உலகின் மூன்று பிரம்மாண்ட உல்லாச கப்பல்கள் கைகோர்த்து பயணித்த அபூர்வ காட்சி!

Written By:

உலகின் அதிசிறந்த பொழுதுபோக்கு மற்றும் உல்லாச வசதிகளை கொண்ட சொகுசு கப்பல்கள் பல்வேறு நாடுகளில் இயக்கப்படுகின்றன. அந்த கப்பல்களில் பயணிப்பது பலருக்கும் வாழ்க்கையின் கனவாக உள்ளது.

இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ஹார்மோனி ஆஃப் தி சீஸ் உல்லாச கப்பல் அண்மையில் பயணிகள் சேவைக்கு வந்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் கரிபீயன் இன்டர்நேஷனல் கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த கப்பல் முழுமையான பயணிகள் சேவைக்கு தயாராக புளோரிடா துறைமுகத்துக்கு வந்தது.

இந்த நிலையில், ஏற்கனவே சேவையில் இருக்கும் உலகின் மிகப் பெரிய உல்லாச கப்பல்களான ஆலூர் ஆஃப் தி சீஸ் மற்றும் ஓசீஸ் ஆஃப் சீஸ் ஆகிய இரு கப்பல்களுடன், இந்த புதிய ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பல் முதல்முறையாக இணைந்து பயணித்த அபூர்வ காட்சிகள் குறித்த படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

மிக அரிதான இந்த நிகழ்வு குறித்த படங்கள் வைரலாக பரவி வருகின்றன. இந்த மூன்று பிரம்மாண்ட கப்பல்களும், ராயல் கரிபீயன் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமானவை. பிரம்மாண்டம் என்பதை விவரிக்கும் தகவல்களுடன் செய்தி தொடர்கிறது.

மூன்று கப்பல்களுமே வடிவத்திலும், வசதிகளிலும் மிகச் சிறிய வித்தியாசத்தில் வேறுபடுகின்றன. அவ்வளவே. இதில், ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பல் 1,188 அடி நீளம் கொண்டது. அதாவது, ஆலூர் ஆஃப் தி சீஸ் மற்றும் ஓசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பல்களைவிட ஒரு அடி மட்டும் கூடுதல் நீளம் கொண்டது.

 

 

இந்த கப்பல்கள் கிட்டத்தட்ட 2.25 லட்சம் டன் எடை கொண்டவை. ஒவ்வொரு கப்பலிலும் 2,747 பயணிகளுக்கான அறைகள் உள்ளன. ஒவ்வொரு கப்பலிலும் 6,700 முதல் 7,148 பயணிகள் வரை ஒரே நேரத்தில் பயணிக்கும் வசதி கொண்டவை.

இந்த கப்பல்களை மிதக்கும் சொர்க்கமாக கூறுவதற்கு பல காரணங்கள். சாகச விளையாட்டுகள், நீர் விளையாட்டுகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்கம், கலையரங்கம், உடற்பயிற்சி கூடம், உலகின் சிறந்த உணவு வகைகளை அளிக்கும் வசதிகள் என இந்த கப்பல்களில் இல்லாத வசதி இல்லை.

உள்ளே நுழைந்துவிட்டால் அது ஒரு தனித் தீவுக்குள் இருக்கும் பரவச உலகம் போன்றதொரு உணர்வை தரும். இந்த கப்பல்களில் இரவு நேரங்களில் நடைபெறும் நடன மற்றும் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாக இருக்கிறது.

ஹார்மோனி ஆஃப் தி சீஸ் கப்பலில் மிக உயரமான நீர் சறுக்கு விளையாட்டு போட்டிக்கான குழாய் அமைப்பு உள்ளது. இதுபோன்று மூன்று கப்பல்களிலும் நீர் சறுக்கு விளையாட்டுகள், சிறிய பேட்மின்டன் மைதானம், நீச்சல் குளங்கள் என நிலத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் உள்ளதைவிட அதிக வசதிகள் உள்ளன.

இந்த கப்பல்களில் மரங்கள், செடிகொடிகளுடன் கூடிய மிகப்பெரிய சென்ட்ரல் பூங்காவும் உண்டு. இந்த கப்பல்களில் பயணிப்பதற்கான கட்டணம் மிக அதிகம். ஆனால், பாதுகாப்பு கருதி, வயதான காலத்தில் இந்த கப்பல்களிலேயே நிரந்தர பயணியாக குடியேறிய பெரும் பணக்காரர்கள் பலரும் உண்டு.

ஓசீஸ் ஆஃப் தி சீஸ் கப்பல் 2009ம் ஆண்டும், ஆலூர் ஆஃப் தி சீஸ் கப்பல் 2010ம் ஆண்டும் சேவைக்கு வந்தன. ஹார்மோனி ஆஃப் தி சீஸ் இந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அடுத்ததாக, இதே வகையில் மற்றொரு பிரம்மாண்ட கப்பல், பிரான்ஸ் நாட்டிலுள்ள எஸ்டிஎக்ஸ் செயிண்ட் நசையர் கப்பல் கட்டும் தளத்தில் தயாராகி வருகிறது. 2018ம் ஆண்டில் இந்த கப்பல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
World's 3 Largest cruise ships sail together for the first time.
Please Wait while comments are loading...

Latest Photos