்காவின் தொழில்துறையின் முக்கிய நகரமாக உருவெடுத்தது.

1903ஆம் ஆண்டில் ஹென்ரி ஃபோர்டு என்பவரால் துவங்கப்பட்ட ஃபோர்டு கார் நிறுவனமே இந்நகரை ஆட்டோமொபைல் துறையின் உலக மையமாக மாற்றிய பெருமையை சேரும்.

குறைந்த செலவில் கிடைத்த தொழிலாளர்கள், வான் வழியாகவும், கடல் வழியாகவும் உள்ள ஏற்றுமதி/ இறக்குமதி வசதி, ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி.

என ஒட்டுமொத்தமாக இத்துறைக்கு உகந்த சூழல் நிலவியதால் வெகு விரைவிலேயே இந்நகரம் அமெரிக்காவின் ஆட்டோமொபைல் தலைநகரமாக உருவெடுத்தது.

உலகின் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தொழில்சாலைகளும் டெட்ராய்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது டெட்ராய்ட் நகரம் அமெரிக்கா மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகின் ஆட்டோமொபைல் தலைநகரமாகவும் விளங்குகிறது.

இவ்வளவு புகழ் வாய்ந்த டெட்ராய்ட் நகருடன் சென்னையை ஒப்பிட்டு கூறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

டெட்ராய்ட் போன்று சென்னையிலும் அதிக எண்ணிக்கையிலான ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது அதனால் இப்படி அழைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது, ஆனால் அது மட்டுமே அதற்கான காரணம் அல்ல.

ஆசியாவின் டெட்ராய்ட் என்ற பெயரை ஒரே இரவில் சென்னை நகரம் அடைந்துவிடவில்லை, அது கடந்து வந்தது நீண்ட நெடிய பாதை.

ஆட்டோமொபைல் துறையில் டெட்ராய்ட் நகரின் வளர்ச்சியும், சென்னை நகரம் அடைந்துள்ள வளர்ச்சியும் ஒரே போன்று அமைந்துள்ளது.

19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் டெட்ராய்ட் நகரம் எவ்வாறு ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி காணத் துவங்கியதோ அதே போன்று 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்துறையில் சென்னையின் வளர்ச்சி அமைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு, அசோக் லேலண்ட், டாஃபே டிராக்டர்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ் போன்ற உள்ளூர் நிறுவனங்கள் ஏற்கெனவே சென்னையில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.

இருந்த போதிலும் ஆட்டோமொபைல் துறையை பொருத்தமட்டில் சென்னை நகரின் உண்மையான வளர்ச்சி துவங்கியது என்னவோ 1995ஆம் ஆண்டில் தான்.

இதற்கு அடித்தளமிட்டவர் அப்போதைய தமிழக முதல்வரும் காலம்சென்ற தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் என்றால் அது மிகையாகாது.

1991ல் முதல்முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் 1995ஆம் ஆண்டில் சென்னையில் ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை அமைக்கப்பட்டது.

ஆட்டோமொபைல் துறையின் உலக அடையாளமாக டெட்ராய்ட் நகரம் உருவாக காரணமாக இருந்த ஃபோர்டு நிறுவனம் தான் சென்னை நகரும் அதே போன்று பெயரெடுக்க அடித்தளமிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மகராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் அளித்த கடும் போட்டியை சமாளித்து நாட்டின் முதல் ஃபோர்டு தொழிற்சாலையை சென்னைக்கு பெற்றுத் தந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னைக்கு அருகாமையில் மறைமலைநகரில் 1995ல் அமைக்கப்பட்டது.

இதன் பிறகு தான் சென்னையை நோக்கி உலகின் முன்னோடி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் பலவும் படையெடுக்கத் தொடங்கின.

ஃபோர்டு நிறுவனத்தை தொடர்ந்து ஹூண்டாய் மோட்டார்ஸ், பிஎம்டபிள்யூ, டேய்ம்லர், ரெனால்ட், நிசான், மிட்சுபிஷி மோட்டார்ஸ் போன்ற கார் நிறுவனங்கள் சென்னையில் தன் தொழிற்சாலையை அமைத்தன.

கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது இருசக்கர வாகனங்கள், வணிக வாகனங்கள், டிராக்டர்கள், பஸ்கள், ஜேசிபி தயாரிக்கும் கனரக வாகன தயாரிப்பு நிறுவனங்களும் சென்னையில் குவிந்துள்ளன.

ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் சென்னையில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.

இதில் உள்ளூர் நிறுவனங்களான வேப்கோ டிவிஎஸ், வீல்ஸ் இந்தியா முதல் கேடர்பில்லர், அவலான் டெக்னாலஜீஸ், டகடா முதலான சர்வதேச நிறுவனங்களும் அடக்கம்.

இது மட்டுமல்லாது அப்போலோ டயர்ஸ், பிரிஜ்ஸ்டோன், டன்லப், ஜேகே டயர், மிஷெலின், எம்ஆர்எஃப் போன்ற டயர் தயாரிப்பு நிறுவனங்களும் சென்னையில் கால்பதித்துள்ளன.

சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள செங்கல்பட்டு, ஓரகடம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்பத்தூர், திருவள்ளூர், என்னூர் போன்ற பகுதிகளில் இந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அமைத்துள்ளன.

சென்னையில் அமைந்துள்ள முக்கியமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிலவற்றை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

 • ஃபோர்டு
 • பிஎம்டபிள்யூ
 • அசோக் லேலண்ட்
 • டேய்ம்லர்
 • ஃபோர்ஸ் மோட்டார்ஸ்
 • ஹூண்டாய்

 • மிட்சுபிஷி
 • நிசான்
 • ரெனால்ட்
 • ராயல் என்ஃபீல்டு
 • யமஹா
 • ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்
 • டாஃபே டிராக்டர்ஸ்
 • ரைட்பஸ்

இந்திய ஆட்டோமொபைல் துறையின் சந்தையில் சென்னை மட்டும் 30% பங்களிப்பை அளிக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆண்டிற்கு 1.4 மில்லியன் அதாவது 14 லட்சம் கார்களை தயாரிக்கும் வலலமையை சென்னை பெற்றுள்ளது. ஒரு நிமிடத்திற்கு சராசரியாக இங்கு 3 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

உலகில் உள்ள முக்கிய 10 ஆட்டோமொபைல் உற்பத்தி மையங்களுள் ஒன்றாக சென்னை நகரம் தற்போது திகழ்ந்து வருகிறது.

உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது தொழிற்சாலைகளை அமைக்க சென்னையை தேர்ந்தெடுத்ததற்கு சில முக்கிய காரணங்கள் இல்லாமல் இல்லை.

அதில் முதலாவது காரணம் சீனாவை அடுத்து உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையை இந்தியா பெற்றுள்ளது என்பதே.

தமிழ்நாடு அரசு ஆட்டோமொபல் துறைக்கு அளித்து வரும் இணக்கமான சாதக முதலீட்டு உதவிகள் மற்றொரு முக்கிய காரணமாகவும் உள்ளது.

இதுமட்டுமல்லாமல் இங்கு குறைந்த சம்பளத்திற்கு அதிக திறன் வாய்ந்த தொழிலாலர்கள் கிடைப்பதும் சாதக அம்சமாக பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி சென்னையில் ஏற்றுமதி வசதி வாய்ப்புகளும் மிகவும் பிரகாசமாகவே இருக்கிறது. சென்னை துறைமுகம் அதிகளவிலான வாகனங்களை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாக துறையின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருடா வருடம் இந்த வளர்ச்சி விகிதம் 8% அளவுக்கு இருக்கிறது.

ஆட்டோமொபைல் துறையை கணக்கில் கொண்டால் இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி விகிதம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளைக் காட்டிலும் அதிகம் என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

 

 

பிம்டபிள்யூ, நிசான், டேய்ம்லர், யமஹா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் சென்னையில் தொழிற்சாலை அமைத்ததில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் பங்கு அளப்பரியது என்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும்.

இதன் காரணமாகவே உலக அளவில் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய மையமாக விளங்கும் டெட்ராய்ட் நகருடன் சென்னை ஒப்பிடப்பட்டு புகழப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறையின் உலகில் முக்கிய அடையாளமாக உருவெடுத்து இந்தியாவின் அந்தஸ்தை சர்வதேச அரங்கில் சென்னை நகரம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சென்னை நகரைச் சுற்றிலும் 15க்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளும், 6 டயர் தயாரிப்பு நிறுவனங்களும். 

40க்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களும் அமைந்துள்ளது வியப்புக்குரியதாகும்.

English summary
Read in Tamil about Why Chennai city called as asia's detroit?. know about the facts behind asia's detroit in tamil.
Please Wait while comments are loading...

Latest Photos